அமில வீச்சுக்கு எதிராக அமெரிக்கா வரை குரல்

பெண்கள் அமில வீச்சால் பாதிக்கப்படுவதற்கு எதிராக அமெரிக்கா வரை சென்று குரல் எழுப்பியுள்ளார் உடுமலைபேட்டை ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ப.கற்பகவள்ளி .
அமில வீச்சுக்கு எதிராக அமெரிக்கா வரை குரல்


பெண்கள் அமில வீச்சால் பாதிக்கப்படுவதற்கு எதிராக அமெரிக்கா வரை சென்று குரல் எழுப்பியுள்ளார் உடுமலைபேட்டை ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ப.கற்பகவள்ளி .

""பள்ளியில் படிக்கும் போதே ராணுவத்தில் சேரும் எண்ணத்தில் என்.சி.சியில் சேர்ந்தேன். நான் கல்லூரியில் படிக்கும் போது பேராசிரியைகளைப் பார்த்து நானும் ஆசிரியராக வேண்டும் என்று முடிவு செய்தேன். கல்லூரியில் பேராசிரியர் ஆன பின்பு மாணவர்களுக்கு உளவியல் ரீதியாகத் தேவை என்ன என்பதை அறிந்து கற்றுக்கொடுத்தேன்.

உலக அளவில் 75 -க்கும் அதிகமான கட்டுரைகளைச் சமர்ப்பித்தேன். அப்படி சமர்ப்பிப்பதற்காக மாத இதழில் கட்டுரை ஒன்றை படித்தேன். அது அமில வீச்சால் பாதிக்கப்படும் பெண்கள் பற்றியது. அந்தக் கட்டுரைப் படித்தது முதல் மனம் நிலைகொள்ளாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏதேனும் உதவி செய்ய முடியுமா? என்று யோசித்தேன்.

பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சென்று சந்தித்தேன். அவர்கள் பாதிக்கப்பட்டது பற்றி முழுமையாகக் கேட்டு அறிந்தேன். இதற்காக இதுவரை தமிழ்நாடு தொடங்கி பெங்களூரு தில்லி, மும்பை, என இந்தியாவின் முக்கியமான நகரங்கள் அனைத்திற்கும் இரவு பகலாக அலைந்தேன். ஆறு மாதங்கள் அந்த பாதிப்பை என்னுள் வாங்கி அதனை ஓர் ஆய்வுக் கட்டுரையாக உருவாக்கினேன்.

அது "அகாதெமி ஆப் கிரிமினல் ஜஸ்டிஸ் சயின்ஸ்' என்ற அமைப்பால் தேர்வு செய்யப்பட்டது. அமெரிக்காவின் ஓர்லாண்டோ மாநிலத்தில் நடத்தப்பெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் கலந்து கொண்டு பெண்களின் மீதான அமில வீச்சு தொடர்பான கட்டுரையைச் சமர்ப்பித்தேன்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் பேசி முடிக்கப்பட வேண்டிய விஷயம் . அதையும் தாண்டிச் சென்றது. அரங்கமே அமைதி காத்தது. என்னுடைய உரை அனைவரையும் நெகிழ வைத்தது. அது என்னை அடுத்த கட்டமாக "தோல் தானம்' செய்வதை நோக்கி நகரக் காரணமாகியது.

அமில வீச்சுக்கட்டுரையின் முதல் பிரதி பிரக்ஞாவைப் பற்றி (இவர் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்) பெங்களுரில் தொடங்கியது. சுமார் நான்கு ஆண்டுகள் பெண்ணினத்தின் வலிகளை, அதன் கோர முகங்களை வரலாறாகப் பதிவு செய்தாலும் இன்னமும் அவர்களின் அடுத்தக் கட்ட நகர்வுக்காக தோல் தானம் செய்வதை ஊக்குவிப்பதுடன் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்னால் முடிந்த உதவிகளையும், செய்து வருகிறேன்'' என்றவரிடம் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்த அனுபவம் பற்றி கேட்ட போது சொன்னார்:

""நான் முதன் முதலில் சந்தித்தது பிரக்ஞா. பேராசிரியர் என்பதால் என்னை அவர் பார்க்க அனுமதித்தார். இவர் 2004-ஆம் ஆண்டு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர். அதுவும் திருமணம் ஆன 12-ஆவது நாளில் அவருக்கு இந்த விபரீத நிகழ்வு ஏற்பட்டது. தன்னுடைய காதலை ஏற்காத காரணத்திற்காக இளைஞர் ஒருவர், இவர் ரயில் பயணத்தில் தூங்கும் போது முகத்தில் ஆசிட் வீசியுள்ளார். செயற்கை கண் பொருத்தப்பட்ட நிலையில் பல்வேறு அறுவைச்சிகிச்சைக்குப் பின் தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.

ஆசிட் வீச்சிற்குப் பிறகு அவரது கணவர் குடும்பத்தின் ஒத்துழைப்பால் அதிலிருந்து மீண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் மேலோங்கி இருந்தது. "எனக்கு குழந்தை பிறந்த பிறகு அதனுடைய முகத்தைப் பார்த்த பிறகு தான் தற்கொலை எண்ணம் மாறியது. இன்று வரை என் முகத்தை நான் கண்ணாடியில் பார்ப்பதில்லை' என்று நான் சந்தித்த போது மிகவும் உருக்கமாகக் கூறினார்.

