கரோனா தடுப்புக் குழுவில் தமிழ்ப் பெண்!

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பைடன் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர புதிய வழிகாட்டுக் குழுவினை அமைத்துள்ளார்.
கரோனா தடுப்புக் குழுவில் தமிழ்ப் பெண்!

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பைடன் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர புதிய வழிகாட்டுக் குழுவினை அமைத்துள்ளார்.

இக்குழுவில்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  பெண் மருத்துவர் செலின் ராணி கவுண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை பூர்வீகமாக கொண்டவர் செலின் கவுண்டர். தந்தையார் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்.

கடந்த 1998 முதல் 2012 வரையிலான கால கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, மால்வாய், எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், ஹெச்.ஐ.வி. தொடர்பான மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளை செலின் ராணி மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க காசநோய் தடுப்புப் பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ் மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக செலின் ராணி தற்போது பணியாற்றி வருகிறார். கரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் செலின் கவுண்டர் இடம்பெற்ற தகவலை மொடக்குறிச்சி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் செலினுக்கு பின்னால் இருக்கும் கவுண்டர் பெயர் குறித்து சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். 

இதற்கு ட்விட்டரில் செலின் கவுண்டர் அளித்த பதில்: ""பெயருக்குப் பின்னால் கவுண்டர்  என ஏன் போட்டிருக்கிறீர்கள்? என பலரும் கேட்கிறார்கள். என்னுடைய தந்தை 1960-களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர். நடராஜன் என்ற அவரது பெயரை அமெரிக்கர்கள் உச்சரிக்க தடுமாறினர்.  எனவே, 1970-களில் நான் பிறப்பதற்கு முன்னதாகவே கவுண்டர் என  எனது தந்தை, தன் பெயரை மாற்றிக் கொண்டார். எனவே, என் பெயருக்கு பின்னால் உள்ள கவுண்டர் என்பது என் அடையாளம்; அதை நீக்க முடியாது'' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com