

சருமத்தில் தோன்றும் வெண்புள்ளிகளா, லூகோடெர்மா அல்லது விட்டிலிகோ என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. இது தொற்று நோயோ பரம்பரை வியாதியோ அல்ல. தோலின் கீழ் நிறமிகள் ( மெலனோசிடிஸ்) குறையும் போது தோன்றுவதாகும். இந்த நோய் பாதித்தவர்களை ஒதுக்க வேண்டியதோ அருவெறுப்புடன் பார்ப்பதோ தேவையில்லை. இந்திய மக்கள் தொகையில் இரண்டு முதல் ஐந்து சதவீதம் பேர் விட்டிலிகோ பாதிப்புக்குள்ளாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சுஷ்மிதா ஜெயின் சப்போர்ட் விட்டிலிகோ என்ற யூடியூப் சேனல் ஒன்றை துவக்கியுள்ளார்.
சப்போர்ட் விட்டிலிகோ என்ற யூடியூப்பை துவங்க வேண்டுமென்ற எண்ணம் ஏன் தோன்றியது? வெண்புள்ளிகள் தோன்றினால் குணப்படுத்த முடியுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு இங்கு விடையளிக்கிறார் சுஷ்மிதா ஜெயின்.
""உடலின் சருமப்பகுதிகளில் வெண்புள்ளிகள் தோன்றுவதற்கு கலப்புத் திருமணம் காரணமென்றும், இது சரும நோய், சரும புற்றுநோய், தொழுநோய் போன்ற நோய்களுடன் சம்பந்தப்பட்டது என்றும், இது முகம் மற்றும் கைகளில் மட்டுமே பரவக் கூடியது என்றும் சில தவறான கருத்துகள் கூறப்படுகின்றன. இது தோலின் கீழ் உள்ள நிறமிகள் எண்ணிக்கை குறையும்போது தோன்றுவதாகும். சிலருக்கு அதிகம் பரவாமல் நின்றுவிடும். ஒரு சிலருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி உடலின் நிறமே மாறுவதும் உண்டு. இது தொற்று நோயோ, பரம்பரை நோயோ அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
என்னுடைய சருமத்தில் முதன்முதலாக வெண்புள்ளிகள் தோன்றிய போது காரணம் புரியாமல் குழம்பினேன். மருத்துவர்களை அணுகினேன். இதைக் குணப்படுத்தவோ, மேலும் பரவாமல் கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கிறதா என்று கேட்டேன். நோய் வந்தால் முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றாலும் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என்று கூறி சில மருந்துகளையும் பரிந்துரை செய்தனர்.
2011- ஆம் ஆண்டு என்னைப் போல் விட்டிலிகோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றை தொடங்கினேன்.
விட்டிலிகோ பற்றி அனைத்து தகவல்களையும் திரட்டினேன். தொழு நோய்க்கும் இதற்கும் எந்தவித தொடர்பு இல்லையென்றாலும் இதை வெண்குஷ்டம் என்று கூறி மக்களை அச்சுறுத்துவதை விளக்கினேன். நமக்கு தெரிந்த தகவலை பிறருடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று தொடங்கிய வாட்ஸ் ஆப் குரூப்பில் நானே எதிர்பாராத வகையில், ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர். தங்கள் சந்தேகங்களை கேட்டனர். அனுபவங்களை கூறினர். நான் கூறுவதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இதன் பின்னரே சப்போர்ட் விட்டிலிகோ என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினேன்.
சருமத்தில் வெண்புள்ளிகள் தோன்றினால் அச்சமடைய தேவையில்லை. மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை வையுங்கள். இதனால் உடலில் மற்ற உறுப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இது குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த விடியோ ஒன்றை தயாரித்து 2017-ஆம் ஆண்டு வெளியிட்டேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏறக்குறைய ஒரு லட்சம் பார்வையாளர்கள் பதிவு செய்துள்ளனர். விட்டிலிகோ பாதிப்புக்குள்ளானவர்கள் மருத்துவ ஆலோசனை பெற உதவியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது தவிர பள்ளிகள், கல்லூரிகளிலும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்'' என்கிறார் சுஷ்மிதா ஜெயின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.