பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் அஞ்சலகம்!

ஆணுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல- அரசியலாகட்டும், அரசு நிர்வாகமாக இருக்கட்டும்.  தற்போது அஞ்சல் அலுவலகத்தை பெண்களே நிர்வகித்துவருகின்றனர்.
பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் அஞ்சலகம்!

ஆணுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல- அரசியலாகட்டும், அரசு நிர்வாகமாக இருக்கட்டும். தற்போது அஞ்சல் அலுவலகத்தை பெண்களே நிர்வகித்து வருகின்றனர். இதற்கான ஏற்பாட்டை அஞ்சல் துறையே செய்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அரக்கோணத்தில்தான் இந்த அஞ்சலகம் வருகிறது. பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் அஞ்சலம் என்று அலுவலகத்தின் முகப்பில் பெயர்ப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை "இந்தியா போஸ்ட்' என்ற பெயரில் செயல்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் தொடங்கப்பட்ட தபால் சேவை, சில நூற்றாண்டுக்கும் மேலாகப் பழமை வாய்ந்தது. தனியார் கூரியர் நிறுவனங்கள் ஆதிக்கம் பெற்றாலும், அஞ்சல் சேவையை யாரும் மறக்கவில்லை.

நாட்டில் எந்த இடத்தில் இருந்தும் எந்த ஓர் இடத்துக்கும் அதிகபட்சமாக சில நாள்களுக்குள் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சலக அலுவலகங்கள் உள்ளன. தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் உள்ளன.

மலைக்கிராமங்களிலும், குக்கிராமங்களிலும் கூட அஞ்சல் சேவை இருக்கிறது. அஞ்சல்களை போடுதல், வாங்குதல், பிரித்தல், கையாளுதல், அனுப்புதல், வழங்குதல் போன்ற பணிகளைச் செய்யும் ஓர் இடம் இது. மேலும், துரித அஞ்சல் சேவை, அஞ்சல் தலைகள், அஞ்சல் அட்டைகள் போன்றவைகள் விற்பனை செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

பாஸ்போர்ட், அரசாங்க படிவம், பணம் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, சிறுசேமிப்பு, அஞ்சல் காப்பீடு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ராணிப்பேட்டை என 2 தலைமை அஞ்சலகங்களும், 45 துணை அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், அரக்கோணத்தில் முன்மாதிரியாக பெண்கள் மட்டுமே நிர்வகிக்க கூடிய துணை அஞ்சலகம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த துணை அஞ்சலகம் அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தை அடுத்த ரயில்வே என்ஜினீயரிங் ஒர்க்ஷாப் அருகே அசோக் நகரில் அமைந்துள்ளது.

முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் அஞ்சலகம் ஆகும். இந்த, அஞ்சலகத்தில் துணை அஞ்சலக அலுவலர், ஊழியர் என பெண்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள், நாள்தோறும் தங்களின் வழக்கமான பணிகளை மேற்கொள்கின்றனர். முன்மாதிரியாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெண் ஊழியர்கள் கொண்ட அஞ்சலகம் ஏற்படுத்தப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

படங்கள்: எஸ்.சபேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com