பற்களின் ஆரோக்கியம் அத்தியாவசிய உணவுகள்

குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரையில், பற்களின் வளர்ச்சி, தன்மை, உறுதி, பாதுகாப்பு என்று அனைத்திற்குமான உணவுகளைப் பார்த்துப் பார்த்து கொடுத்தாலும், எதிர்பாராத விபத்துகள், வாய் மற்றும் பற்களில
பற்களின் ஆரோக்கியம் அத்தியாவசிய உணவுகள்

சென்றவார தொடர்ச்சி..

குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரையில், பற்களின் வளர்ச்சி, தன்மை, உறுதி, பாதுகாப்பு என்று அனைத்திற்குமான உணவுகளைப் பார்த்துப் பார்த்து கொடுத்தாலும், எதிர்பாராத விபத்துகள், வாய் மற்றும் பற்களில் ஏற்படும் சிறிய பெரிய நோய்கள் உணவு உண்ணுதலைப் பாதித்துவிடுகிறது. விபத்து காரணமாகவோ அல்லது வாயில் ஏற்பட்ட நோயின் காரணமாகவோ பற்களை இழந்து, சரியாக சாப்பிட முடியாத நிலையில், சத்துகள் குறைபாடு ஏற்படும். வாய் மற்றும் மூக்கின் வழியாகக் குழாய் மூலம் உணவு செலுத்தப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி உணவு கொடுக்கப்படும். வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களும், ஓரளவிற்கு சாப்பிட இயலும் என்ற நிலையில் இருப்பவர்களும் அவர்களுக்குப் பரிந்துரைக்கபட்ட சத்துகளுடன் பற்களுக்கான சிறப்பு உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். 

பற்சொத்தை ஏற்படுத்தும் - ஏற்படுத்தாத உணவுகள்:

தினசரி நாம் உண்ணும் அனைத்து உணவுகளுமே ஒரே மாதிரியான செரித்தல் திறனையும் செரித்தலுக்கு உள்ளாகும் நேர அளவையும் கொண்டிருப்பதில்லை. இந்த வேறுபாடுதான் பற்களில் சொத்தை ஏற்படுவதையும் நிர்ணயிக்கிறது. தானியங்கள், பழங்கள், பால் பொருட்கள், அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள் எளிதில் கிருமிகளால் சிதைக்கப்பட்டு பல் இடுக்குகளில் படிந்து, பற்சொத்தையை ஏற்படுத்துவதால் அவை சொத்தை ஏற்படுத்தும் உணவுகள் (cariogenic) என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகை உணவுகளை சாப்பிட்ட பிறகு அரைமணி நேரத்திற்குள் பற்கள் மற்றும் வாய் சுத்தப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், இயற்கையாகவே சுத்தமாவதற்கு குறைந்தபட்சம் 2 மணி நேரம் எடுத்துக் கொள்வதற்குள் கிருமிகள் அவற்றை நொதிக்கச் செய்து சொத்தை ஏற்படுத்துவதற்கு ஆயத்த வேலைகளை செய்துவிடும்.

தோலுடன் சேர்ந்த முழுதானியங்கள், பருப்புகள், நார்ச்சத்துள்ள காய்கள், கீரைகள், முட்டை, மீன், கொட்டையுணவுகள் போன்றவை அவ்வளவு விரைவில் பற்சொத்தை ஏற்படுத்துவதில்லை. மேலும், ஆல்கஹால், புதினா, கிராம்பு, சோம்பு, துளசி, வெற்றிலை போன்றவற்றிலிருக்கும் பாக்டீரிய எதிர்ப்பு நுண்பொருள்கள் சொத்தை ஏற்படாமல் பாதுகாப்பு செய்யும் உணவுகளாகக் கருதப்படுகின்றன. உணவு உண்ட  அரைமணி நேரத்திற்குள் இவற்றை உண்பதாலும் அல்லது இப்பொருட்கள் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டிய நீரில் வாய் கொப்பளிப்பதாலும், உணவுத் துகள்கள் நொதிக்கப்பட்டு சொத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைகிறது. 

