சித்திரக்கதையில் ஓவியர் ராஜா ரவிவர்மா!

மேல் நாடுகளில் பிரபலமான ஓவியர்களின் வாழ்க்கை வரலாற்றை பலரும் தெரிந்து கொள்ளும் வகையில் புத்தகமாக வெளியிடுவதுண்டு.
சித்திரக்கதையில் ஓவியர் ராஜா ரவிவர்மா!
Updated on
1 min read


மேல் நாடுகளில் பிரபலமான ஓவியர்களின் வாழ்க்கை வரலாற்றை பலரும் தெரிந்து கொள்ளும் வகையில் புத்தகமாக வெளியிடுவதுண்டு. ஒவ்வொரு நாட்டிலும் தங்களுடைய பிரபல ஓவியர்களை சிறுவர் முதல் பெரியவர் வரை அறியச் செய்வதுண்டு. சில ஓவியர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாகவே வெளிவந்துள்ளன.

இந்தியாவில் பிரபலமான ஓவியர்களில் குறிப்பிடத் தகுந்தவர் ராஜா ரவிவர்மா, பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய கலாசாரத்தையும், இதிகாசங்களையும், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டினரும் அறிந்து கொள்ளும் வகையில் இவர் வரைந்த ஓவியங்கள், அன்றைய
மன்னர்களின் அரண்மனையிலும், பிரபலமானவர்கள் இல்லங்களிலும் இடம் பெறுவதை பெருமையாக கருதினர்.

இவரது வாழ்க்கையை நம்முடைய குழந்தைகளும் சுலபமாக தெரிந்து கொள்ளும் வகையில் ஷோபா தரூர் சீனிவாசன், ராஜா ரவிவர்மாவின் வாழ்க்கையை சிறுவர்களுக்காக சித்திரக்கதை வடிவத்தில் "பிரின்ஸ் வித் எ பெயிண்ட் பிரஷ் - தி ஸ்டோரி ஆப் ராஜா ரவிவர்மா' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். இதற்கு பொம்மைகள் வடிவமைப்பாளரும், ஓவியருமான ரெய்க்காசென் ஓவியங்களை வரைந்துள்ளார்.

ரவிவர்மாவின் வரலாற்றை சிறுவர்களுக்காக சித்திரக்கதை வடிவத்தில் கொண்டு வர வேண்டுமென்ற எண்ணம் எப்படி தோன்றியது? சிறுவர்களிடம் வரவேற்பு இருக்குமா? என்று கேட்டோம்:

""நிச்சயமாக, குழந்தைகள் சித்திரக்கதை என்றால் விரும்பி படிப்பதுண்டு. முதலில் பிரபலமான இந்திய ஓவியர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி புத்தகமாக வெளியிட வேண்டுமென்ற எண்ணம் இருந்தது. கூடவே அதற்கேற்ற ஓவியங்கள்,

கவிதைகளையும் தொகுத்து வெளியிட விரும்பினேன். அப்போதுதான் 19- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரளாவைச் சேர்ந்த பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மா, மேல்நாட்டு ஓவியர்களுக்கு இணையாக இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வண்ணக் கலவையில் ஓவியங்களை வரைந்து உலக அளவில் பிரபலமாகி இருந்தது நினைவுக்கு வந்தது. இவரது ஓவியங்களை கேரளாவில் எங்கள் வீடு உள்பட பலரது வீடுகளில் பார்த்திருக்கிறேன். இவரது வாழ்க்கை ஏற்கெனவே புத்தகமாக வந்திருப்பதால் சிறுவர்களை ஓவியக் கலையில் ஊக்குவிக்கும் பொருட்டு சுலபமாக படிக்கும் வகையில் சித்திரக்கதையாக வெளியிடலாமென்று கூறிய என்னுடைய தோழி ஓவியர் ரெய்க்கா சென், ஓவியங்களை வரைந்து தர முன்வந்தார்.

இவரது வாழ்க்கையிலும் பல சுவையான சம்பவங்கள் உள்ளன. போக்குவரத்து வசதியற்ற காலத்தில் தன்னுடைய ஓவிய கண்காட்சியை நாடெங்கும் நடத்தியதோடு தன்னுடைய ஓவியங்களை பிரதி எடுத்து அச்சிடுவதற்காக மும்பையில் லித்தோ பிரஸ் தொடங்கியது சாதாரண விஷயமல்ல. இந்த சம்பவங்கள் மிகவும் சுவையுடன் இப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் சிறப்பாக வெளிவர எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த நண்பர்களைப் பற்றியும் நிச்சயம் குறிப்பிட வேண்டும்'' என்கிறார் ஷோபா தரூர் சீனிவாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com