நாட்டுப்புறக் கலைஞர்களை வாழ வைப்போம்!: நிதி திரட்ட சேலைகளை வழங்கிய கலைஞர்கள்

கரோனா தொற்று கீழ்த்தட்டு மக்களையும், விளிம்பு நிலை மக்களைப் போலவே நாட்டுபுறக் கலைஞர்களின் வாழ்வாதரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.  
நாட்டுப்புறக் கலைஞர்களை வாழ வைப்போம்!: நிதி திரட்ட சேலைகளை வழங்கிய கலைஞர்கள்

கரோனா தொற்று கீழ்த்தட்டு மக்களையும், விளிம்பு நிலை மக்களைப் போலவே நாட்டுபுறக் கலைஞர்களின் வாழ்வாதரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. கிராமியக்கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில், அவர்கள் வருவாய் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவ நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது பெங்களூரில் இயங்கிவரும் "ஃபண்ட்ஸ் ஃபார் ஃபோல்க்ஸ்' என்ற அமைப்பு. இந்த அமைப்பைச் சேர்ந்த கலை ஆலோசகரான ஸ்ரேயா நாகராஜன் நடனக் கலைஞரான கிறிஸ்டோபர் குருசாமி மற்றும் இசையமைப்பாளரான டென்மா மூவரும் மிகவும் புதுமையான முயற்சியில் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது பற்றி ஸ்ரேயா, கிறிஸ்டோபர் இருவரிடமும் கேட்டபோது:

"பொதுமுடக்கக் காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டி, அவர்களின் குடும்பத்தினருக்கு அத்தியாவசியமான மளிகைப் பொருட்கள், முகக் கவசம், சானிடைசர் போன்ற தொற்று பாதுகாப்பு பொருட்கள், அவர்களின் குடும்பத்துப் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் போன்றவற்றை அளிக்கிறோம். சுமார் நான்கு அல்லது ஆறு வாரங்களுக்குப் பின் அவர்களின் தேவைக்கு ஏற்ப மீண்டும் அந்தப் பொருட்களை அளிக்கிறோம்.

முதல் கட்டமாக, வட சென்னையைச் சேர்ந்த சுமார் நானூறு கானா பாடகர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்தோம். அடுத்த கட்டமாக மதுரை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளைச் சேர்ந்த கிராமியக் கலைஞர்களுக்கு உதவ இருக்கிறோம். அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் கலைஞர்களுக்கு உதவிகள் சென்றடையத் திட்டமிட்டிருக்கிறோம்.

அண்மையில் இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் நன்கொடையாக அளித்த பட்டுச் சேலைகளை ஏலம் விட்டு நிதிசேர்த்த அனுபவம் குறித்து?

இருபது லட்சம் ரூபாய் வரை நன்கொடை திரட்டவேண்டும் என்பது எங்கள் லட்சியம். சுமார் 18 லட்சம் ரூபாய் வரை திரட்டிவிட்டோம். அடுத்து நிதி திரட்ட புதுமையாக என்ன செய்யலாம்? என்று யோசித்தபோது தோன்றிய ஐடியாதான் இந்த பிரபலங்களின் பட்டுச் சேலை ஏலம்.

உடனே பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு அவர்கள் உடுத்திய ஒரு பட்டுச் சேலையை நன்கொடையாகத் தரும்படிக் கேட்டோம். எங்கள் ஐடியாவைக் கேட்டு அவர்கள் பாராட்டியதுடன், உடனடியாக தங்களுக்குப் பிடித்த பட்டுச் சேலையையும் கொடுத்து விட்டார்கள்.

