எம்.எஸ்ஸை அறிமுகப்படுத்திய சரோஜினி நாயுடு!

தமிழில் வெளியான "மீரா' படத்துக்கு ஹிந்தி உருவம் கொடுப்பதற்காக டி.சாதசிவம் அரும்பாடு பட்டார். அவருடைய முயற்சிகள் 1947 -இல் பூர்த்தியடைந்தது.
எம்.எஸ்ஸை அறிமுகப்படுத்திய சரோஜினி நாயுடு!
Published on
Updated on
1 min read

தமிழில் வெளியான "மீரா' படத்துக்கு ஹிந்தி உருவம் கொடுப்பதற்காக டி.சாதசிவம் அரும்பாடு பட்டார். அவருடைய முயற்சிகள் 1947-இல் பூர்த்தியடைந்தது.

ஹிந்தி "மீரா'வில் குழந்தை மீராவாக எம்.எஸ். சுப்புலட்சுமியின் மகள் குழந்தை ராதாவும், ராணி மீராவாக எம்.எஸ்.ஸூம் நடித்ததுடன் ஹிந்தியிலேயே வசனம் பேசிபாடினர்.

"மீரா' படம் முழுவதும் ஹிந்தியில் உருவான தகவல் அறிந்த "கவிக்குயில்' சரோஜினி நாயுடு அப்படத்தைப் பார்த்து பெரிதும் பரவசமடைந்தார்.

எம்.எஸ். சுப்புலட்சுமியை ஹிந்தி திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்துவதற்கு படத்தின் ஆரம்பத்தில் திரையில் தோன்றி பேசுவதற்கு சம்மதித்தார்.

சினிமா உலகம் முழுவதும் அறியப்பட்ட மாபெரும் சினிமா கலைஞராக எம்.எஸ். திகழ்ந்தார். அதிலும் சரோஜினி நாயுடு படத்தின் துவக்கத்தில் வெள்ளித் திரையெங்கும் வியாபிக்க ஆங்கிலத்தில் ஆற்றிய உரை உலகத்திரை இசை ரசிகர்களை மெய்மறக்கச் செய்ததுடன் எம்.எஸ்ஸை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

சரோஜினி நாயுடுவின் உரையில்..

""தென்னகத்தின் சுப்புலட்சுமியை வட இந்திய மக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் பெருமைப்படுகிறேன். அவர், தமிழில் நடித்த "மீரா'வை ஹிந்தியில் இப்போது வழங்குகிறார். மீரா வட இந்தியாவைச் சேர்ந்தவரானாலும் உலகம் முழுவதும் போற்றி உரிமை கொண்டாடும் பக்தை.

தென்னிந்தியாவிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் எம்.எஸ்.ஸின் இனிய குரலையும் அவரது தர்ம சிந்தனையையும் அறியும். ஆனால், வட இந்திய மக்களுக்கு இவை எல்லாம் இனிமேதான் தெரிய வேண்டும்.

எம்.எஸ்.ஸை விரைவில் நீங்களும் புரிந்து கொண்டு அவரைப் பாராட்டிக் கௌரவிக்க ஆரம்பிப்பதுடன், நம் நாட்டின் ஒப்பற்ற கலை மாமணிகளில் அவரும் ஒருவர் என்பதை உணர்வீர்கள்.

இதை நான் ஹிந்தியில் பேசாமல் இப்போது ஆங்கிலத்தில் பேசுகிறேன். ஏன் தெரியுமா வட இந்தியாவுக்கு மட்டுமில்லாமல் உலகம் பூராவுக்குமே இது தெரிய வேண்டும் என்பதற்காகத்தான். கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களை தமது உயர்ந்த கானத்தினால் இவர் எப்படிக் கவர்ந்திழுக்கிறார் என்பதை உலகின் ஒவ்வொரு மூலையிலுள்ளவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.

வரப்பிரசாதமாக அமைந்துள்ள அவரது குரலும் இசையும் அறிவும் அதில் அவர் பெற்றுள்ள திறமையும் பல உயர்ந்த நற்பணிகளுக்கு உதவி இருக்கின்றன என்பது பலருக்குத் தெரியாது.

நான் ஹிந்தி "மீரா'வைப் பார்த்தேன். வீரத்தின் நிலைக்களனாக விளங்கும் ராஜபுதனத்தின் பின்னணியில் அமைந்த சித்திரம். இதில் எம்.எஸ். மீராவாக நடிக்கவில்லை. மீராவே நம்முன் எழுந்து வந்திருக்கிறாரோ என்ற பிரமையை உண்டாக்கிவிடுகிறார்.

எனக்கு அவரது திறமையைப் பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்தத் தலைமுறையின் ஈடு இணையற்ற கலைஞராக அவர் விளங்கி வருவதைக் கண்டு நீங்கள் எல்லோருமே பெருமைப்படுவீர்கள்.

கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் அறிமுக உரையில் எல்லோரும் உணர்ச்சி வசப்பட்ட நிலைக்கு உள்ளாயினர்.

( "பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைக்காவியம்' என்னும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com