ஒரு மணி நேரத்தில் 33 வகை சமையல்!
By - பனுஜா | Published On : 28th October 2020 06:00 AM | Last Updated : 28th October 2020 06:00 AM | அ+அ அ- |

ஒரு மணி நேரத்தில் 33 வகை உணவுப் பண்டங்களை சமைக்க முடியுமா?
"முடியும்' என்கிறார் சான்வி பிரஜித்.
சான்வி ஷெஃப் அல்ல . விதம் விதமாகச் சமைக்கும் இல்லத்து அரசியும் அல்ல.
சான்வி 10 வயதே ஆன சிறுமி, என்றாலும் சமையல் சான்விக்கு அத்துப்படி. அண்மையில் "ஒரு மணி நேரத்தில் 33 வகை உணவுப் பண்டங்களை சமைத்து "ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ஸில் சான்வி இடம் பிடித்திருக்கிறார்.
கேரளத்தின் கொச்சியைச் சேர்ந்த சான்வி வசிப்பது விசாகப்பட்டணத்தில். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""அப்பா பிரஜித் இந்திய விமானப்படையில் விங் கம்மாண்டராகப் பணி புரிகிறார். அம்மா பிரபலமான ஷெஃப். அம்மாவின் திறமை எனக்கு வந்திருக்கிறது. சமையல் போட்டிக்காக "ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' தேர்வாளர்களை தொடர்பு கொண்ட போது, " சிறுவர்கள் 18 வகை உணவுப் பண்டங்களைச் செய்தால் அதை சாதனையாக அறிவிப்போம். செய்யும் உணவுவகைகளில் பத்து உணவு வகைகள் செய்ய "தீ'யை பயன்படுத்தக் கூடாது. எட்டு வகையான உணவுகளை அடுப்பில் சமைக்கலாம்' என்று விதிமுறைகளைச் சொன்னார்கள். கரோனா காலம் என்பதால் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம். அதனால் நன்கு பயிற்சி செய்து ஒரு மணி நேரத்தில் 33 வகை உணவுப் பண்டங்களை செய்து அசத்தியிருக்கிறேன்
நான் செய்த உணவுப் பண்டங்கள் இட்லி, கேக் வகைகள், சிக்கன் ரோஸ்ட், பப்டி சாட், அப்பம், புல்ஸ் ஐ, கார்ன் வகைகள், ஃபிரைட் ரைஸ், பன்னீர் டிக்கா, காளான் போன்றவைகள். 33 வகை உணவுகளை நடுவர்கள் முன், நான் வீட்டில் செய்ய அதை "ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' தேர்வாளர்கள் நேரலையில் கண்காணித்தார்கள்.
எனது சமையல் முறை, ஒரு மணி நேரத்தில் 33 உணவுகளைச் சமைத்து காண்பித்தது அவர்களுக்கு திருப்தி அளித்ததால் சாதனைச் சான்றிதழை அனுப்பி வைத்தார்கள்.
யூ - டியூபில் சமையல் சானல் ஒன்றை "சான்வி கிளவுட் நைன்' என்ற பெயரில் நடத்தி வருகிறேன். ஆறு வயதிலிருந்து நான் சமையலை கற்கத் தொடங்கினேன். அப்போது எனது குருவாக அமைந்தவர்கள் தாத்தா பாட்டிதான். சிறுவயதிலேயே சிறுவர்களுக்கான சமையல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளேன். சமையலைத் தவிர நான் குதிரை ஏற்றம் செய்வேன். நன்றாக பரத நாட்டியம் ஆடுவேன்'' என்கிறார் சான்வி.