அதிலும் குறிப்பாக பலர் காஞ்சிபுரம் பட்டுச் சேலையாகவே கொடுத்தது எங்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, செளம்யா, நித்யஸ்ரீ மகாதேவன் போன்ற இசைக்கலைஞர்களும், சித்ரா விஸ்வேஸ்வரன், சுதாராணி ரகுபதி, அலர்மேல் வள்ளி, அனிதா ரத்னம், ஊர்மிளா சத்யநாராயணா, பிரியதர்ஷிணி கோவிந்த், ஸ்ரீநிதி சிதம்பரம், ரமா வைத்தியநாதன் என்று பல பரத நாட்டியக் கலைகளும் இந்தப் புதுமையான முயற்சியில் பங்களித்து உதவினார்கள்.

ஸ்ரேயா குழுவினருக்கு, பிரபலங்களின் பட்டுச் சேலைகளை ஆன்லைன் மூலமாக ஏலம் விடுவதற்கு ஏற்பாடு செய்தவர் மயிலை பஞ்சவர்ணம் சில்க்ஸ் விஜயலட்சுமி கணேஷ். அவர் கூறியதாவது:

""எங்களுடைய இன்ஸ்டாகிராம் தளம் மூலமாக கடந்த மாதம் 14-ஆம் தேதி துவங்கி தினம் நான்கு சேலைகளை அவை யாருடையவை என்று புகைப்படங்களோடு வெளியிட்டு, ஆன்லைன் மூலமாகவே ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்தோம். மொத்தம் பதினெட்டு சேலைகள் நான்கு பகுதிகளாக தலா மூன்று நாட்களுக்கு ஏலம் நடந்தது.

இந்த ஆன்லைன் ஏலத்துக்குக் கிடைத்த ரெஸ்பான்ஸ் எங்களை திக்கு முக்காடச் செய்து விட்டது! இந்த நலிந்த கலைஞர்கள் நல உதவித் திட்டத்தில் பங்கேற்றதில் எனக்கு ஆத்ம திருப்தி. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை போன்ற இந்திய நகரங்களில் இருந்து மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து கூட ஆர்வலர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த புதுமையான ஆன்லைன் சேலை ஏலத்தின் மூலமாக மொத்தம் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் கிடைத்தது.

இந்த ஏலத்தில் மிக அதிக பட்சமாக பாம்பே ஜெயஸ்ரீ அளித்த சேலை ரூ. 26,500 க்கு அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் ஏலத்தில் வாங்கினார்.

ஆனால், அவர் தான் யார் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்பவில்லை. அடுத்து, ஊர்மிளா சத்யநாராயணா அளித்த சேலை 22 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. மற்ற எல்லா சேலைகளும் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை விலை கொடுத்து பலரும் வாங்கினார்கள் என்பது மகிழ்ச்சியான சேதி''
என்றார்.
""மிகவும் அபூர்வமாகவே நான் பட்டுச் சேலைகள் உடுத்துவேன். ஆனாலும், இசைக்கலைஞர் என்ற முறையில், இந்த கரோனா தொற்றுக் காலத்தில் கிராமியக் கலைஞர்களுக்கு உதவும் நல்ல நோக்கத்தோடு நடத்தப்படும் இந்த ஏலத்துக்குஎன்னுடைய பொக்கிஷமான கலாசேத்திரா கண்காட்சியில் வாங்கிய சேலையைக் கொடுத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி"" என்று உணர்ச்சி பொங்கக் கூறினார் கர்நாடக இசைக்கலைஞர் செளம்யா.

ஆன்லைன் ஏலத்தில் சுதாராணி ரகுபதி அளித்த சேலையை வாங்கியவரான ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுடன் தொடர்புகொண்டபோது, அவர் கூறியது: ""நான் பெற்ற சேலை எனக்கு ஒரு பொக்கிஷம். காரணம், அது என்னுடைய பரத நாட்டிய குருவான சுதாராணியின் சேலை. ஒரு பரத நாட்டியக் கலைஞரான எனக்கு இது இரட்டை மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒன்று: சேலை என் குருவுடையது; இரண்டு: நான் அளித்த தொகை, நலிந்த கலைஞர்களுக்கு உதவப் போகிறது. நினைத்தாலே நெஞ்சம் நெகிழ்கிறது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com