குழந்தைகளை சிந்திக்கவிடுங்கள்...

குழந்தைகளை சிந்திக்கவிடுங்கள்...

தனக்கான வெற்றியை எட்டிப்பிடித்து சாதனையாளர்களாக உயர்வோர் ஏராளம். தனக்கான கல்வி,நேரம், உழைப்பு செல்வம் எல்லாவற்றையும் பிறருக்காக தந்து தன்னை உயர்த்திக் கொள்வோர் சமூகத்தில் அரிதாகவே இருப்பார்கள்.


தனக்கான வெற்றியை எட்டிப்பிடித்து சாதனையாளர்களாக உயர்வோர் ஏராளம். தனக்கான கல்வி,நேரம், உழைப்பு செல்வம் எல்லாவற்றையும் பிறருக்காக தந்து தன்னை உயர்த்திக் கொள்வோர் சமூகத்தில் அரிதாகவே இருப்பார்கள். அப்படியான சேவையே தனக்கான அடையாளம் என்று தனித்து நின்று தன் வாழ்நாள் முழுமையையும் மருத்துவப்பணிக்காகவும் ஏழை எளிய குழந்தைகளின் நலனுக்காகவும் அர்ப்பணித்தவர் டாக்டர் நளினி. எழுபத்திரண்டு வயதிலும் சுறுசுறுப்பாக இயங்குகிறார். அன்றாடம் நோயுற்றோரை கவனித்துக் கொள்வதில் ஈடுபட்டிருப்பவர் பெற்றிருக்கும் விருதுகளைச் சொல்ல தனி புத்தகம் தேவைப்படும். அண்மையில்  யுனிசெப்  பாராட்டைப் பெற்ற அவருடன்  ஒரு சந்திப்பு:

""அப்பா பார்த்தசாரதி மருத்துவர். அம்மா விஜயா. என் பெற்றோருக்கு நான் ஒரே மகள். நான் ஒரு பலவீனமான அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தையாக இருந்தேன். அதனால் என்னுடைய அம்மா தான் எனக்கு ஆசிரியராக இருந்து சொல்லிக் கொடுப்பார்கள். தமிழும் ஆங்கிலமும் நன்றாகக் படிப்பேன். ஐந்து வயதில் தொடர்ந்து பலமுறை எனக்கு அறுவை சிகிச்சை செய்யும் படியான நிலை. பள்ளிக்கூடத்தில் சேர்த்தாலும் உடல்நலம் இல்லாத நேரத்தில் படிப்பு தடைபட்டுவிடும். இப்படியே காலம் கடந்தது. ஒன்பது வயதில் பெங்களூரில் என் பாட்டி வீட்டில் இருந்து நேரடியாக நான்காம் வகுப்பில் சேர்ந்தேன். அந்த வயதிலேயே எனக்கு டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. 

அதோடு நோயுற்றவர்களைக் கண்டால் மனதில் ஒரு பச்சாதாபம் ஏற்பட்டுவிடும். என் குடும்பத்தில் சமூக நோக்கில் தொண்டாற்றியவர்களும் இருந்தார்கள். அவர்களின் சேவையைப் பார்க்கும் பொழுது எனக்குள்ளும் பல சிந்தனைகள் தோன்றும். இருந்தாலும் நானும் ஒரு பலவீனமான நலக்குறைவு கொண்டவளாகவே தொடர்ந்து இருந்து வந்தேன். பள்ளி கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெற்றேன். ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தேன். மேற்படிப்பு என்றால் அது குழந்தை நல மருத்துவமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு முயன்றேன். எம் டி குழந்தைநல மருத்துவமும் ஜிப்மரில் தான். படிப்பு முடித்து அங்கேயே பணிக்கும் சேர்ந்தேன். உழைத்து படிப்படியாக பேராசிரியர் நிலையை அடைந்தேன்.

அரசுக்கல்லூரி பேராசிரியராக உங்கள் அனுபவம் பற்றி...

அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் ஏழைகள் தான். அடிப்படை வசதி கூட இல்லாதவர்களின் வீடுகளில் யார் நோயுற்றாலும் அது அந்தக் குடும்பத்தை பெரிதாக பாதிக்கும். உடுத்த மாற்று உடை கூட இல்லாமல் இருப்பார்கள். ஊர் திரும்பக் கூட பணம் இல்லாமல் நிற்பார்கள். அப்படியான மனிதர்களைப் பார்க்கும் பொழுது என் சொந்தக் செலவில் அவர்களுக்கு உதவுவேன்.  குழந்தை நல மருத்துவர் குழந்தைகளிடம் குழந்தையாக பழகத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். என் அறையில் நிறைய பொம்மைகள் வாங்கி வைத்திருப்பேன். குழந்தைகள் என்னை பொம்மை டாக்டர் என்று சொல்லி பிரியமாக வருவார்கள். 

இப்படி இருந்த நேரத்தில் புற்றுநோய் வந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடத்தில் இருந்தேன். அந்தக் குழந்தைகளுக்கான மருந்துகளுக்கு ரோட்டரி கிளப் அரிமா சங்கம் இவற்றில் தொடர்பு கொண்டு உதவி பெற்றுக் கொடுப்பேன். அப்போது குழந்தைகளை ஹீமோபிலியா என்ற நோய் அதிகம் தாக்கியது. அதற்கு நம்மிடம் பெரிய மருத்துவ வசதி மருந்து ஏதும் இல்லாத நிலை இருந்தது. அதற்கான படிப்பு ஆராய்ச்சி மருத்துவம் என்று இருபத்துநான்கு மணிநேரமும் இயங்கத் தொடங்கினேன்.

ஹீமோபிலியாவுக்கான சிறப்பு மருத்துவர் ஆனது எப்படி?

