கே.பி.எஸ். பாட்டென்றால் சவால்தான்!

கே.பி.எஸ். பாட்டென்றால் சவால்தான்!

சினிமாவில் பாடல்கள் பாடும் பாடகிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குரல்வளம் அமைந்திருக்கும். ஒவ்வொருவரும் தனக்கே உரிய தனிபாணியில் பாடுவது அவர்களின் சிறப்பியல்பு.


சினிமாவில் பாடல்கள் பாடும் பாடகிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குரல்வளம் அமைந்திருக்கும். ஒவ்வொருவரும் தனக்கே உரிய தனிபாணியில் பாடுவது அவர்களின் சிறப்பியல்பு.  ஆனால், இதுதான் மேடையில் மெல்லிசைப் பாடல்கள் பாடுகிறவர்களுக்கு மிகப்பெரிய சவால். பல்வேறு பாடகர்களும், பாடகிகளும் பல்வேறு படங்களுக்காக, பல இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடிய பாடல்களை ஒரு சில பாடகர்களும், பாடகிகளும் ஒன்றிரண்டு மணி நேரத்தில் மேடையில் திரையிசை நிகழ்ச்சியின்போது பாட வேண்டும். ஒரு சில மெல்லிசைக் குழுக்களில் யேசுதாஸ், டி.எம்.எஸ். எஸ்.பி.பி., பாடல்களைப் பாடுவதற்கென்றே பாடகர்கள் இருப்பார்கள்.  ஆனால், ஒரு பாடகி, மேடை நிகழ்ச்சிகளில் சுமார் நாற்பது பாடகிகளின் குரலில் அச்சு அசலாகப் பாடுகிறார் என்பது ஆச்சரியம் மட்டுமில்லை; ஒரு வகையில் சாதனையும் கூட.  அவர்தான், லட்சுமண் ஸ்ருதி மெல்லிசைக் குழுவின் மாலதி லட்சுமண். 

லட்சுமண் ஸ்ருதி குழுவினை நடத்திவரும் லட்சுமணனின் மனைவிதான் மாலதி லட்சுமண்.  "திருடாதிருடி' படத்தில் இவர் பாடிய "மன்மத ராசா' பாடல் வெளியான ஒரு சில தினங்களிலேயே பட்டி, தொட்டிகளில் எல்லாம் பிரபலமானவர். ஆனால், இப்போதுதான் மேடை ஏறி, மைக் பிடித்து பாட ஆரம்பித்தது போல இருக்கிறது; அதற்குள் இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன" என்று மகிழ்ச்சியோடு சொன்னவரிடம், தொடர்ந்து பேசினோம்: 

நீங்கள் மெல்லிசைத் துறைக்கு வந்தது எப்படி?

இசையோடு துளியும் சம்ந்தமில்லாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான். அப்பா எலெக்டிரீஷியன். வீட்டில் எப்போதும் ரேடியோ ஒலித்துக் கொண்டே இருக்கும். எங்களின் ஒரே பொழுது போக்கு ரேடியோவில் சினிமா பாட்டுக்களைக் கேட்பதுதான். கூடவே பாடிப் பாடி  எனக்கு பாட்டுப் பாட வந்தது. அந்த அனுபவத்தில், ஸ்கூலில் பாட்டுப் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றேன். 87-ஆம் ஆண்டில் எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பில் ஒரு மெல்லிசைக் குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது. நான் மேடை ஏறி, மைக் பிடித்து அப்போது மிகப்பிரபலமான "செண்பகமே! செண்பகமே!"பாடலைப் பாடி கைதட்டல் பெற்றேன். சுருதி, தாளம், ராகம் எதுவுமே தெரியாத நான் பாடிய பாட்டுக்குக் கிடைத்த கைத்தட்டல் எனக்கு பெருமையாக இருந்தது. அதன் பின், சில மெல்லிசைக்குழுக்களில் பாட வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில மெல்லிசைக் குழுக்களில் அவ்வப்போது பாடிக்கொண்டிருந்த சமயத்தில், ஒரு நாள் லட்சுமண் ஸ்ருதி குழுவில் அவர்களின் வழக்கமான பாடகி வரமுடியாத சூழ்நிலையில் என்னைப் பாட அழைத்தார்கள். அதன் பின் அவ்வப்போது கூப்பிட்டால், போய் பாடிவிட்டு வருவேன். ஒரு கட்டத்தில் அவர்கள் குழுவில் நிரந்தரமாகப் பாட ஒரு பாடகி தேவைப்பட்டபோது, அந்தக் குழுவில் இணைந்தேன். 

