மேடம் இருக்கிறார்!

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரான சாரதா மேனன் சமீபத்தில் காலமானார்.
மேடம் இருக்கிறார்!


இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரான சாரதா மேனன் சமீபத்தில் காலமானார். இவர், கர்நாடக மாநிலம் மங்களூரில் 1923-இல் பிறந்தவர். தந்தையின் பணி நிமித்தமாக சென்னை வந்தவர், பள்ளிப்படிப்பை இங்குதான் முடித்தார். பின்னர், மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து, பின்னர் தேசிய மனநல மற்றும் நரம்பு அறிவியல் மருத்துவ மையத்தில் மனநலம் சார்ந்த மருத்துவப்படிப்பை முடித்தார். இதன்மூலம் இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரானார்.

மனநலம் பாதித்தவர்களுக்கு அவர் செய்து வந்த சேவையைப் பாராட்டி,இந்திய அரசு அவருக்கு 1992-இல் பத்மபூஷண் விருது வழங்கி கௌரவித்தது. அதன்பின், சிறந்த மருத்துவருக்கான விருது, 2016-இல் தமிழக அரசின் அவ்வையார் விருது போன்றவற்றைபெற்றுள்ளார்.

இவருடன், இணைந்து பணியாற்றிய மன நல மருத்துவர் தாரா சீனிவாசன், சாரதாமேனன் குறித்து தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

""1947 பெண்கள் படிப்பதே அரிதாக இருந்த காலகட்டம் அது. அதிலும் மருத்துவத்துறையில் பெண்கள் என்பது சொல்லவே வேண்டாம். அப்படியொரு சூழலில் மருத்துவத்துறையில் அதிலும் மனநலம் சார்ந்த மருத்துவம்தான் படிப்பேன் என்ற பிடிவாதத்தோடு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர் சாரதா அம்மா. பின்னர், பெங்களூர் சென்று சைக்கியார்டி படித்தார். அதன்பின் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். பின்னர், படிப்படியாக வளர்ந்து 1961-இல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.

அந்த சமயத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களோ நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளோ போதிய அளவில் இல்லாமல் இருந்தது.

அவர் பொறுப்பேற்றதும் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் முதல் உணவு வரை அனைத்தையும் செய்து கொடுத்தார். அவர் காலத்தில்தான், அவுட் பேஷன்ட் சிகிச்சை முறையைக் கொண்டு வந்தார். அதிலும் அவரது முக்கிய நோக்கமாக இருந்தது நோயாளிகளின் புணரமைப்பு. அதாவது சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பும் நோயாளிகளுக்கான மறுவாழ்வு மிகவும் முக்கியம் என கருதினார்.

அதனடிப்படையில், மருத்துவமனை வாளாகத்திலேயே மறுவாழ்வு மையத்தையும் தொடங்கினார். அதில் ஒரு பிரிவாக, நோயாளிகளுக்காக இன்டஸ்ட்ரியல் தெரபி சென்டர். (ஐ.டி.சி) என்று ஒன்றைத் தொடங்கினார். இதன்மூலம், ஓரளவு குணமாகியிருந்த, நோயாளிகளுக்கு பிரெட் தயாரிப்பு பயிற்சியளிக்கப்பட்டது. இந்த நோயாளிகள் தயாரிக்கும் பிரெட்டை பல மருத்துவமனைகளுக்கு வழங்கினார்கள்.

அதுபோன்று தேசியளவில், சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளுக்கு அவர்கள் மன நலம் சம்பந்தப்பட்ட சிகிச்சை, சின்ன சின்ன தொழில் பயிற்சிகள் கொடுப்பது போன்றவற்றில் ஈடுப்பட்டார். இது தவிர, சமூகத்துக்கும் தன்னாலான உதவிகளை செய்து வந்தார். அந்த வகையில், ரெட் கிராஸ் அமைப்பில் சைக்கிளோன் ஷெல்ட்டர் கட்டப்பட்டது எல்லாம் இவரது முயற்சியால் தான். பெண் மருத்துவர்களுக்கான கூட்டமைப்பு உருவாக்கி பலவித சேவைகளை வழங்கினார். அதன்பின், 1984-இல் பணி ஓய்வு பெற்றார்.

