சட்டம் படிக்க கல்விச் சலுகை பெற்றவர்!

பதினான்கு  வயதிலேயே சட்டம் படித்து  வழக்குரைஞராக  வேண்டுமென்ற  குறிக்கோளுடன்  வளர்ந்த  சஹானா  ராம்தாஸ், தன் விருப்பப்படியே
சட்டம் படிக்க கல்விச் சலுகை பெற்றவர்!


பதினான்கு  வயதிலேயே சட்டம் படித்து  வழக்குரைஞராக  வேண்டுமென்ற  குறிக்கோளுடன்  வளர்ந்த  சஹானா  ராம்தாஸ், தன் விருப்பப்படியே பெங்களூர் சட்டக் கல்லூரியில் படித்து  பட்டம் பெற்று வழக்குரைஞரானார்.  தொழிலில்  நல்ல புகழையும்,  வருமானத்தையும் பெற்று  வந்த சஹானாவுக்குக் கூடவே  பிராணிகள் நலன் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு  போன்ற சமூக  நலன்களிலும்  அக்கறை இருந்தது.

  இயற்கைச் சூழலை  பாதுகாக்க வேண்டுமென்று  தன்னைப் போலவே  ஒத்த கருத்துள்ளவர்களையும், பிராணிகள்  நல ஆர்வலர்களையும் ஒருங்கிணைத்து  தனியார் தொழில் நிறுவனங்கள்,  தொண்டு  நிறுவனங்கள்  மூலம்  உலக  அளவில் புவி வெப்பமடைதல் மாற்றம் குறித்தும்  விழிப்புணர்வை  ஏற்படுத்த  கருத்தரங்குகள்  நடத்த தீர்மானித்தார்.  இதற்காக  தெற்கு  ஆசியாவில்  உள்ள பிரபலமான  பிராணிகள்  நல அமைப்புகளான  வனவிலங்குகள் எஸ்.ஓ.எஸ்.  மற்றும் பிரண்டிகோஸ்  எஸ்.இ.சி.ஏ என்ற  இரு அமைப்புகளுடன்  தொடர்பு  கொண்டு பயிற்சிப் பெறத் தொடங்கினார். 

அப்போதுதான்  அமெரிக்காவில்  போர்ட்லாண்டில்  உள்ள  லூயிஸ்  அண்ட்  கிளார்க்  எஸ்.எஸ்.எம் திட்டத்தின் கீழ் விலங்கியல்  சட்டம்  படிப்பவர்களுக்கு  கல்விச் சலுகை  அளிப்பதாகவும்  சஹானாவுக்குத் தெரியவந்தது.
  விலங்கியல்  சட்டம்  படிப்பது  தன்னுடைய  வழக்குரைஞர்  தொழிலுக்குக் கூடுதல்  பலத்தைக் கொடுக்கும்  என்று கருதிய  சஹானா  விலங்கியல்  சட்டம்  படிக்க  தீர்மானித்தார்.  இந்தியாவில்  விலங்கியல்  சட்டம்  படிப்பது   சுலபமானது  அல்ல.  ஆண்கள்  போல் பெண்களால் வாதாட  முடியாது  என்ற கருத்தும்  நிலவி வந்தது.  ஆண்களும்  வரும் வழக்குகளை  அத்தனை சுலபமாக  பெண்களுக்கு  விட்டுக் கொடுப்பதில்லை.

இருப்பினும்  விலங்கியல்  சட்டம்  பயிலவும்,  கல்விச் சலுகை  பெறவும்  விண்ணப்பிக்க முடிவு செய்தார்.  இதில்  தேர்வு  பெறுவது  கடினமென்பதோடு  உலக அளவில்  போட்டியும்  அதிகம்.  எப்படியும்  தனக்கு  வாய்ப்பு  கிடைக்கும்  என்ற நம்பிக்கையோடு சஹானா,  ஆசியாவில்  உள்ள பிரபலமான  பிராணிகள்  நல அமைப்பில்  பயிற்சிப்  பெற்ற அனுபவங்களை  குறிப்பிட்டு  விண்ணப்பத்தை  அனுப்பி வைத்தார்.  அவருடைய  நம்பிக்கை  வீண்போகவில்லை.  கல்விச்சலுகையுடன்  நியூயார்க்கில்  உள்ள  பேஸ்  யூனிவர்சிடியில்  இடம் கிடைத்தது.  இதன் மூலம் "குளோபல்  என்விரோன்மெண்ட்  லா இன்  எலிசபெத்  ஹப்  ஸ்கூல்  ஆஃப் லா' பட்டம்  பெற்றார்.  "இன்டர்நேஷனல் அட்வகேட்ஸ் அனிமல் லா ஸ்காலர்ஷிப்'  பெற்ற  முதல்  இந்தியப் பெண் என்ற பெருமையும்  சஹானாவுக்குக் கிடைத்தது.
 ஏற்கெனவே  வழக்குரைஞரான அவர், கூடுதலாக  விலங்கியல்  சட்டம் படிக்க வேண்டிய அவசியம் என்ன? கூறுகிறார்.


 ""என்னுடைய  சிறு வயதில்  தெருவில்  திரியும் விலங்குகளை கொடுமைபடுத்துவதையும்,  விஷம் வைத்து கொல்வதையும் பார்த்திருக்கிறேன்.  வீட்டுப் பிராணிகளை  கூட  அதன் உரிமையாளர்கள்  அடித்துத் துன்புறுத்துவதையும்  பார்த்தபோது,  சட்டப்படி  இவர்களுக்கு தண்டனை  வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று  விரும்புவேன்.  கூடவே  சுற்றுச் சூழலை  மாசுபடுத்துபவர்களையும் தண்டிக்க  விரும்பினேன். இயற்கை  ஆர்வலர்களுடன்  கை கோர்த்தபோதுதான்  இதற்கான  தனி சட்டங்கள் இருப்பது  தெரிந்தது.  தெற்கு  ஆசியாவில்  உள்ள இருபிராணிகள்  நல அமைப்புகளில் பயிற்சிப்  பெறும்போதே  விலங்கியல்  சட்டம்  தொடர்பான  வழக்குகளில்  மூத்த  வழக்குரைஞர்கள்  மற்றும்  அரசு வழக்குரைஞர்களுக்குத் தேவையான  குறிப்புகளை  கொடுக்கவும்,  வாதாடவும் வாய்ப்புகள்  கிடைத்தன.  இதன்மூலம்  பிராணிகளை  கடத்துவது,  கொல்வது,  சித்ரவதை செய்வது  போன்ற வழக்குகளில்  தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளேன்.  சுற்றுச் சூழல்  பாதுகாப்பு  குறித்தும்  விழிப்புணர்வை  ஏற்படுத்தி  வருகிறேன்'' என்றார்  சஹானா ராம்தாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com