பிரேக் டான்ஸில் ஆர்வம் காட்டும் பெண்கள்!

இந்தியாவைப் பொருத்தவரை  நம்மிடையே  உள்ள பாரம்பரிய  நடனங்களை கற்று தேர்ச்சிப் பெற்று பிரபலமானவர்கள்  ஏராளமானோர்  உள்ளனர்.
பிரேக் டான்ஸில் ஆர்வம் காட்டும் பெண்கள்!
Published on
Updated on
2 min read

இந்தியாவைப் பொருத்தவரை நம்மிடையே உள்ள பாரம்பரிய நடனங்களை கற்று தேர்ச்சிப் பெற்று பிரபலமானவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்நிலையில் மேல்நாட்டு நடனங்களைப் பயிலும் இளம் ஆண்களும், பெண்களும் சமீப காலமாக அதிகரித்துள்ளனர். 2024- ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்த போவதாக அறிவித்துள்ளனர். அதில் ஒன்று பிரேக் டான்ஸ். ஏற்கெனவே பிரேக் டான்ஸில் ஆர்வம் காட்டி வந்த இளம் தலைமுறையினருக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பெங்களுருவில் பிரேக் டான்ஸ் பயிற்சிப் பெறுவதில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். இவர்களில் பெண்களை "பி கேர்ள்ஸ்' என்றும் ஆண்களை "பி பாய்ஸ்' என்றும் குறிப்பிடுகின்றனர்.

""இதுவரை நாங்கள் மேல்நாட்டுப் படங்களில்தான் பிரேக் டான்ஸ் ஆடுபவர்களை பார்த்து ஆச்சரியப்படுவோம். தற்போது சில இளம் பெண்கள் ஒலிம்பிக்ஸில் பங்கேற்க வேண்டுமென்ற ஆர்வத்தில் பிரேக் டான்ஸ் பயிற்சிப் பெற தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே பயிற்சிப் பெற்றவர்கள் வெளி உலகிற்கு பயந்து குடும்பம் நடத்தத் தொடங்கிவிட்டனர். மேலும், அவர்களுக்கு ஊக்கமளிக்க யாரும் முன் வரவில்லை. தற்போது ஒலிம்பிக்ஸில் ஒரு விளையாட்டாக பிரேக் டான்ஸ் இடம் பெறப் போகிறது என்று தெரிந்த உடன் மீண்டும் இளம் பெண்களிடம் ஆர்வம் துவங்கியுள்ளது. அதற்குரிய திறமையும் இருப்பதால் இந்த நடனத்துடன் இணைய நினைக்கிறார்கள்'' என்று கூறும் பி கேர்ள் கவிப்பிரியா தயாள் (27) பிரேக் டான்ஸ் பயிலும் மாணவிகளில் ஒருவராவர்.

""உடல் வலிமை, ஒழுக்கம், பயிற்சி இவைகள்தான் பிரேக் டான்ஸ் கற்பதற்கு முக்கியமாகும். ஒருகுறிப்பிட்ட அளவு சக்தி உடலுக்கு தேவை. கால்களை தரையில் தேய்த்தபடி உடலை சுழற்றி ஆடுவது அத்தனை சுலபமல்ல. இது ஒரு புதிய அனுபவம்'' என்று கூறும் பூஜாகுமாரி (25) இதுவரை தான் பயின்ற பாரம்பரிய பரதநாட்டியத்தை விட்டுவிட்டு பிரேக் டான்ஸ் பயில ஆர்வம் காட்டி வருகிறார்.

""அண்மையில் நான் கவுகாத்தியிலிருந்து பெங்களுரூ வந்தபோது, இப்படியொரு மாற்றம் எனக்குள் ஏற்படுமென்று நான் நினைக்கவே இல்லை. ஆறு வயது முதல் 21 வயது வரை பரத நாட்டியத்தில் ஈடுபாடு காட்டி வந்த நான், பிரேக் டான்ஸ் கற்றுக் கொள்ளும்போது காயம் ஏற்படுமோ என்று நினைத்து என் அம்மா முதலில் அனுமதிக்க மறுத்துவிட்டார். இப்போது அவர்தான் எனக்கு
உற்சாகமூட்டி வருகிறார்'' என்கிறார் பூஜாகுமாரி.

பிரேக் டான்ஸ் பயிற்சிப் பெறுபவர்களை பி பாய்ஸ், பி கேர்ள்ஸ் என்று வேறுபடுத்தினாலும், பயிற்சியின் போது ஆண், பெண் வேறுபாடு ஏதுமில்லை என்றே கூற வேண்டும். பிரேக் டான்ஸில் எவ்வித முன் அனுபவமும் இன்றி பயிற்சிப் பெற்ற சுஷ்மா அய்தல் ( 24) இந்த நடனத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக பல போட்டிகளில் கலந்து கொண்டு தோல்வியை தழுவினாலும் இன்று இந்த நடனத்தில் முன்னணி கலைஞராக திகழ்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ""ஆர்வம் காரணமாக முதலில் எவ்வித பயிற்சியும் இல்லாமல் இறங்கியவள் பின்னர் முழுநேர டான்சர் ஆக வேண்டுமென்பதற்காக முறைப்படி பயிற்சி பெறத் தொடங்கினேன். தேர்ச்சிப் பெற்ற பின்னர் என்னுடைய பெற்றோர் எனக்கு ஆதரவளிக்க முன் வரவில்லை. பயிற்சி பெறும் ஆண்கள், எங்களைப் பெண்கள் என்று வேறுபடுத்துவதில்லை. இந்த நடனத்தில் உள்ள முக்கியமான டிரிக்குகளை கற்றுக் கொடுப்பார்கள். இது எங்களுக்கு உதவியாகவும், திறமையை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுகிறது'' என்கிறார் சுஷ்மா. மொத்தத்தில் பிரேக் டான்ஸ் ஒவ்வொருவருக்கும் ஒலிம்பிக்ஸ் கனவாகவே இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com