பருவநிலை மாற்றத்தால் உருவாகும் மாசைக் குறைக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஓர் அறக்கட்டளையை நிறுவியுள்ளார். அந்த அறக்கட்டளையின் மூலம் "எர்த்ஷாட்' என்ற பரிசு அளிக்கப்பட இருக்கிறது. விருதுக்காக ஒதுக்கப்பட்ட பரிசுத் தொகை மதிப்பு ரூ. 10.77 கோடியாகும்.
இந்தப் போட்டியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த எஸ்.கே.பி. இன்டர்நேஷனல் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி வினிஷா உமாசங்கரும் கலந்து கொண்டு, தான் கண்டுபிடித்த "சூரிய சக்தியால் இயங்கும் இஸ்திரி வண்டியை" உருவாக்கியதற்கான சான்றுகளைச் சமர்பித்துள்ளார். இவ்வாறு உலகம் முழுவதிலுமுள்ள இளம் கண்டுபிடிப்பாளர்கள் அனுப்பிய கண்டுபிடிப்புகளில் இருந்து 15 போட்டியாளர்களைத் தேர்வு செய்துள்ளனர். இவர்களில் வினிஷாவும் ஒருவர்.
கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற "பருவநிலை மாறுதலும் மாசு கட்டுப்பாடும்' மாநாட்டில் தலைவர்களுடன் பங்கு கொண்டு பேசுவதற்கு இளவரசர் வில்லியம் அனுமதித்ததால், வினிஷாவும் அதில் கலந்து கொண்டு பேசினார்.
அவரது பேச்சில், ""நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். பேச்சைக் குறைத்து செயலில் இறங்குங்கள். நீங்களே நடவடிக்கை எடுக்கும் காலம் வரை இன்றைய தலைமுறையினர் காத்திருக்க மாட்டோம். நாங்களே உலகை வழி நடத்துவோம். எதிர்காலத்தை நாங்களே கட்டமைப்போம். எங்களது அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறோம்'' என்று பேசி மேடையில் இருந்தவர்களையும் உலகத்தாரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளார் வினிஷா.
அரங்கில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பிடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உள்ளிட்டோர் இருந்தனர். இளவரசர் வில்லியம் வினிஷா பேசும்போது வியந்து பார்த்தார் - என்று பத்திரிகையில் செய்திகள் வெளியாகின.
வினிஷாவுடன் தந்தை உமாசங்கர், தாய் சங்கீதா இருவரும் கிளாஸ்கோவுக்கு சென்றிருந்தனர். தாய் சங்கீதா, வினிஷா படிக்கும் பள்ளியிலேயே விஞ்ஞானம் போதிக்கும் ஆசிரியையாக உள்ளார்.
வினிஷாவின் கண்டுபிடிப்பான சோலார் இஸ்திரி போடும் வண்டியின் உச்சியில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டு பாட்டரியில் இணைக்கப்பட்டுள்ளது. நல்ல வெய்யில் காலத்தில், 5 மணி நேரத்தில் 250 வாட் மின்சாரம் உற்பத்தியாகும் வகையில் இந்த இஸ்திரி போடும் வண்டி உருவாக்கப்பட்டுள்ளதாம்.