ராஜம் கிருஷ்ணன் ஒரு வாழும் சகாப்தம்!

எழுத்தாளர்கள் காலம் கடந்து தாங்கள் எழுதிய எழுத்துகளில் தங்கள் மறைவுக்குப் பிறகும்  வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
ராஜம் கிருஷ்ணன் ஒரு வாழும் சகாப்தம்!

எழுத்தாளர்கள் காலம் கடந்து தாங்கள் எழுதிய எழுத்துகளில் தங்கள் மறைவுக்குப் பிறகும்  வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் இவரோ தனது எழுத்துகளில் மட்டும் அல்ல உடலாலும் இச்சமூகத்தில் என்றும் சேவை செய்து கொண்டிருப்பவர், சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பவர். சமூகத்திற்கான பார்வையை, புதுமையை எழுத்துகளில் மட்டும் வைக்காமல் தன் வாழ்க்கையிலேயே அதனை வாழ்ந்து காட்டியவர் ராஜம் கிருஷ்ணன்.

"சாகித்ய அகாதெமி விருது' பெற்றவர் என்பது மட்டும் அவரது அடையாளம் அல்ல. செயற்பாட்டாளர் என்று இவரை சொல்லவேண்டும். இவரின் எந்த ஒரு படைப்பும் குளிரூட்டப்பட்ட தனியறையில் அமர்ந்து எழுதியதல்ல. எந்த மக்களின் வாழ்வைப் பதிவு செய்ய விரும்பினாரோ அந்த மக்களோடு வாழ்ந்து அவர்களின் வாழ்க்கைப் பாடுகளை உடனிருந்து கண்டு அனுபவித்து எழுதியிருக்கிறார். இவரின் எழுத்துகள் மக்கள் வாழ்வின் பிரதிபலிப்புகள்.

நெல்லை மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டிருந்த போதிலும் இவர் பிறந்தது முசிறி எனும் சிற்றூரில். 1925- இல் பிறந்த ராஜம் கிருஷ்ணனுக்கு உயர்கல்வி கிடைக்கப் பெறவில்லை. அந்தக் காலத்தின் வழக்கப்படி சிறுவயதிலேயே திருமணம் நடைபெற்றது. கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தார். கூட்டுக் குடும்பத்தில் ஓய்ந்து ஒடுங்கி விடவில்லை. தன் விருப்பங்களை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்ற தெளிவு இவருக்கு இருந்தது. கூட்டுக் குடும்பத்தில் அடுக்களை வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து கிடைத்த காகிதத்தில் எல்லாம் எழுதி இருப்பதாக அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். 

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து தன் கணவரின் பணிக்காகப் பல்வேறு ஊர்களுக்கும் சென்று அங்குள்ள சூழலை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த பெண். ஒரு குடும்பத்தின் அத்தனை பண்பாட்டு நெருக்கடிகளையும் ஏற்று வாழ்ந்தார். அதேநேரத்தில் தன் அடையாளத்தை விருப்பத்தை விட்டுக் கொடுக்காமல் தடம் பதித்த படைப்பாளியாகவும் மிளிர்ந்தார் என்பதில்தான் ராஜம்கிருஷ்ணன் எனும் ஆளுமை உயர்ந்து நிற்கிறது.

"கண்டதைப் படிக்கப் பண்டிதன் ஆவான்' என்ற வசனம் இவரது வாழ்வில் உண்மையாயிற்று. தேடித்தேடிப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் இவருக்கு சிறுவயதிலேயே வாய்த்திருந்தது. திருமணம் ஆகி விட்டபோதிலும் தன் முயற்சியினால் மொழி அறிவைப் பெற்றார். ஆங்கிலம் மட்டுமல்லாது ரஷ்ய மொழியும் இவருக்குத் தெரிந்திருந்தது. இவரது கணவர் அரசு ஊழியராக இருந்ததால் பல ஊர்களுக்கும் சென்று வாழும் படியான சூழல் ஏற்பட்ட சந்தர்ப்பங்களை எல்லாம் திறம்படப் பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். 

ராஜம் கிருஷ்ணன் எழுதுவதற்கு வந்த காலத்தில் பெண் எழுத்தாளர்கள் பெரும்பாலும் குடும்பக் கதைகளை எழுதும் தன்மை பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால் அதை உடைத்தெறிந்து சமூக அரசியல் பார்வைகளையும் ராஜம் கிருஷ்ணன் தன் எழுத்துகளில் கொண்டு வந்தார். சமூகத்தில் புரையோடிப் போன வழக்கங்கள், அவலங்கள் எல்லாவற்றையும் தமிழ் எழுத்துகளில் எழுதி தீர்த்துவிட வேண்டும் என்ற வேகம் அவரது எல்லா படைப்புகளிலும் பிரதிபலித்தது. ராஜம் கிருஷ்ணனுக்கு என ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டம் இதனாலேயே ஏற்பட்டது.

