கடலில் சாகுபடி...!

ராமேஸ்வரம் தீவில்  கடலில் கீரை வளர்க்கிறார்கள். அதுவும் பெண்கள் வளர்க்கிறார்கள். வருமானம்  ஈட்டி சொந்தக் காலில் நிற்கிறார்கள்.
கடலில் சாகுபடி...!


ராமேஸ்வரம் தீவில் கடலில் கீரை வளர்க்கிறார்கள். அதுவும் பெண்கள் வளர்க்கிறார்கள். வருமானம் ஈட்டி சொந்தக் காலில் நிற்கிறார்கள். இவர்கள் வளர்க்கும் பெப்சி கீரைக்கு சிறுஇலைகள் உண்டு. சிறு தண்டும் உண்டு. இருந்தாலும் அதை "பெப்சி பாசி' என்று அழைக்கிறார்கள். இந்தக் கீரைகளை எதற்காக வளர்க்கிறார்கள் என்பதை கடலில் விவசாயம் செய்யும் தொழில் முனைவர் சுகந்தி விளக்குகிறார்:

"ராமேஸ்வரம் தீவு பாம்பன் ஊரிலிருந்து தொடங்குகிறது. பாம்பனின் தெற்குவாடிப் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறேன். எனது சொந்த ஊர் ராமேஸ்வரத்திற்கு அருகில் இருக்கும் மாங்காடு. அங்குதான் கடலில் பெப்சி பாசி வளர்க்கிறோம். எனக்குத் தொழில் கற்றுக் கொடுத்தவர் எனது தாய். அவர் அவரது திருமணத்திற்கு முன் ஆசிரியையாக வேலை பார்த்தவர். அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்ததும் குழந்தைகளைப் பராமரிக்க வேலையை விட்டுவிட்டார். நாங்கள் ஐந்து சகோதரிகள். அனைவரையும் படிக்க வைத்தார். எங்களை வளர்க்க கடலில் மூழ்கிப் பாசிகளை சேகரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டார்.

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போனதினால் கடன் கொடுத்தவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து திட்டுவார். அதை பார்த்த நான் அம்மாவுக்கு உதவ படிப்பை விட்டுவிட்டு அம்மாவுடன் பாசி சேகரிக்கச் செல்ல ஆரம்பித்தேன். அப்போது எனக்கு வயது 13. ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பெற்றோர் எவ்வளோ சொல்லியும் நான் பள்ளி பக்கம் போகவில்லை. நானும் சம்பாதித்து அம்மாவிடம் கொடுத்து சிறுகச் சிறுக கடனை அடைக்கச் செய்தேன். படித்த சகோதரிகளில் மூன்று பேர்கள் அரசு வேலையில் இருக்கிறார்கள். நான் படிப்பை தொடராததால் அம்மா செய்யும் தொழிலில் தொடர்கிறேன். எனது சம்பாத்தியத்தை சேமித்து அம்மா எனக்கு நகை செய்து போட்டார். சமூக சேவைகளும் செய்து வந்த அம்மா பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக பல முறை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மாவைப் போலவே நானும் பாம்பன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

"பெப்சி' கடல் செடி அல்லது பாசி வளர்ப்பது ஆண்டு முழுவதும் நடக்கும் தொழில். "பெப்சி' பாசி தவிர கடலில் மூழ்கி கடல் பாறைகளில் வளரும் பலவகை செடிகளைப் பறித்துக் கொண்டு வருவோம். இதையும் ‘பாசி' என்றுதான் அழைப்போம். மரிக்கொழுந்து, கட்டக்கோரை, கஞ்சிப்பாசி, கருக்கம் பாசி போன்றவை பாறைகளில் வளரும். மூச்சுப் பிடித்துத்தான் மூழ்குவோம். ஆக்ஸிஜன் சிலிண்டரைப் பயன்படுத்தமாட்டோம். கடல் நீர் கண்ணில் பட்டால் எரிச்சல் ஏற்படும். கண்ணை முழுதாகத் திறந்து பார்க்க முடியாது. அதைத் தவிர்ப்பதற்காக கடல் நீர் புக முடியாத கண்ணாடி அணிந்து கொள்வோம்.

பத்து பன்னிரண்டு அடி ஆழம் வரை மூச்சு பிடித்து போய்வருவோம். அதிகபட்சம் மூன்று நிமிடம் வரைதான் கடல் ஆழத்தில் இருக்க முடியும். அதற்குள் எவ்வளவு பாசிகளை பறிக்க முடியுமோ அவ்வளவு பறித்துக் கொண்டு மேலே வந்து, பறித்த இலைகளை படகில் போட்டுவிட்டு நன்றாக மூச்சு வாங்கிக் கொண்டு மீண்டும் கடலுக்குள் மூழ்கி ஆழத்திற்குச் சென்று செடிகளைப் பறிப்போம். இந்த வேலை பல மணி நேரம் நடக்கும். பாறைகளில், கடல் பாம்பு,

அல்லது அஞ்சாலை எனப்படும் விஷ மீன்கள் இருக்கும், மண்ணுக்கடியில் திருக்கை மீன் மறைந்து கிடைக்கும். அதன் வாலில் விஷ முள் உண்டு. அந்த முள் காலில் குத்தினால் விஷம். ஆற பல வாரங்கள் பிடிக்கும். சரிவர சிகிச்சை எடுக்காவிட்டால் காலைத் துண்டிக்க வேண்டிவரும். பறித்த பாசிகளை வெயிலில் காய வைத்து எடை போட்டு விற்போம். ஒரு இடத்தில் கடல் செடிகளைப் பறித்துவிட்டால் அவை மீண்டும் வளர மூன்று முதல் ஆறு மாதம் பிடிக்கும். அப்போது கடல் செடிகள் வளர்ந்து இருக்கும் இதர பாறைகளைத் தேடித் செல்வோம்.

