
கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்த 105 வயது பாப்பம்மாள் பாட்டிக்கு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. தனியார் விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தவரை அவரது பேரன் பாலசுப்பிரமணியம் துணையுடன் நேரில் சந்தித்து பேசினோம்:
""எனக்கு இந்த வயசுல பெரிய விருது கிடைக்கும்னு நினைக்கல கண்ணு.. ஏதோ அந்த கடவுள் இதெல்லாம் நான் பார்க்கணும்னு கொடுத்து வைச்சிருக்காரு.. நீங்க எங்க இருந்து சாமி வர்றீங்க'' கோயம்புத்தூர் பாஷையில் இயல்பாக நம்மிடம் கேள்வி கேட்டப்படி பேச தொடங்குகிறார் பாப்பம்மாள் பாட்டி.
பத்மஸ்ரீ விருது கிடைத்தது எப்போது தெரியும்?
ஜனவரி மாச கடைசியல, என் பேரன் போனுக்கு தில்லியில இருந்து போன் வந்துச்சு. நாங்க உள்துறை ஆபிசில் இருந்து பேசுறோம்னு பெரியவர் ஒருத்தர் பேசினாரு. பாப்பம்மாள் பாட்டி இருக்காங்களான்னு கேட்டதும், என் பேரன் என்கிட்ட போனை கொடுத்தான். ஐயா சொல்லுங்கன்னு கேட்டேன். நீங்க பாப்பம்மாள் பாட்டி தானேன்னு கேட்டாங்க. ஆமான்னு சொன்னேன். "உங்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்போறோம். கொடுக்கலாமான்னு' கேட்டாங்க. "கொடுங்கய்யான்னு' சொன்னேன். விருது
விஷயமா எதுவும் வெளியில சொல்லிக்க வேணாம். இன்னும் இரண்டு நாள் கழிச்சு கூப்பிடுறோம்னு சொல்லி போனை வைச்சுட்டாங்க. அன்னைக்கு நைட்டே என்னோட பெயரை டி.வியில சொல்லிட்டாங்க. மறுநாள் காலையில எல்லா பேப்பரிலும் பெயர் வந்துருச்சு. அதை பார்த்து ஊரு பெரியவுங்க எல்லாரும் வீடு தேடி வந்துட்டாங்க. உங்களால இந்த ஊருக்கு பெருமைன்னு என்னைய வாழ்த்திட்டு போனாங்க. அதுக்கு அப்புறம், பத்திரிகைகாரங்க, டி.விகாரங்க வந்து படம் பிடிச்சாங்க. அப்போ இருந்து இப்போ வரை நான் பிசியா தான் இருக்கேன்.
பிரதமர் மோடி உங்களை வரவழைத்து பார்த்தாராமே?
ஆமா கண்ணு. அவர் கோயம்புத்தூர் கொடிசியா வந்தப்ப என்னை பார்க்கணும்னு வர சொல்லியிருந்தார். போனேன். எனக்கு டெஸ்ட் எல்லாம் பண்ணினாங்க. அதுக்கு அப்புறம் என்னைய தனியா உட்கார வைச்சுட்டாங்க. அப்புறமா மோடி ஐயா வந்தாரு. தமிழ்ல "நல்லாயிருக்கீங்களான்னு' கேட்டு சிரிச்சாரு. அதுக்கு அப்புறம் ஹிந்தில தான் பேசுனாரு. கூட இருந்தவரு "கண்ணு தெரியுதான்னு ஐயா கேக்குறாங்கன்னு' சொன்னார். நல்லா தெரியுது சொன்னேன். "நீங்கள் நீண்ட ஆயுளோடு நல்லாயிருக்கணும்னு' நான் அவரை வாழ்த்தினேன். ரொம்பவே சந்தோஷப்பட்டு என்னை கும்பிட்டாரு. இவர எல்லாம் நான் நேர பார்ப்பேன்னு நினைச்சு கூட பார்க்கல சாமி!
இந்த வயதுல இவ்வளவு ஆரோக்கியமா இருக்கீங்க என்ன சாப்பிடுறீங்க அப்படி?
அந்த கால உடம்பு சாமி இது. கடுமையா உழைப்போம். காலையில நேரமே எந்திரிச்சு வயகாட்டுக்கு போனா மதியம் 2 மணி வரை வேல செய்வேன். இப்போ வாழை போட்டிருக்கேன். அதனால் வேல கம்மி. இரண்டு நாளுக்கு ஒரு தடவை போய் தண்ணி பாய்ச்சிட்டு வருவேன். மதியம் சாப்பட்டுட்டு தூங்கிடுவேன். சாயங்காலம் காபி குடிச்சுட்டு தெரிஞ்சவுங்க கிட்ட பேசிட்டு இருப்பேன். 6.30 நியூஸ் கேப்பேன். நைட்டுக்கு 2 இட்லி ரொம்ப அளவா தான் சாப்பிடுவேன். 9.30 தூங்க போயிடுவேன். எனக்கு இப்போ வரை எந்த நோயும் கிடையாது சாமி.