அறிவார்ந்த சிந்தனையும் செயல்பாடும் இவரைத் தொடர்ந்து எழுத செய்தன. 40 புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், குழந்தை இலக்கியம், கவிதைகள், குறுநாவல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்று இடையறாது எழுத்துப் பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். "அன்னை பூமி', "மாஸ்கோ' போன்ற பயண நூல்களையும் எழுதியிருக்கிறார். பல வானொலி நாடகங்களையும் படைத்தவர். "இலக்கிய சிந்தனை பரிசு' இதற்கெனவே அவருக்கு வழங்கப்பட்டது.

பெண்ணின் பார்வையில் இருந்து இந்த உலகம் என்பது ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளில் அடிப்படையாக அமைந்திருந்தது. இந்தச் சமூகத்தில் பெண்ணின் வாழ்க்கைப்பாடுகள் எத்தகைய அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுவதாகவே பல படைப்புகளும் அமைந்திருந்தன. பெண்ணியக் கருத்துகளைத் தமிழ் சமூகச் சூழலுக்கு ஏற்ப ஓங்கி ஒலித்தன இவரது எழுத்துகள். 

"காலந்தோறும் பெண்' என்ற இவரது கட்டுரைத்தொகுப்பு ஒரு வரலாற்று ஆவணம். பெண் எப்படி இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டாள் என்பதை தேடிச் சென்று கண்டடையும் பயணமாக இருந்தது. எந்த இடத்தில் இருந்தாலும் பெண்ணின் ஆற்றல் வெளிப்பட்டுத் தீரும் எனும் நம்பிக்கையும் அவருக்கு அழுத்தமாக இருந்தது. அதனால்தான் காலம்தோறும் பெண் எழுதிய அதே எழுத்தாளர் "காலந்தோறும் பெண்மை' "யாதுமாகி நின்றாய்' என்று எத்தனையோ துறைகளில் தனி முத்திரை பதித்து சாதனையாளர்களாகத் தங்களை முன்னிறுத்திய பெண்களைப் பற்றிப் பதிவு செய்யத் தூண்டியது. பெண்ணுரிமையை பெண்ணின் தேவையை உரக்கச் சொன்ன முதல் பெண் எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன். 
ஒரு புதினத்தை எழுதுவதற்கு அவர் எந்தச் சமூகப் பிரச்னையை எடுத்துக் கொள்கிறாரோ அந்தச் சமூகத்தில் நேரடியாகச் சென்று அவர்களோடு சில காலம் வாழ்ந்து அங்குள்ள கலாசார பண்பாட்டு சமூகவியல் கூறுகளை ஆய்வு செய்து முழுமையாக அந்த மக்களின் மொழியிலேயே தன் எழுத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்.

மலைவாழ் படுகர்களின் வாழ்க்கை பற்றி எழுதப்பட்ட நாவல் "குறிஞ்சித்தேன்'. அணைக்கட்டுகள் உருவாகும் பொழுது அங்குள்ள மக்களின் வாழ்க்கையிலும் தோன்றும் மாறுபாடுகள், தானியங்களைப் பயிரிட்டு வாழ்ந்த மலைவாழ் மக்கள் நவீன வாழ்க்கை முறை தந்த நெருக்கடிகள் காரணமாக எப்படி அவற்றில் இருந்து நகர்ந்து தேயிலை பயிரிட நேரிட்டது என்றும் அவர்களது பண்பாட்டில் வாழ்வியலில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் இவற்றையெல்லாம் நுட்பமான முறையில் வெளிப்படுத்தியது.

விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை சவால்களை "சேற்றில் மனிதர்கள்' என்ற இவரது படைப்பு நமக்கு எடுத்துச் சொல்லியது. "வேருக்கு நீர்' நாவல் சாகித்ய அகாடமி விருதை இவருக்குப் பெற்றுத் தந்ததோடு அடித்தட்டு விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் உழைப்பு முழுமையாக அவர்களுக்குப் பயன் தராமல் போகும் அவலத்தையும் உலகுக்குக் காட்டியது.

பெண்ணின் மன அழுத்தத்தை வெளிப்படுத்தும் "பெண் குரல்' நாவல் தமிழகத்தின் வாசிப்புப் பழக்கம் உள்ள அத்தனை பெண்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்றது என்று சொன்னால் மிகையில்லை. பெண்சிசுக்கொலை பற்றி முழுமையான ஒரு ஆவணமாக "மண்ணகத்துப் பூந்துளிகள்'  நாவல் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண் சிசுக் கொலைக்குக் காரணம் என்ன அதன் அடிநாதம் எங்கிருக்கிறது அதனைக் களைவதற்குத் தேவையான நடைமுறைகளும் வழிமுறைகளும் என்ன என்பதை ஆழமாக அலசியது இந்த நாவல்.

வாழ்க்கை வரலாற்று நூல்கள் "பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி', "பாதையில் பதிந்த அடிகள்', "டாக்டர் ரங்காச்சாரி' மூன்று தான் என்ற போதிலும் அவற்றின் தாக்கம் மிகப் பெரிது. பாரதியின் வாழ்க்கை வரலாறு ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் அமைந்திருந்த வித்தியாசமான நூல். டாக்டர் ரங்காச்சாரியைப் பற்றி எழுதும்பொழுது மருத்துவத்துறையில் இவருக்கு என்ன அனுபவம் உண்டு என்று விமர்சனங்கள் எழுந்தன. டாக்டர் ரங்காச்சாரியிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் பலரையும் சந்தித்தார். அவரது உறவினர்களோடு கலந்துரையாடினார். 