நோயாளிகள் நம்மை நம்பி வருகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு நாமும் நம்மாலானதை செய்ய வேண்டுமல்லவா? இந்த வகை நோய் தாக்கும் குழந்தைகளுக்கு ரத்தம் கொடுப்பதைத் தான் முதலில் செய்து கொண்டிருந்தோம். விசாரித்ததில் சர்வதேச அளவில் இதற்காக அமைப்பு இருக்கிறதென்றும் இந்தியாவில் டெல்லியில் இருக்கும் தலைமையகத்தில் இதற்கான மருந்து கிடைக்கும் என்றும் தெரிந்து அதை வரவழைத்தோம். அதுவும் விலை அதிகமாக ஏழைகளுக்கு எட்டாததாக இருந்தது. எனக்கென சேர்த்து வைத்துக் கொள்ள குடும்பம் குழந்தை என்று எந்தக் காரணமும் இல்லாத பொழுது என் வருமானத்தின் பெரும் பகுதியை இந்த மருந்துகளை வாங்கி இல்லாதவர்களுக்கு உதவிக் கொண்டு வந்தேன்.

 இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை அவசியம் என்பதால் அப்பொழுது புதுவை முதல்வராக இருந்த ரங்கசாமியை சந்தித்து எடுத்துச் சொன்னோம். ஜிப்மர் அருகிலேயே அதற்கான  வசதிகளை செய்து கொடுத்தார்கள். 

ஹீமோபிலியா சொசைட்டி பற்றி...

ஜிப்மரில் என்னுடைய பேராசிரியர் வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு ஹீமோபிலியா சொசைட்டி தொடங்கினேன். ஆரம்பத்தில் மிகச் சிறிதாக சொந்த முயற்சியில் ஆரம்பித்தது இன்றைக்கு முந்நூறுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். சர்வதேச அமைப்பு இலவசமாக மருந்துகளை எங்களுக்கு வழங்குகிறது. 

ஆண்டுக்கு லட்சம் ரூபாய் என்னுடைய சொந்தப்பணத்தை நன்கொடையாகக் கொடுக்கிறேன். என் நண்பர்களும் என்னை என் சேவையை அறிந்தவர்களும் முன்வந்து நன்கொடை வழங்குகிறார்கள். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து இலவச சிகிச்சை மருந்துகள் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறோம். 

குழந்தைகள் படிக்க உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை அவசியம் தேவைப்படும். அதனை மனிதாபிமான அடிப்படையில் செய்யத் தொடங்கினேன். குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி எந்தக் காரணத்துக்காகவும் தடைபடக் கூடாது என்று நினைப்பேன். அவர்களின் படிப்புச் செலவுக்கு என்னுடைய பென்ஷனில் இருந்து உதவி செய்வேன். என்னிடம் வரும் நோயாளிகளின் குடும்பம் சூழ்நிலை எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பேன். அவர்களும் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள். குழந்தையாக சிகிச்சைக்கு வந்தவர்கள் தற்போது நல்ல நிலையில் என்ஜினீயரிங் போல நன்கு படித்திருக்கிறார்கள். அவர்களில் சிலரும் எங்களுக்கு துணையாக இருக்கிறார்கள்.

தேர்ந்தெடுத்த குழந்தைகளுக்கு திருமணம் செய்வதற்கும் முடிந்தளவு பணஉதவி செய்து வருகிறேன். தற்போது, ஹீமோபிலியா சொசைட்டிக்கு கட்டடம் கட்ட வேண்டிய தேவை இருக்கிறது. ஒன்பது லட்சம் என்னிடம் இருந்த சேமிப்பை வழங்கியிருக்கிறேன். எந்த ஒரு சேவையும் தடங்கல்களால் நின்று போகக் கூடாது. சேவை தேவையானவர்களுக்கு கிடைக்க வேண்டும். அது மட்டுமே பிரதான சிந்தனை. அதற்காக சில நிறுவனங்கள் சில மனிதர்கள் உதவிக்கு நிற்கிறார்கள்.

யுனிசெப் விருது பெற்றிருக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள்?

குழந்தைகளுக்கான சேவை செய்தமைக்காக என்று வழங்கியிருக்கிறார்கள். மகிழ்ச்சி. இதற்கு முன்னரும் பல விருதுகளை தந்திருக்கிறார்கள். சமீபத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்தார்கள். விருதுகள் ஆண்டுக்கு ஆண்டு வந்து கொண்டு இருக்கிறது. என்னை உற்சாகப்படுத்துவதற்காக விருதுகள் கொடுக்கிறார்கள் என்றாலும் நோயுற்ற குழந்தைகள் குணமடைந்து தங்கள் வாழ்க்கையை எவர் தயவுமின்றி தாங்களே எதிர்கொள்வதைப் பார்க்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சியை எல்லாவற்றையும் விட உயர்வாகக் கருதுகிறேன். 

பெண்களுக்கு உங்கள் செய்தி...

தடங்கல்களால் தளர்ந்து போகாதீர்கள். முயற்சி செய்து கொண்டே இருங்கள். எல்லாம் நன்மையில் முடியும். குழந்தைகளை சுதந்திரமாக சிந்திக்கவும் செயல்படவும் அனுமதியுங்கள். அவர்கள் அறிவாளிகள்.எதையும் எளிதில் புரிந்து கொள்வார்கள். நல்ல ஆரோக்கியமான உணவும் சூழலும் ஏற்படுத்திக் கொடுங்கள்.

குடும்ப சூழ்நிலையை சொல்லி வளருங்கள். நல்லது செய்கையில் உற்சாகப்படுத்துங்கள். கதை சொல்லுங்கள். நட்போடு பழகுங்கள். உங்கள் குழந்தைகள் வெற்றியாளராக வளருவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com