எலுமிச்சையின் பயன்கள்!

உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழம் எலுமிச்சை. மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களைக் குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது.
எலுமிச்சையின் பயன்கள்!
Published on
Updated on
2 min read

உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழம் எலுமிச்சை. மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களைக் குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் இந்தியாதான். முதன்முதலாக 1784-இல் கார்ஸ்வில் ஹெம்மீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார்.

எலுமிச்சையில் பழம், விதை, தோல் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

வயிற்று பொருமலுக்கு:

சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிற்றில் வாயு சேர்ந்து தொல்லைக் கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லை நீங்கும்.

தாகத்தைத் தணிக்க :

தற்போது கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் இருக்கிறோம். கோடை வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு கப் நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரைக்குப் பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.

கல்லீரல் பலப்பட :

எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.

தலைவலி நீங்க :

ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியைப் பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாள்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.

நீர்க் கடுப்பு நீங்க :

வருவது வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்னை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.

பித்தம் குறைய :

எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்த பின் நன்றாகப் பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.

இன்னும் நிறைய :

எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தரும். மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்றவற்றிற்கு நல்லது. எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.

*நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும்.

*எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.

*மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.

*மூலத்திற்கு சிறந்த மருந்தாகும். எலுமிச்சம் பழத்தின் மருத்துவப் பயன்களை உணர்ந்து ஆரோக்கியம் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com