பரிசுகளைக் குவிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவி!

குழந்தைகளின் திறமைகளைப் புரிந்து கொண்டு அந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கு பெற்றோர் உதவியாக இருந்தாலே போதும், குழந்தைகள் சாதனைகளைப் படைத்து சரித்திரத்தில் இடம் பெற்று விடுவார்கள்.
பரிசுகளைக் குவிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவி!

குழந்தைகளின் திறமைகளைப் புரிந்து கொண்டு அந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கு பெற்றோர் உதவியாக இருந்தாலே போதும், குழந்தைகள் சாதனைகளைப் படைத்து சரித்திரத்தில் இடம் பெற்று விடுவார்கள். அந்த வகையில் கடையநல்லூர் அருகேயுள்ள வீரகேரளம்புதூர் , லட்சுமிபுரத்தைச் சேர்ந்த 2 -ஆம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி, இந்திய அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதுடன், 160-க்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளார். அத்துடன் "வித்தக சிற்பி' விருதினையும் வென்று பெருமை சேர்த்துள்ளார்.

அத்தகைய பெருமைக்குரிய மாணவியின் பெற்றோர் பாலமுருகன், லலிதா ஆகியோரைச் சந்தித்தபோது, வீடு முழுவதும் நிரம்பியிருந்த திவ்யதர்ஷினியின் வண்ண ஓவியங்கள் நம்மை வரவேற்றன. திவ்யதர்ஷினி குறித்தும் அவர் பெற்ற விருதுகள் குறித்தும் அவரது பெற்றோர் நம்மிடம் கூறியது:

"திவ்யதர்ஷினியை நாங்கள் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அவளுக்கு 3 வயதாக இருக்கும்போது வெளியே அவள் பார்க்கும் ஒவ்வொரு விஷயங்கள் குறித்தும் கேட்டுக் கொண்டே வருவாள், பின்னர் வீட்டிற்கு வந்ததும் அவள் வெளியே கண்ட காட்சிகளை, வரிசையாக சொல்லிக் கொண்டே வரைவாள்.  இவ்வாறு அவள் வரைவதைப் பார்த்த நாங்கள் அவளுக்கு ஓவியத்தில் ஆர்வம் இருப்பதை உணர்ந்தோம். அவளுக்கு முறையான ஓவியப் பயிற்சி வழங்கினால் அவளது திறமை வெளிவரும் என்பதை உணர்ந்து கொண்டு தாமஸ் என்பவரிடம் ஓவியம் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்தோம். அவரும் தொடர்ந்து கற்றுக் கொடுத்து வருகிறார். 
நான்கு வயது முதல் பல ஓவியப் போட்டிகளில் திவ்யதர்ஷினி கலந்து கொண்டு வருகிறார். முதல் ஓவியப் போட்டியே அவளுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. இது அவளுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி மேலும் வரைவதற்கான ஆர்வத்தை உருவாக்கியது. 


நான்கு மற்றும் ஐந்து வயதில் அவள் கலந்து கொண்ட போட்டிகள் பெரும்பாலும் வண்ணம் தீட்டும் போட்டிகளாகவே இருந்தன. ஆறாவது வயதில்தான் ஒரு தலைப்பைக் கொடுத்து அந்த தலைப்பிற்கு ஏற்ற படங்களை வரைந்து வண்ணம் தீட்டும் போட்டிகளாக அமைந்தன. அவளே தலைப்பைப் புரிந்து கொண்டு படம் வரைந்து வண்ணம் தீட்டுவாள். இதனால் பொது அறிவுத் திறனும் அவளுக்கு வளர்ந்தது. இந்திய அளவில் 250-க்கும் மேற்பட்ட ஓவியப் போட்டிகளில் அவள் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.

இஸ்ரோ (இந்திய வானியல் ஆராய்ச்சி மையம்) நடத்திய ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்று சான்றிதழ் மற்றும் கேடயம் பெற்றுள்ளார். பிட் இந்தியா நடத்திய ஓவியப் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்று தெலங்கானா ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜனிடம் இருந்து பரிசுகளும் சான்றிதழும் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு அரசு வன விலங்கு வார விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் சென்னை மாவட்ட அளவில் 2 வது இடம் பெற்று சாதித்துள்ளார்.  

மேலும் ஸ்ரீதர்ஷினி கலைக்கூடம்  அவருக்கு டாக்டர் அப்துல் கலாம் நினைவியல் வித்தக சிற்பி விருதினை வழங்கியுள்ளது. மேலும் கரோனா பொதுமுடக்க காலத்தில் பயனுள்ள வகையில் கரோனா விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தினார். இதற்காக பல அமைப்புகள் விருது வழங்கி கெüரவித்துள்ளன.
தற்போது இரண்டாவது வகுப்பு படித்து வரும் நிலையில், வேலம்மாள் வித்யாலயா பள்ளி சார்பில் உலக அளவில் நடைபெற்ற "கரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி'யில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று ரூ.25000 பரிசு பெற்றுள்ளார். மேலும், இந்திய அரசு சார்பில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தின ஓவியப் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். நிகழாண்டு  இஸ்ரோ (இந்திய வானியல் ஆராய்ச்சி மையம்) நடத்திய ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு இந்திய அளவில் 5-ஆவது இடம் பெற்று இஸ்ரோ தலைவர் சிவனின் கையெழுத்துடன் கூடிய சான்றிதழ் மற்றும் பரிசுகளும் பெற்றுள்ளார். மேலும், தமிழக அரசு சார்பில் நடைபெற்ற வனவிலங்கு வார விழா ஓவியப் போட்டியில் 2-ஆ வது இடம் பெற்று தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடமிருந்து பரிசு பெற்றுள்ளார். ஆந்திர அரசு வனவிலங்கு துறை சார்பில் நடைபெற்ற போட்டியில் 2-ஆ வது இடம் பெற்று அசத்தியுள்ளார்.

அவரது திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை, " கனவு மாணவர்-2020' என்ற விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது. இதில், முன்னாள் இந்திய ஆராய்ச்சி அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை இணைய வாயிலாகக் கலந்து கொண்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

"இயற்கை பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடர்பான ஓவியங்கள் வரைவதில் தனக்கு ஆர்வம் அதிகம்' என கூறும் திவ்யதர்ஷினி ,  தனது ஓவியத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை மரங்கள் பாதுகாப்பிற்காக கொடுக்க முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார். மேலும், விண்வெளி பயணம் மேற்கொண்டு வண்ண  தூரிகையால் வெள்ளை நிலவில் வானவில் வரைய வேண்டும் என்பதுதான் தனது ஆசை'' எனவும் கூறுகிறார் திவ்யதர்ஷினி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com