பல்வேறு பாடகிகளின் குரலில் தத்ரூபமாக எப்படி உங்களால் பாட முடிகிறது?

மேடைகளில்  அந்தக் காலத்துப் பாடகிகள் கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ்.ராஜேஸ்வரி, எஸ். வரலட்சுமி, பெங்களூர் ரமணி அம்மாள் தொடங்கி பி.சுசீலா, எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி உட்பட இன்றைய சித்ரா, சாதனா சர்கம், ஸ்ரேயா கோஷல், சின்னப்பொண்ணு, மகிழினி மணிமாறன் வரை சுமார் நாற்பது பாடகிகள் பாடி பிரபலமான திரைப்படம் மற்றும் பக்திப் பாடல்களை அச்சு பிசகாமல் அவர்கள் மாதிரியே மேடையில் பாடுகிறேன் என்பதும், அதற்கு ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறேன் என்பதும் உண்மை என்றாலும், அதை மிகப்பெரிய சவாலாகவே நான் எடுத்துக் கொண்டேன். 

பல வருடங்களுக்கு முன்பு, அண்ணாமலை மன்றத்தில் ஒரு நிகழ்ச்சி. அதில் பாடுவதற்காக, அப்போது பிரபலமாக இருந்த கிராமிய இசைப்பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனின் பாட்டு ஒன்றை குழுவில் அனைவருக்கும் கொடுத்து பாடச் சொன்னார்கள். நான் அவரைப் போலவே பாடி, தேர்வானேன். ஃபாஸ்ட் பீட் ஆன அந்தப் பாடலை நான் நிகழ்ச்சியில் படு ஸ்பீடாகப் பாடி முடித்தவுடன் ஒரே  கைதட்டல். ரசிகர்கள் "ஒன்ஸ் மோர்' என்று குரல் கொடுக்க,  மீண்டும் பாடினேன். முன்னை விட அதிக கைதட்டல். அதன் பின், பெங்களூர் ரமணி அம்மாளின், "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்", "வேலவா வடிவேலவா", டி.கே.கலாவின் "தாயிற் சிறந்த கோவிலுமில்லை", எம்.எஸ்.ராஜேஸ்வரியின் "அம்மாவும் நீயே; அப்பாவும் நீயே", எஸ். வரலட்சுமியின் "ஏடு தந்தானடி தில்லையிலே" எல்.ஆர்.ஈஸ்வரியின் அம்மன் பாடல்கள்  என்று பல பாடல்களை பாடிப் பாடி பயிற்சி செய்து மேடையில் பாடத் துவங்கினேன். பலர், "என்ன நீங்க தொண்டையில ஒவ்வொருத்தர் குரலுக்கும் ஒரு சுவிட்ச் வெச்சுக்கிட்டு, சுவிட்ச் மாத்தி, மாத்தி எல்லார் குரல்லயும் பாடுறீங்களா?" என்று நகைச்சுவையாகக் கேட்பார்கள்.

யாரைப் போலப் பாடுவதை மிகவும் சிரமமாக நினைக்கிறீர்கள்?