ஆனாலும், மன நலம் சார்ந்து இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருப்பதாக அவருக்கு தோன்றியது. அதனால், தனியார் மனநல மருத்துவமனை ஒன்றைத் துவங்கத் திட்டமிட்டார். அந்த முயற்சியில், நானும், மருத்துவர் ராஜ்குமாரும் அவருடன் இணைந்து செயல்படத் தொடங்கினோம்.

அதன் முதல் முயற்சியாக, "ஸ்கார்ஃப்' என்ற மனநலம் சார்ந்த சேவை நிறுவனத்தைத் தொடங்கினோம். அந்நிறுவனத்தின் மூலம் மன நோயாளிகளைப் பேணுதல், அவர்களுக்கான சிகிச்சை, மறுவாழ்வு அளித்தல், தொழில், வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி அளித்தல் போன்றவற்றை உருவாக்கினோம்.

இந்த எங்களது முயற்சிக்கு, காஞ்சி மடத்தைச் சார்ந்த சங்கராச்சாரியர் மகாபலிபுரம் அருகில் எங்களுக்கு மருத்துவமனைக் கட்டிக்கொள்ள நிலம் வழங்கினார். அதன்பின் திருவேற்காட்டில் ஒரு நிலம் வாங்கினோம்.

இவையெல்லாம் தன்னார்வலர்களிடம் உதவிகள் பெற்றே செய்து வந்தோம். இந்நிலையில்தான், சாரதா மேடமின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அண்ணாநகரில் இடம் கொடுத்தார். ஆரம்பத்தில், எங்கள் மருத்துவமனையைப் பற்றிய புரிதல் யாருக்கும் அவ்வளவாக இல்லை, பலவித சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் சாரதா மேடமின் கணவர் மேனன் மிகவும் பிரபலமாக இருந்ததால், அவர் இதைப் பற்றி பலருக்கும் எடுத்துச் சொல்லி புரியவைத்தார். பின்னர் மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது 35 ஆண்டுகளை ஸ்கார்ஃப் கடந்துள்ளது. இப்போது எங்கள் மருத்துவமனைக்கும், சிகிச்சைக்குமான புரிதல் உலகளவில் இருக்கிறது.

சாரதா அம்மாவை பொருத்தவரை, தனக்கு வயதாகிவிட்டதே ஒதுங்கியிருப்போம் என்று ஒருநாளும் அவர் நினைத்ததில்லை. இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தப்படும் நவீன சிகிச்சை முறை வரை அனைத்து புது புது விஷயங்களையும் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்.

இந்த 98-ஆவது வயதிலும், மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு நோயாளியைப் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருந்தார். அவ்வப்போது மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளைப் பார்ப்பதும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக் குறித்தும் அறிந்து கொள்வார்.

அவர், இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு கூட தொலைபேசியில் அழைத்து நோயாளிகளைப் பற்றி விசாரித்தார்.

அந்தளவிற்கு மருத்துவ சேவையில் அக்கறை உள்ளவராக இருந்தார். அவர், நோயாளிகளிடம் காட்டிய அன்பே பல நோயாளிகள் விரைவில் குணமாவதற்கு உதவி உள்ளது. அவரது, இந்த அன்பும், அரவனைப்புமே அவரை பத்மபூஷண் விருது பெறத் தகுதியானவராக மாற்றியது.

அவரைப் பொருத்தவரை, மனதிடம் மிக்கவர். தனக்கு ஏதாவதொன்றை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டார். எப்பாடுபட்டாவது, இலக்கை அடைந்துவிடுவார்.

அவரது சுறுசுறுப்பும், மோட்டிவேஷனல் மைண்ட்டும், எங்களுக்கெல்லாம் எப்போதும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வழிநடத்தி வந்துள்ளது. அவரோடு, 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன் என்பதே எனக்குப் பெருமைதான்.

98 வயதானாலும் அவர் இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருக்கலாம் என்ற எண்ணமே என் மனதில் இருக்கிறது. எதுவாக இருந்தாலும், மேடம் இருக்கிறார் ஆலோசனை சொல்ல என்று தைரியமாக இருந்தோம். இப்போ, அது இல்லை என்பது எதையோ இழந்துவிட்டது போன்று இருக்கிறது '' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com