கம்யூனிச சித்தாந்தத்தில் ஈடுபாடுகொண்ட ராஜம்கிருஷ்ணன் மணலூர் மணியம்மாவின் வாழ்க்கை வரலாற்றை "பாதையில் பதிந்த அடிகள்' என்று எழுதினார். இதற்கென அவர் தகவல்கள் திரட்ட முற்பட்டபோது பெரும் சிரமங்களுக்கு ஆளானார். என்றாலும் மனம் தளராது பொறுமையாக இருந்து தகவல்களை சேகரித்துத் தான் நினைத்த காரியத்தில் வெற்றி கண்டார். இளம் வயதில் விதவையான மணியம்மா எப்படி மூடக் கட்டுகளை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டு பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார், ஆவேசமாக அடிமைத்தனத்தை எதிர்த்து போராடினார். சிலம்பம் பயின்று பெண் என்னும் தனி அடையாளத்தை விடுத்து வேட்டி சட்டையோடு வாழ்ந்தார் என்று விளக்கும். "பாதையில் பதிந்த அடிகள்' என்ற இந்த வரலாற்று நூல் மட்டும் இல்லாவிட்டால் மணலூர் மணியம்மையை தமிழ் கூறும் நல்லுலகம் அறியாமலே போயிருக்கக் கூடும். உழைப்பும் அறிவுக் கூர்மையும் விடாத முயற்சியும் அவரது சொத்து. அதுதான் பிற எழுத்தாளர்களிடம் இருந்து ராஜம் கிருஷ்ணனை தனித்துக் காட்டியது.

உப்பளத்தில் வாடும் மனிதர்களின் துன்பங்களை "கரிப்பு மணிகள்' காட்டியது. "அலைவாய்க் கரையில்' வெளிப்படுத்திய அறச் சீற்றத்தைத் தமிழகம் என்னாளும் மறக்காது. குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய படைப்பாக வெளிவந்த "கூட்டுக் குஞ்சுகள்' மனித மனதின் பேராசையை அதற்கு உயிர்கள் பலியாகும் அவலத்தை வெளிப்படுத்தின.

சம்பல் பள்ளத்தாக்கில் வாழ்ந்த கொள்ளையர்களை பற்றிய நாவல் "முள்ளும் மலர்ந்தது'. இதற்கென அவர் அந்தக் கொள்ளையர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அந்த அளவுக்கு உண்மையைப் பதிவு செய்ய வேண்டும் எனும் நேர்மை மனம் கொண்டவர்.

ஒரு பெண்ணாக அவர் சந்தித்த பிரச்னைகள் ஏராளம் என்றபோதும் அவர் ஒரு நாளும் தன் களப்பணியை நிறுத்தியதில்லை. சமுதாய அவலங்கள் முடிவுக்கு வர வேண்டும், அடித்தட்டு அப்பாவி மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற உத்வேகமும், மக்கள் வாழ்வில் வளம்பெற புரட்சி உருவாக வேண்டும் எனும் கனவும் அவரது எழுத்துகளில் இழையோடி நின்றன.
காந்திய சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டவர். எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். பலருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்தவர். தனக்கென எதையும் சேமித்து கொள்ளாமல் சமூகம் பற்றிய சிந்தனைகளிலேயே தன்னைக் கரைத்துக் கொண்டவர். தன் இறுதி நாட்களில் முதுமை வந்துற்ற போது முதியோர் இல்லத்தில் சில காலம் வாழ்ந்தார். பின்னர் உடல்நலக் குறைவு ஏற்பட ராமச்சந்திரா மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டார். அந்த வேளையில் அவர் தீர்மானமாக முடிவு ஒன்றை மேற்கொண்டார். தன் உடலை ராமச்சந்திரா மருத்துவமனைக்குத் தந்து விட முடிவு செய்து அதை செயல்படுத்தினார்.

"சாகித்ய அகாதெமி விருது', "திரு. வி. க விருது', "சாஸ்வதி விருது', "பாரதிய பாஷா பரிஷத் விருது' என்று பல விருதுகளை இவர் பெற்றிருந்தார். அவை எல்லாவற்றையும் விட மக்களின் குறிப்பாக பெண்களின் மனதில் இவருக்கு இருந்த உயர்ந்த ஸ்தானம் மதிப்பிட இயலாதது.

எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள் ஆனால் சிலர் தான் காலத்தைக் கடந்து தங்கள் இருப்பை நிலை நிறுத்துகிறார்கள். ஒரு தலைமுறைக்கு இன்னும் சொல்லப்போனால் ஒரு நூற்றாண்டுக்குப் பெண்ணின் தேவைகளை அவர்களின் வளர்ச்சிக்கான ராஜபாட்டையை தன் உழைப்பால் ஏற்படுத்தித் தந்தவர் ராஜம் கிருஷ்ணன். இச்சமூகம் நன்றியோடு நினைவு கூர வேண்டியவர்களுள் தலையாயவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com