ஆடைகள் ... வீணாகும்  துணிகளில்...!

சிநேகா மாரப்பா,  சிறுவயதில்  வீண் என தூக்கியெறியப்படும்  பொருள்களை மறுசுழற்சி மூலம்  ஏன் திரும்பவும்  பயன்படுத்தக் கூடாது  என்று  நினைப்பாராம்.
ஆடைகள் ... வீணாகும்  துணிகளில்...!


சிநேகா மாரப்பா, சிறுவயதில் வீண் என தூக்கியெறியப்படும் பொருள்களை மறுசுழற்சி மூலம் ஏன் திரும்பவும் பயன்படுத்தக் கூடாது என்று நினைப்பாராம். பள்ளிப் பருவத்தில் இந்த ஆர்வம் அதிகரிக்கவே சுற்றுச்சூழல் அறிவியல் அல்லது ஃபேஷன் துறையில் பட்டம் பெற விரும்பினார். ஆனால் இவரது பெற்றோர் இவரை எம்பிஏ படிக்கும்படி வறுபுறுத்தவே, அவர்கள் விருப்பப்படி பெங்களூரு குளோபல் அகாதெமி ஆஃப் டெக்னாலஜியில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.

2009 - ஆம் ஆண்டு முதல் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி வந்த சிநேகாவுக்கு 9 முதல் 5 மணி வரையிலான வேலை சலிப்பை தந்தது. ஆறாண்டுகளுக்குப் பின் வேலையைய விட்டுவிட்டு கோயம்புத்தூர் சென்று ஒரு கல்வி நிலையத்தில் ஆசிரியை பணியில் சேர்ந்தார். அந்த ஆசிரியை பணியும் இவருக்குப் பிடிக்கவில்லை. கடந்த ஆண்டு அறிவித்த முதல் பொதுமுடக்கத்துக்கு முன் வேலையை விட்டுவிட்டு மீண்டும் பெங்களூரு புறநகர் பகுதியான ஆனேக் கல்லுக்குத் திரும்பினார்.

சிநேகாவைப் பற்றி எதற்காக இவ்வளவு பீடிகை ? இவரைப் போலவே பலர் பார்க்கும் வேலை பிடிக்காமல் அடிக்கடி வேலையை மாறுவது சகஜம்தானே என்று நீங்கள் நினைக்கலாம். கார்ப்பரேட் வேலை, ஆசிரியை பணி என மாறி மாறி வந்த சிநேகா இப்போது ஆயத்த ஆடை தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்.

"விதர்' என்ற பெயரில் இவர் தயாரிக்கும் ஆடைகள் சற்று வித்தியாசமானவை. ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழிற்சாலைகளில் வீணாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் தூக்கி ஏறியப்படும் கந்தல் துணிகளை விலைக்கு வாங்கி அவைகளை வைத்து விதவிதமான வண்ணங்களில் வித்தியாசமான டிசைன்களில் பெண்களுக்கான ஆடைகளை தயாரித்து விற்பனை செய்கிறார். சுயமாக தொழில் முனைவோர் ஆனது எப்படி என்பது பற்றி சிநேகாவே விவரிக்கிறார்:

""சிறு வயதில் என்னுடைய அம்மா எனக்கான ஆடைகளை விதவிதமாக வீட்டிலேயே தைத்துக் கொடுப்பார். ஆடை வடிவமைப்பில் நல்ல திறமைசாலியாக இருந்தாலும் அம்மா, தான் கற்றதை தொழில் ரீதியாக பயன்படுத்தவில்லை. ஆடைகளை தைக்கும்போது அவர் தேவையான அளவு துணியை வெட்டி எடுத்து தைத்து மீதமுள்ள கந்தல் துணிகளை தூக்கியெறிவதை பார்த்தபோது, இவைகளை மறுபடியும் பயன்படுத்த வேறு ஏதாவது செய்யலாமே என்று நினைப்பேன். கூடவே அம்மா மூலம் தையல் பயிற்சிப் பெற்றேன்.

பெங்களூரு திரும்பியவுடன் சொந்தமாக தொழில் ஏதாவது செய்யலாமே என்று நினைத்தபோது, ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளில் வீணாக தூக்கி எறியும் கந்தல் துணிகளை விலைக்கு வாங்கி நாமே வித்தியாசமாக ஆடைகளை தயாரித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. தமிழ்நாட்டில் திருப்பூரில் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனமொன்று மீதமாகும் துணிகளை பல்வேறு வர்த்தகர்களுக்கு மொத்தமாக விற்பது தெரிந்தது. நானும் சில நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டேன். சில நிறுவனங்கள் மீதமாகும் கந்தல் துணிகளை சாலையோர பள்ளங்களை மூட கொட்டுவதாக அறிந்தேன். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதுண்டு. இந்த பாதிப்பை தவிர்க்க நம்மால் முடிந்த உதவியை செய்யலாமே என்று நினைத்தேன். இவைகளை வாங்கி ஆய்த்த ஆடைகளை தயாரிக்க முடிவு செய்தேன்.

2021 - ஆம் ஆண்டு தொடக்கத்தில் முதல் தவணையாக வண்ணத் துணிகள் கிலோ ரூ.40 வீதமும், வெள்ளைத் துணிகள் கிலோ ரூ.55 வீதமும் மொத்தம் 40 கிலோ துணிகள் கிடைத்தன. ஆயத்த ஆடை நிறுவனத்துக்கு "விதர்' என்று பெயரிட்டேன். வாங்கும் துணிகள் எந்தெந்த அளவுகளில் கிடைக்குமென்பது நிச்சயமில்லை. எந்த அளவாக இருந்தாலும் வாங்கியாக வேண்டும். பெரிய அளவில் கிடைப்பது நம் அதிர்ஷ்டத்தைப் பொருத்தது. இவைகளை வைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆடைகளை தயாரிக்கத் தொடங்கினேன். எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பு கிடைத்தது. விற்பனையும் அதிகரித்தது. இதன்மூலம் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்தேன். அவர்களும் கௌரவமாக குடும்பம் நடத்த மாதந்தோறும் ஊதியம் பெறுகின்றனர். விரைவில் இத்தொழிலை பெரிய அளவில் விரிவுபடுத்தும் எண்ணமும் இருக்கிறது'' என்கிறார் சிநேகா மாரப்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com