பற்சொத்தை ஏற்படாமல் பற்களைப் பாதுகாக்கும் மற்றொரு காரணி, புஃரைடு சத்து.  குடிநீரில் கலப்பது மட்டுமல்லாது, சில உணவுப்பொருட்களிலும் இச்சத்து இருக்கிறது. புஃரைடு சத்தானது, பற்களின் வெளிப்புறத்திலுள்ள எனாமல் என்னும் பற்சிப்பியை உறுதிப்படுத்தி, சொத்தை ஏற்படுவதைத் தவிர்க்கிறது. அதுமட்டுமல்லாமல், வாயில் உற்பத்தியாகும் அமிலம் மற்றும் பாக்டீரியாக்களையும் கட்டுப்படுத்தும் சிறப்புதன்மை புஃரைடுக்கு உண்டு. பசலைக்கீரை, திராட்சைப்பழம், உருளைக்கிழங்கு போன்ற உணவுகளில் தேவையான அளவிற்கு புஃரைடு சத்து இருப்பதால், இந்த உணவுகளைக் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாகக் கொடுக்க வேண்டும்.  பல் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு காயங்கள் சரியாகும் வரையில் திரவநிலையிலும், அதற்குப்பிறகு அரை திட நிலையிலும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

பற்களை இழந்தவர்களுக்கு என்ன உணவு கொடுக்கலாம்..

முதுமைப் பருவத்தில் இருப்பவர்கள், நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல், ஓரிரு பற்கள் விழுவதற்குத் துவங்கி,  நாளடைவில் அனைத்துப் பற்களுமே விழுந்துவிட்ட நிலையில் இருப்பவர்கள், அவர்களின் வயதிற்கும், உடல்நிலைக்கும் தக்கவாறு உணவுமாற்றம் செய்தே ஆகவேண்டும். இல்லையெனில், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு, உடல்நிலை மேலும் நலிவடைந்துவிடும்.  வீட்டிலுள்ள பிற வயதினருக்குக் கொடுக்கும் திட உணவையே இவர்களும் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துதல் கூடாது.

பாலில் ஊறவைத்து மசித்த இட்லி, இடியாப்பம், ஆப்பம், நன்றாக வேகவைத்த பருப்பு மற்றும் காய்கள் அல்லது கீரைகள் சேர்த்துக் குழைய வேகவைத்து மசித்த சாம்பார் சோறு, ஆட்டு எலும்பு அல்லது நாட்டுக்கோழிக் கறியில் தயார் செய்த ரசத்துடன் குழைத்த சோறு,  மசித்த முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து- குழைய வேகவைத்த நொய்யரிசிச் சோறு, சிறுமீன் வகைகளுடன் நொய்யரிசியும் சேர்த்த சொதி வகை உணவுகள், சர்க்கரை சேர்க்காத பழச்சாறு அல்லது நார்ச்சத்துள்ள இரண்டு மூன்று பழங்களைச் சேர்த்து மசித்த கலவை, முந்திரி, பாதாம் போன்ற கொட்டையுணவுகள் சேர்த்து அரைத்தப்பால், வேகவைத்தப் பட்டாணி, உருளைக்கிழங்கு, கீரை, தக்காளி போன்றவற்றை மசிய அரைத்தக் கலவை, பருப்பு மற்றும் கீரைகள் சேர்த்த தண்ணிச்சாறு வகைகள் இவர்களுக்கு ஏற்ற உணவுகளாகும். 

வாய் மற்றும் பற்கள் தொடர்பான சிகிச்சையில் இருப்பவர்களுக்கு..

