சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா கிருஷ்ணன். தமிழ்ப்பேராசிரியையாகப் பணியாற்றும் இவர் தொல்லியல் ஆய்வாளராகத் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்துள்ளார். ஐந்து நூல்களின் ஆசிரியர். தொல்லியல் ஆய்வு பயணம் குறித்து அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்:
தமிழ்ப்பேராசிரியை தொல்லியல் ஆய்வாளாராக மாறியது எப்படி?
நான் அனைவரிடமும் வலியுறுத்துவது தமிழ்ப்பேராசிரியராக அல்லது வேறு துறை பேராசிரியராக இருந்தாலும் குறைந்தது இரு துறை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே. எனக்கு சிறுவயதிலிருந்தே வரலாறு பிடித்த பாடம். மிக பழைமையான ஆலயங்கள் நினைவு சின்னங்கள் பார்க்கச்செல்லும் போதெல்லாம் ஆர்வமும் அது குறித்து அறிய விருப்பமும் ஏற்படும். ஒரு நாள் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த போது நடுகல் குறித்து சொல்ல வேண்டி வந்தது. அப்போது எனக்கு அது குறித்தான சரியான புரிதல் இல்லை. பாடத்தில் இருந்ததைச் சொல்லிவிட்டு சென்றாலும் அது குறித்தான தேடல் மெல்ல எழுந்தது.
ஆதலால் நான் தொல்லியல் சார்ந்து படிக்க விரும்பினேன். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருந்தது. வேலையை விட்டு செல்வதும் இயலாத நிலை. கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தேன். வகுப்புகள் சனி ஞாயிறு மட்டும். என்னுடைய ஆர்வத்தின் காரணமாக சென்னையிலிருந்து வாரந்தோறும் சென்று வருவேன். உடன் படித்தவர்கள் பல்வேறு வேலைப்பார்க்கக் கூடியவர்கள். வித்தியாசமான அனுபவம் அது. அதன் பின் நான் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தொல்லியல் பகுதிகளைப் பார்வையிட்டு நிறைய நூல்களைப் படித்து, பல்வேறு தொல்லியல் ஆய்வாளர்கள் பேராசிரியர்களிடம் கேட்டு எனது அறிவை வளர்ந்த்துக் கொண்டேன்.
உங்கள் பயணத்தில் ஏற்பட்ட இடர்பாடுகள் பற்றி?..
எனது கள ஆய்வுகள் அனைத்தும் சுவாரசியமானது. கள ஆய்வுகளுக்குச் செல்லும் போது அலைச்சல் நிறைய இருக்கும் . அந்த நேரத்தில் உணவு, தண்ணீர் என்று எதுவுமே கிடைக்காது. பல இடங்களுக்குச் சென்று ஒன்றும் இல்லாமல் வந்ததும் உண்டு. அந்த சமயங்களில் வருத்தம் இருந்தாலும் அடுத்து அடுத்துத் தேடல்கள் ஆர்வத்தை மட்டுமே தந்திருக்கின்றது. எனது வாழ்க்கையின் புதுப்பயணம். தொல்லியல் தொடர்பான கண்டறிதலில் சிக்கல் இருக்காது. அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் பெரிய சிக்கல் ஒன்று உள்ளது. இதற்கு முன்பு இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளதா என்பதில் பல சிரமங்கள் உண்டு. ஆவணம் போன்ற நூல்களில் தேடினாலும் எல்லாமும் ஒரே இடத்தில் இருக்காது. ஏன்னெனில் இந்தத் துறைக்கு வெறும் படிப்பு மட்டும் போதாது.அதற்கான ஆர்வமும் மெனக்கெடலும் வேண்டும். நான் ஒரு தனியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொல்லியல் பட்டயப்படிப்புக்கான முன்னெடுப்பை அவர்களிடம் தெரிவித்து எல்லாமும் நிறைவேறும் நேரம் வந்தபோது அவர்கள் இதற்குப் பணி வாய்ப்பு இல்லை என்பதால் தயங்கினார்கள். இது தான் இன்றைய நிலை.ஆர்வமும் சமூக அக்கறையும் மட்டுமே என்னைப் போன்றவர்களை இயங்க வைக்கின்றது.
கள ஆய்வுகளில் தொல்லியல் துறை சார்ந்து மட்டும் இயங்குவீர்களா?
கள ஆய்வுகளில், தொல்லியல் மற்றும் வரலாறு சார்ந்து மட்டும் பார்ப்பதில்லை. மக்களின் வாழ்வியல் வழக்காறு
களையும் உணவு முறைகளையும் கூட பதிவு செய்து
வருகின்றேன். ஏற்காடு மக்கள் பற்றி ஒரு வாரம் அவர்களுடன் இருந்து தரவுகளைச் சேமித்து 2005- இல் ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கின்றேன். அதே போல் மயான கொள்ளை குறித்து நேரிடையாகச் சென்று 2006- ஆம் ஆண்டு ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கின்றேன். தொல்லியல் சார்ந்து தொடர்ந்து பயணப்பட்டு கொண்டிருப்பது ஆத்ம திருப்தி தருகிறது.
பெண்கள் இத்துறைக்கு வருகிறார்களா?
தற்போது பெண்கள் ஆர்வமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் புதியதாக அடையாளப்படுத்துபவர்கள் என்றால் அவ்வளவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது நிறைய வாய்ப்புகள் உண்டு. பயன்
படுத்திக்கொள்ளலாம்.
நான் மாணவ, மாணவிகளுக்கு அடிப்படைத் தொல்லியல் அறிவைப் புகட்ட வேண்டும் என்று பள்ளிகள் கல்லூரிகள் என உரையாற்றி வருகின்றேன். கள ஆய்வுகளில் கேட்பாரற்று இருக்கும் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் படி எப்போதும் வலியுறுத்தி வருகின்றேன்.
எனது தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவம் மூலமாக அண்மையில் "கிறுக்கலாம் வாங்க' என்ற நிகழ்ச்சி வாயிலாகக் கல்லூரி மாணவர்களைக் கொண்டு வைத்தீஸ்வரன் கோயிலில் மரபு சின்னங்களை பாதுகாப்பது குறித்து நிகழ்ச்சி நடத்தினேன். அது பொது மக்களிடம் பெரிய அளவில் வரவேற்ப்பைப் பெற்றது.
நூலகத்திற்கு புத்தகம் கொடுத்து உதவுகிறீர்களாமே?..
ஆவடி அருகேயுள்ள முத்துப்பேட்டை பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆதரவற்ற மாணவர்களுக்கான நூலகம் உள்ளது. அதற்கு என்னால் முடிந்த புத்தகங்களை வழங்கியிருக்கிறேன். மாணவர்களின் வாசிப்புத்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு எனது முகநூல் நண்பர்களின் உதவியோடு ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு நூல்களை வழங்கியுள்ளேன். குழந்தைகளுக்கு கல்வியே சிறந்த துணை.நூலறிவே தன்னம்பிக்கை என்று எண்ணுகின்றேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.