மற்ற பாடகிகளின் பாடல்களைப் பாடி கைதட்டல் பெற்றாலும், நான் கே.பி.சுந்தராம்பாள் பாட்டுக்களை எடுத்துக் கொள்ள மிகவும் தயங்கினேன். காரணம், அவரது கம்பீரக் குரல்வளம் நமக்கு வருமா என்ற சந்தேகம்தான். அதன் பிறகு, அவரது பாடல்களைப் பயிற்சி செய்தேன். ஆனாலும், மேடையில் பாடுவதற்கு மிகவும் பயந்து தள்ளிப் போட்டுக் கொண்டே  வந்தேன். கடைசியாக கூட்டம் குறைவாக இருந்த ஒரு திருமண வரவேற்பில், மிகுந்த தயக்கத்துடன் "தகதகவென தகதகவென ஆடவா" பாட்டை பயந்துகொண்டே பாடி முடித்தபோது, ரசிகர்களின் கைதட்டல், என் பயத்தைப் போக்கியது. அதன் பிறகு "பழம் நீயப்பா, அரிது அரிது, ஞானப்பழத்தைப் பிழிந்து' என்று அவருடைய பல பாடல்களை கடுமையாக ஒத்திகை பார்த்து, மேடையில் பாடி, பாராட்டுப் பெற்றேன். குறிப்பாக திமுக தலைவர் கலைஞர் முன்னிலையில் கே.பி.எஸ். இன் "வாழ்க்கை என்னும் ஓடம்" பாடி, அவர் பாராட்டியதையும், கே.பி.எஸ். அம்மாவின் பேத்தியான நீதிபதி வாசுகி முன்னால், பாட்டியின் பாடல்களைப் பாடி விருதும், ஆசியும் பெற்றதையும் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். 

இப்படி பலரது குரல்களில் பாட உங்களை நீங்கள் எப்படித் தயார்ப்படுத்திக் கொள்ளுகிறீர்கள்?"

முதலில் அந்தப் பாட்டை தொடர்ந்து பல முறை கேட்டு, முழுமையாக உள்வாங்கிக்கொள்வேன். அதன் பிறகு, அந்தப் பாடல் வரிகளை நானே எழுதிக் கொள்வேன். அப்போது இன்னும் ஆழமாக மனதில் பதியும். அதன் பின், அந்தப் பாட்டை ஒலிக்கச் செய்து, கூடவே பாடிப்பழகுவேன். அப்போது எங்கே எல்லாம் நான் தப்பு செய்கிறேன் என்பது பிடிபடும். தவறுகளை திருத்திக் கொள்ளுவேன். அதன் பிறகு, இசைக் குழுவினருடன் ஒத்திகை ஆரம்பிக்கும். திரும்பத் திரும்ப பாடி, ஒரிஜினல் பாட்டைப் போலவே பாடும்வரை விட மாட்டேன். ஒத்திகையின்போது, அந்த ஒரிஜினல் பாடகி பாடுவதை கற்பனை செய்துகொள்வேன். இவ்வளவுக்கும் பிறகு, எனக்கு முழு திருப்தி ஏற்பட்ட பிறகே மேடையில் பாடுவேன். 

மற்றவர்கள் குரலிலேயே பாடி, பாராட்டு பெற்றால் போதுமா? உங்களுக்கென்று ஒரு தனித்தன்மை வேண்டாமா?

ரொம்ப சரிதான்! அதனால்தான், மேடையில் பிற பாடகிகள் குரலில் பாடி பாராட்டுப் பெற்றாலும், அத்துடன் திருப்தி அடைந்துவிடாமல், திரைப்படங்களில் எனக்குப் பாட வாய்ப்பு கிடைக்கும்போது, அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு எனக்கென்று ஒரு பாணியில் பாடி, பாராட்டும், மேலும் பாடுவதற்கு வாய்ப்புகளும் பெறுகிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று திரைப்படங்களிலும், ஏராளமான பக்திப் பாடல்களும்  பாடி இருக்கிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com