பிரக்ஞா தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலமாக இந்தியா முழுவதும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி வருகிறார். நானும் அவர் மூலம் தான் பாதிக்கப்பட்ட பிற பெண்களைச் சந்திக்க முடிந்தது. 2015-ஆம் ஆண்டு சாய்னா என்பவரைச் சந்தித்தேன். அவர் 2009-ஆம் ஆண்டு நடந்த ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர். ஆசிரியராக வேண்டும் என்று கல்லூரிக்குச் சென்றவரை ஒரு தலை காதல் என்ற பெயரில் இளைஞர் ஒருவர் மாற்றிவிட்டார். பாதிப்புக்குள்ளாகும் முன்பு எடுக்கப்பட்ட அவருடையப் புகைப்படங்களை பார்க்கும் போது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஆனாலும் அவருடைய நல்ல மனதைப் பார்த்து வியந்தேன். என் மீது ஆசிட் வீசியவனை சட்டம் மூலம் தண்டிக்க வேண்டாம். சமூகமும் அவனை எதுவும் செய்ய வேண்டாம். அவனுடைய சுண்டுவிரலை ஒரு பகுதியை மட்டும் ஆசிட்டில் மூழ்கச் செய்யுங்கள். அப்போது ஆசிட்டின் கொடூரம் என்ன என்பது அவனுக்குத் தெரியும்'' என்றார். இதுவரை நான் 22 பெண்களைச் சந்தித்துள்ளேன். 80 சதவிகிதம் காதல் பிரச்னையால் தான் ஆசிட் வீச்சுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். அடுத்தது திருமணப் பிரச்னை, சொத்துப் பிரச்னை, பொறாமை, பக்கத்துவீட்டுச் சண்டை போன்ற காரணங்களால் ஆசிட் வீசப்பட்டுள்ளன.

இதற்குத் தீர்வு தான் என்ன? சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும். நமது சமூகம் மாற வேண்டும். இவை இரண்டும் ஆசிட் வீச்சு நடக்காமல் தடுப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிப்பதற்குத் தோல் தானம் மிகவும் அவசியமாகும். எனவே தோல் தானம் செய்ய அனைவரும் முன் வர வேண்டும். தோல் தானம் பற்றி விழிப்புணர்வு இந்தியாவில் அதிகளவில் இல்லை. ஒருவருக்குச் சிகிச்சை அளிக்க இருவரின் தோல் தேவைப்படுகிறது. தோல் தானம் குறித்த விழிப்புணர்வையும் இன்றைய மாணவ சமூகத்திடம் கொண்டு சேர்த்திடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்'' என்றார் தேசிய மாணவர் படை: அடுத்தக் கட்டமாகப் பெண்கள் மென்மையானவர்கள் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்து உடலளவில் ஆண்கள் செய்யக்கூடிய அனைத்துப் பயிற்சிகளையும் மேற்கொள்ளத் தொடங்கினார் கற்பகவள்ளி. கல்லூரி அவருக்கு தேசிய மாணவர் படை அலுவலர் பொறுப்பை வழங்கியது.

வட இந்தியாவில் குளிர்பிரதேசமான குவாலியர் மாநிலத்தில் கடுங்குளிரிலும் மூன்று மாதங்கள் பயிற்சி மேற்கொண்டார். 2017 -ஆம் ஆண்டு டார்ஜிலிங் மலைப்பிரதேசத்தில் மலையேற்றப்பயிற்சியிலும் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றார்.

மகாராஷ்டிராவில் ஐ.என்.எஸ். லோனாவாலாவில் நடைபெற்ற கப்பற்படை பயிற்சி முகாமில் தமிழக மாணவர்களுடன் பங்கேற்றார். பெங்களூருவில் பாராசூட் ரெஜிமெண்ட் நடத்திய பயிற்சி முகாமில் தமிழகத்தின் மாணவர்களுடன் கலந்து கொண்டார். கல்விப்பணியோடு இந்த தேசிய மாணவர் படையின் ஆளுமைப்பணியும் இவரை அடையாளப்படுத்தியது. இவரின் ஆளுமைப் பணிகளால் 2018- ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் ஆகிய மூன்று மாநிலங்களின் தேசிய மாணவர்படை, மாணவர்களை தில்லிக்கு வழி நடத்திச்சென்று பேரணியில் பங்கேற்று அழைத்து வரும் பெறும் பேற்றைப் பெற்றார்.

இவரின் இந்த அர்ப்பணிப்பு மிகுந்த செயலால் "கமேண்டசன் கார்டு' என்ற உயரிய விருதினைப் பெற்றார். 2018 -ஆம் ஆண்டு குவாலியரில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 117 பேர் கலந்து கொண்டனர். இதில் துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தமிழகத்திற்குப் பெற்றுத்தந்துள்ளார் லெப்டினன்ட் கற்பகவள்ளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com