
சமீபத்தில் நடைபெற்று முடிவடைந்த பாராலிம்பிக் போட்டியில், இம்முறை முதன்முறையாக பேட்மிண்டன் போட்டிகள் சேர்க்கப்பட்டன. இதில் இந்தியாவின் சார்பில் 19 வயதான பாலக்கோலி பங்கேற்றார்.
பேட்மிண்டனில் மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய மூன்று பிரிவுகளில் விளையாடிய ஒரே இந்திய வீராங்கனையும் இவர் தான். உலக தரவரிசையில் 11-ஆவது இடத்தில் உள்ளார் பாலக்கோலி. இம்முறை பாராலிம்க்கில் வெற்றி பெறவில்லை என்றாலும் மனம் தளராமல், தனது அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க தயாராகிவருகிறார்.
பஞ்சாப் பகுதியின் ஜலந்தரில் பிறந்தவர் பாலக் கோலி. பிறக்கும் போதே இடது கையில் பிரச்னை இருந்ததால் அது சரியாக வளரவில்லை. தன்னுடைய குறையை பார்த்து பலரும் பரிதாபப்படுவது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் தன்னுடைய இயலாமையை தனது சிறப்பு திறனாக மாற்ற நினைத்தார்.
அதில் அவருக்கு பிடித்திருந்தது விளையாட்டுத் துறையே. அவருக்கு ஏற்ற விளையாட்டு என்ன என்று தேடிய போது பேட்மிண்டன் விளையாட்டை தேர்வு செய்தார்.
இதுகுறித்து, பாலக் கோலி கூறுகையில், ""என்னை முதல் முறையாக பார்க்கும் எவரும், "உன் கைக்கு என்ன ஆனது?' என்று கேட்பார்கள். பிறப்பிலேயே அப்படித்தான் என அவர்களிடம் தெரிவிப்பேன். எல்லோரும் பரிதாபமாக பார்ப்பார்கள். இந்த பரிதாப எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று எண்ணினேன். அப்போதுதான் விளையாட்டு துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
எதுவும் இல்லாத இடத்திலிருந்து தொடங்கி, உலகின் டாப் 6 இடங்களை பிடித்து பாராலிம்பிக் போட்டிகளுக்கு நான் தகுதி பெற்றது, உண்மையிலேயே ஒரு நீண்ட கால போராட்டம்.
அந்த போராட்டத்தை வெற்றிப் பாதையாக மாற்றிக் கொடுத்தவர் என் பயிற்சியாளரான கெளரவ் கண்ணா. அவரை நான் சந்தித்தபோது, பலரும் இவரால் பாரா பேட்மிண்டனில் சாதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதன் காரணமாக, பயிற்சியாளர் கெளரவ் எனக்கு ஓர் அறிவுரையை வழங்கினார், என்னுடைய நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களை பட்டியலிடச் சொன்னார்.
எதிர்மறை விஷயங்கள் ஒரு சில தான் இருந்தன. அதைப் பார்த்த என் பயிற்சியாளர், ""இவை எல்லாம் தற்காலிகமானவைதான், முயன்றால் அதையும் மாற்றி அமைக்க முடியும் என்று எனக்கு ஆலோசனை வழங்கினார்.
அதன்பின், நேர்மறையாக இருக்கும் என் பலத்தை கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியத்தில் பேட்மிண்டனில் களமிறங்கினேன்.
பயிற்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் தேசிய பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என மூன்று பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றேன். அதன் பின்னர் உகாண்டாவில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றேன். அத்துடன் உலக பாரா பேட்மிண்டன் தரவரிசையில் 11-ஆவது இடத்தையும் பிடித்தேன்.
2019-ஆம் ஆண்டில் எதிர்பாராதவிதமாக காலில் ஏற்பட்ட காயம் பாராலிம்பிக் கனவிற்கு தடையாக இருக்குமோ என்று பயந்தேன். எனினும் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் கரோனா காரணமாக தள்ளிப்போனது எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. காயத்தில் இருந்து மீண்டுதான் தற்போது நடைபெற்ற பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றேன்.
என் வாழ்வில் எனக்கு ஏற்பட்ட மாற்றம் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். நம் வாழ்வில் நமக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள நாம் சாதகமாக இருக்க வேண்டும். அதுவே உங்களை மிகப்பெரிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்'' என்கிறார் பாலக் கோலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.