பொதுவாக தலைமுடி உதிர்விற்கு பொடுகு ஓரு முக்கிய காரணம். பொடுகு முடியின் வேர்ப்பகுதியில் இருந்து பாதித்து, வேர்களை பலவீனமாக்குவதோடு, முடி வெடிப்பு மற்றும் தலைமுடி உதிர்விற்கு வழிவகுக்கும். வீட்டின் சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே அதிலிருந்து நிவாரணம் பெற சில வழிகள்:
வேப்பிலை
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது பொடுகை சரிசெய்ய உதவுவதோடு, பல்வேறு கூந்தல் சம்பந்தமான பிரச்னைகளையும் போக்கும். வாரத்திற்கு 2 முதல் 3 முறை ஒரு கையளவு வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவைத்து பின்னர் அந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். இதனால் விரைவில் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்யில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது பொடுகை விரட்ட உதவும். அதோடு இது வறண்ட தலைச் சருமத்திற்கு ஈரப்பசையை வழங்கி, வறட்சியால் ஏற்படும் தலை அரிப்பில் இருந்து விடுவிக்கும். அதற்கு சிறிது தேங்காய் எண்ணெய்யில், பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து, அந்த கலவையை தலையில் தடவி சில நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து, பின் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்தில் 2 முறை செய்யலாம்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் உள்ள அமிலம், பொடுகை உண்டாக்கும் பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும். மேலும் இது தலைச் சருமத்தில் ஏற்படும் அரிப்பில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். பாதியளவு எலுமிச்சை சாறினை தயிருடன் சேர்த்து கலந்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
வெந்தயம்
வெந்தயத்தில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது பொடுகுத் தொல்லையைக் கட்டுப்படுத்த உதவும். அதற்கு 2}3 தேக்கரண்டி வெந்தயத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து, அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, தலைச்சருமத்தில் தடவி சில மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்ய பொடுகு காணாமல் போகும்.
கொய்யா இலை
கொய்யா இலை பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் சிறந்த மருத்துவ குணம் கொண்டுள்ளது. வாரத்தில் 3 முறை 4 கொய்யா இலையை எடுத்து தயிருடன் கலந்து விழுதாக அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசி வர நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும், முடி உதிர்வு நின்று முடி நன்கு செழித்து வளரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.