வாய், தாடை, பற்கள் தொடர்பான சிகிச்சையில் இருப்பவர்களுக்கு சூப் வகை உணவுகள் சிறப்பான வகையில் உதவி செய்கினறன. எப்போதும் சாப்பிடும் சாதாரண தக்காளி சூப், சோள சூப் போன்று தயாரித்துக் கொடுக்காமல், கொத்துமல்லித் தழையுடன் பச்சைப்பட்டாணி சேர்த்த சூப், வேர்க்கடலை, எள், பாசிப்பருப்பு சேர்த்த சூப், சீஸ் அல்லது பால் கிரீம் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்த சூப் போன்றவற்றைக் கொடுக்கலாம். இவை, பற்களின் உறுதியை மீட்டெடுக்கவும், காயமடைந்த இடத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்யவும் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் புரதச் சத்துக்களை ஒருங்கே கொடுக்கவல்லவை. 

ஏற்கெனவே விபத்தினால் வாய் மற்றும் ஈறுகளில் காயமும், வாயை அசைக்க இயலாத நிலையும் இருப்பதால், சொத்தைப்பல் ஏற்படுத்தும் வேதனையையும் தாங்க இயலாது. எனவே, சொத்தை ஏற்படுத்தும் எளிய மாவுச்சத்துள்ள உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும். மேலும், பற்களிலும் தாடைப்பகுதியிலும் கிளிப் உதவியுடன் சிகிச்சை அளித்திருக்கும் நிலையில், தினமும் பற்களை சுத்தம் செய்வது மிகவும் கடினம். வாயிலுள்ள காயங்கள் குணமடையும் வரையில் அதிக அசைவுகளைக் கொடுக்காமல் திரவ உணவுகளாகக் கொடுக்க வேண்டும்.

முதல் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு, சிறு உணவுத் துகள்கள் பற்களுக்கிடையில் சென்றுவிடாதவாறு நன்றாகக் கரைத்த, மசித்த, முழு திரவ உணவாக இருக்க வேண்டும். கம்பு, கேழ்வரகு, அரிசி, பார்லி, சிறுதானியங்கள் போன்றவற்றை சிறிது பாசிப்பருப்புச் சேர்த்து மாவாக அரைத்துக் கொண்டு, அதைக் காய்ச்சி, நீர்த்த கஞ்சியாக சிறிது சிறிதாகக் கொடுக்கலாம். காய்ச்சல், நடுக்கம் இல்லாத நிலையில் இளநீர், மோர், சோறு வடித்த நீர், பிற தானியங்கள் மற்றும் பருப்புகள் சேர்த்து வேகவைத்த நீர் போன்றவற்றைக் கொடுக்கலாம். பால் மற்றும் பால் பொருட்கள், முட்டை, மீன் ஆகியவற்றிலும் தேவையான அளவிற்குக் கால்சியம் மற்றும் புரதச் சத்து இருப்பதால், கொழகொழப்பான நிலையில் மென்மையாக இருக்கும் உணவுகளான புட்டிங், கஸ்டர்ட், கீர், ஸ்மூத்தி போன்ற உணவுகளை திரவ உணவுகளுக்கு அடுத்த நிலையில் கொடுக்கலாம். ஒவ்வொரு உணவிற்குப் பின்பும், பல் மருத்துவரின் ஆலோசனைப்படி வெதுவெதுப்பான நீரில் வாய் கழுவ வேண்டும்.  

அவ்வப்போது சர்க்கரை சேர்க்காத பழச்சாறு கொடுப்பதால், பிற நுண்சத்துக்களான வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்றவைகளும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்களும் கிடைக்கப் பெறும். இதனால், உடலின் நோய் எதிர்ப்புத்திறனும் அதிகரித்து, நோய் நிலையிலிருந்து  விரைவான குணம் கிடைக்கும். நோயாளியின் குணமடையும் நிலையைப் பொருத்து, மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணரின் ஆலோசனைகளைப் பெற்று, திரவ உணவிலிருந்து, மென்மையான திட உணவு, அரை திட உணவு, முழுதிட உணவு என்று படிப்படியாக மாறவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com