அந்த காலத்துல கேப்பை, கம்பு, சோளம், வரகு, சாமை, தினைனு ஆரோக்கியமா சாப்பிட்டோம். ஏதாவது பண்டிகை வந்தால் தான் அரிசிச் சோறு. அப்பவும், கொஞ்சமாதான் சாப்பிடுவோம். இப்பவும், காலைல குளிச்சப்புறம், வாழை இலைலதான் சாப்பிடுறேன். நல்லா வெந்துருக்கணும். ஒரு, இட்லி, ஒரு தோசைனு சாப்பிடுவேன். கறி குழம்பு ரொம்பப் பிடிக்கும். அப்போ ரெண்டு இட்லி கூட சாப்பிடுவேன். கொத்துமல்லி காப்பி மட்டும் குடிப்பேன்.
உங்களுக்கு எத்தனை பிள்ளைங்க பாட்டி?
எனக்கு குழந்தையில்ல சாமி. என்னோட தங்கச்சிய ரெண்டாம் தாரமா என் புருஷனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சாங்க. அவளுக்கு ஒரு பெண் குழந்தை. அவளும் வளர்ந்து டீச்சர் வேல பார்த்து ரிட்டையர்டு ஆகிட்டா இப்போ. இது என்னோட அக்கா மகன் பாலு. எல்லாரும் என்னைய அவங்க பிள்ள மாதிரி பார்த்துகுறாங்க.
உங்களுக்கு விவசாயம் ரொம்ப பிடிக்குமா?
ஆமா சாமி. என்னோட உசுரு. அக்ரி காலேஜ் விவாத குழு அமைப்பாளரா இருந்தேன். அவினாசி அக்ரி காலேஜ் போவேன். அவங்க கொடுக்கிற எல்லா பயிற்சியிலையும் கலந்துப்பேன். கோயம்புத்தூர் யுனிவர்சிட்டியில இருந்து என்னை கூப்பிடுவாங்க போவேன். நாத்து கொடுத்து ஊரு முழுக்க நட சொல்லுவாங்க நடுவேன். இதுவரை எட்டாயிரம் வேப்ப நாத்து ஊருல நட்டியிருக்கேன். என்னோட இரண்டரை ஏக்கர் நிலத்துல நவதானியம் எள்ளு, கொள்ளு, தட்டாம்பயிறு, உளுந்துன்னு பயிர் வைப்பேன். அதுல வருமானம் கிடைக்கும். எனக்கு எல்லாமே இந்த மண்ணு தான் கண்ணு.
உங்களுக்கு வருமானம் என்ன பாட்டி?
விவசாயத்துல கிடைக்குறது தான். எங்களோட குடும்பமே விவசாயம் தான். அதுல கிடைச்ச லாபத்துல வீடு கட்டி வாடகைக்கு விட்டியிருக்கேன். அதுல மாசா மாசம் வாடகை வருது. தேவை போக மீதிய பேரன், பேத்திகளுக்கு கொடுத்துடுவேன்.
ஆரோக்கியமாக இருக்க என்ன செய்யணும் பாட்டி?
நல்லா கஷ்டப்பட்டு உழைக்கணும். நேரத்துக்கு சாப்பிடணும். எந்த நோயும் வராது. அப்போ யார் என்ன சொன்னாலும் காது கொடுத்து நாங்க கேட்போம். இப்ப, "நீ என்ன சொல்றது, நான் என்ன கேக்கறதுனு' இருக்காங்க. வயசானவங்களை யாருக்கும் பிடிக்கறது இல்லை. அப்ப நாங்க ஆஸ்பத்திரி பக்கமே போக மாட்டோம். மருந்தை எல்லாம் கண்ணுல பார்த்தது இல்ல. தலை வலி, வயித்து வலி எல்லாத்துக்கும் கை வைத்தியம்தான். உணவுதான் மருந்து. இதையெல்லாம் மறந்துட்டோம். இன்னைக்கு சீக்கு (நோய்) அதிகமாகிடுச்சு. சின்ன வயசுலே எல்லா கெட்ட பழக்கத்தையும் பழகிடுறாங்க.
உங்களுக்கு ரொம்ப பிடித்த விஷயம் எது பாட்டி?
அரசியல். டெய்லி நியூஸ் கேக்கணும். காலையில எந்திரிச்சதும் நியூஸ் கேட்பேன். அடுத்தது ராசிப்பலன் கேட்டுட்டு தான் குளிக்க போவேன். குளிக்காம சாப்பிட மாட்டேன். அதே மாதிரி சாயங்காலமும் என்ன வேல இருந்தாலும் நியூஸ் கேக்கணும். கலைஞரை சந்திக்கணும்னு ரொம்ப ஆசைபட்டேன்.முடியாம பேச்சு. இனி இருக்கிற காலம் வரைக்கும் மண், நம்மோட மனுஷங்கன்னு சந்தோஷமா இருந்துட்டு போயிடணும் சாமி, நம்மள மத்தவுங்க பாத்துகிறத விட, நாம மத்தவுங்கள பாத்துக்கணும்'' கையெடுத்து கும்படுகிறார் 105 வயது பாப்பம்மாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.