"பெப்சி' செடிவகையை மூங்கில்களை வைத்து பெரிய சட்டங்கள் செய்து அவற்றில் இந்த பெப்சி பாசிகளை மல்லிகைப் பூ கட்டுவது மாதிரி கட்டி கழுத்தளவு மட்ட கடல் நீரில் மிதக்க விடுவோம். கடல் அலைகள் மூங்கில் சட்டங்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு போகாமல் இருக்க பெரிய கற்களை கயிற்றில் கட்டி மூங்கில் சட்டத்துடன் இணைப்போம். கல் நங்கூரமாகச் செயல்பட்டு மூங்கில் சட்டங்களை ஓரிடத்தில் மிதக்கச் செய்யும். தமிழகத்தின் மழைக் காலமான அக்டோபர் முதல் டிசம்பர்வரை மூன்று மாதத்துக்குள் "பெப்சி' செடிகள் அறுவடைக்குத் தயாராகிவிடும். விளைச்சலும் நன்றாக இருக்கும். இதர மாதங்களில் செடிகள் வளர நான்கு முதல் ஆறு மாதம் வரை அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும். தரமான பெப்சி செடிகளைப் பிரித்து மீண்டும் வேறு மூங்கில் சட்டங்களில் பிடிப்பித்து கடலில் மிதக்க விட்டு வளர்ப்போம். அறுவடை செய்த பாசிகளை உலர வைத்து விற்கிறோம். ஒரு கிலோவுக்கு ஐம்பது ரூபாய் கிடைக்கிறது.

எல்லா வகை பாசிகளுமே ஏதாவது ஒருவகையில் பயன்படுகின்றன. சிலவற்றிலிருந்து ஐஸ்கிரீம், ஜெல், தயாரிக்கும் மூலப் பொருள்களாகின்றன. "அகர் அகர்' எனப்படும் பொருளும் தயாராகிறது. ராமநாதபுரத்தில் சர்பத்தில் கடல் பாசிகளில் செய்யப்படும் அல்வா மாதிரியான ஜெல்லை சேர்த்து தருவார்கள். மிகவும் சுவையாக இருக்கும். சில கடல் செடிகளை உரமாகப் பயன்படுத்துகிறார்கள்' என்கிறார் சுகந்தி.

சுகந்தியின் குருவும் தாயுமான பஞ்சாம்மாள் கூறுவது:

"ராமேஸ்வரம் தீவின் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த எல்லா பெண்களுக்கும் "பெப்சி' கடல் பாசியை அறிமுகம் செய்தது "அக்வா கல்ச்சர் ஃபெளண்டேஷன்' தலைவராக இருந்த சக்திவேல் மற்றும் பேராசிரியர் பெரியசாமி. "பெப்சி' வகை பாசிகளை வளர்ப்பதால் மற்ற பாசிகளில் கிடைக்கும் வருமானத்தைவிட அதிகமாகக் கிடைக்கும் என்று சொல்லி எல்லா கட்டமைப்பையும் இலவசமாகச் செய்து கொடுத்து பயிற்சியும் கொடுத்தார்கள். இது 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. "பெப்சி' சாகுபடி வந்ததும், எங்களுக்கு ஆண்டு முழுவதும் தொழில் செய்யும் வாய்ப்பும், வருமானமும் கிடைத்தது. எங்கள் சமுதாயப் பெண்கள் சக்திவேல் சாருக்கும், பெரியசாமி சாருக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளோம். கடலில் மூழ்கி பாசிகளை சேகரிக்கும் தொழிலில் எனக்கு 42 ஆண்டுகள் அனுபவம் உண்டு. "பெப்சி' கடல் செடிகளை வளர்ப்பதில் 20 ஆண்டு அனுபவம் இருக்கிறது. மகள் சுகந்தி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு என்னுடன் வேலை செய்ய வந்துவிடுவாள். இந்த ஆண்டு "பெப்சி' செடிகளை "ஓரா' மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாப்பிடுகின்றன. இது எந்த வருஷமும் நடக்காத சம்பவம். அதனால் "பெப்சி' பாசி வளருவது தடைபடுகிறது. நாங்கள் மூங்கிலில் பெப்சி செடிகளை வளர்ப்பது போல தொண்டி பகுதியில் கயிறுகளில் கட்டி வளர்க்கிறார்கள். கடலில் பாசி அல்லது செடிகளை வளர்ப்பது உலக நாடுகளில் நடக்கிறது. இந்தியாவில் ராமேஸ்வரம் பகுதியில்தான் அதிக அளவில் கடல் பாசி சாகுபடி அதிகம் நடக்கிறது " என்கிறார் 70 வயதிலும் கடல் நீரில், வியர்வையைச் சிந்தும் பஞ்சாம்மாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com