கதை சொல்லும் குறள் - 39:  வேண்டுவோர்க்கு வேண்டுவது!

"மூவேந்தர் கட்சி' தமிழ்நாட்டை ஆண்டுக் கொண்டிருந்தது. கட்சிக் கொடியின் நிறம் சிகப்பு, அதில் அம்பு, புலியின் தலை மற்றும் மீனின் உருவம் பதிக்கப்பட்டிருக்கும்.
கதை சொல்லும் குறள் - 39:  வேண்டுவோர்க்கு வேண்டுவது!


"மூவேந்தர் கட்சி' தமிழ்நாட்டை ஆண்டுக் கொண்டிருந்தது. கட்சிக் கொடியின் நிறம் சிகப்பு, அதில் அம்பு, புலியின் தலை மற்றும் மீனின் உருவம் பதிக்கப்பட்டிருக்கும். மூவேந்தர் கட்சியின் மூத்தத் தலைவர் கஜேந்திர பூபதி கட்சியை ஆரம்பித்த பொழுது சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கொடிகளிலிருந்த உருவங்களைத் தேர்ந்தெடுத்துத் தன் கட்சியின் கொடியில் இடம்பெறச் செய்தார், தான் உருவாக்கிய கட்சிக்கு மூவேந்தர் கட்சி என்ற பெயரையும் சூட்டினார்.

கஜேந்திர பூபதி பெயருக்கு ஏற்றாற்போலக் கம்பீரமான உருவம். ஒருமுறை பார்த்தவர்களை மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும் வசீகரம். 

கதர் வேஷ்டி, ஜிப்பா, தோளில் கதர் துண்டு,  அந்த ஆறடி உயரம் கொண்ட கஜேந்திர பூபதி நடந்து வந்தாலே மக்கள் மனதில் நம்பிக்கைப் பூக்கும்.

வெறும் உருவம் மட்டும்தான் கம்பீரமாக இருக்கிறது என்று எண்ணாதீர்கள்; வாக்கில் சுத்தம், நடத்தையில் நேர்மை, மக்களின் நல்வாழ்விற்காகப் பாடுபடுவதில் காட்டும் சுறுசுறுப்பு, பதினெட்டு மணி நேர உழைப்பு.

கஜேந்திர பூபதி ஒரு காந்தியவாதி. பேச்சளவில் அல்ல, செயல்களிலும் காந்தியவாதத்தை நிலைநிறுத்திக் காட்டுவார். 

இந்தியா சுதந்திரம் அடைந்தபொழுது கஜேந்திர பூபதியின் வயது இருபத்து ஐந்து. தன்னுடைய இருபதாவது வயதிலேயே சுதந்திரப் போராட்டங்களில் கலந்துக் கொண்டு சிறைக்குச் சென்றவர். அப்பொழுதே காந்திஜியிடமும் அவருடைய கொள்கைகளிடமும் மனதைப் பறிக்கொடுத்து, இன்றளவும் அதைப் பின்பற்றுபவர்.

தேர்தலுக்காகக் கொடுத்த வாக்குறுதிகளை, ஜெயித்த பிறகு ஒவ்வொன்றாகக் கஜேந்திர பூபதி நிறைவேற்ற ஆரம்பித்தார். மக்கள் மனதில் நின்றார்.

முதலாவதாக, இளம் தலைமுறையினர், தங்கள் தாய்மொழியான தமிழைப் புறக்கணிக்கக் கூடாது என்பதற்காக +2 வரை மாணவர்கள் கட்டாயமாகத் தமிழைப் பயில வேண்டும் என்ற சட்டத்தை ஏற்படுத்தினார். 

தமிழைப் பயின்றவர்களுக்கு அரசாங்க உத்தியோகங்களில் முதன்மையான வாய்ப்புகள் தரப்படும் என்று சொல்லி அதை அமலுக்குக் கொண்டு வந்தார். தமிழ்ப் பண்டிதர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்களின் தரமானப் படைப்புகளுக்கு விருதுகள் வழங்கிக் கெளரவித்தார்.

எதிர்க்கட்சிகளின் அநியாயக் குரலுக்குப் பதிலடி கொடுப்பது, கண்மூடித்தனமாக அவர்களின் எண்ண வெளிப்பாடுகளை ஒதுக்காமல், அதிலும் நியாயம் இருந்தால் அதை நிறைவேற்றுவது என்று நடுநிலையாளராகத் திகழ்ந்தார்.

ஒருமுறை, கஜேந்திர பூபதி தன்னுடைய அமைச்சரவையைக் கூட்டினார்.

""நண்பர்களே, வானிலை ஆராய்ச்சியாளர்கள் வங்கக் கடலில் பெரும் புயல் உருக்கொண்டிருக்கிறது என்று எச்சரித்திருக்கிறார்கள். இப்பொழுதே வானம் இருண்டு, கருமேகங்கள் சூழ்ந்துவிட்டது. நம்முடைய கடலோர மக்களை அருகில் இருக்கும் பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், கல்லூரிகளுக்கு இடம்பெயர வைக்க வேண்டும். அவ்வளவு பேருக்கும் உணவுப் பற்றாக்குறை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவ வசதி, குடிநீர் வசதிகளைச் செய்து தர வேண்டும். அதிகமாகப் பாதிக்கப்படப் போகும் பகுதிகளுக்கு அமைச்சர்களாகிய நீங்கள் நேரில் களம் இறங்கி. நிவாரண வேலைகள் சரியாக நடக்கின்றதா என்று நேரில் சென்று மேற்பார்வை இடவேண்டும், நிவாரண நிதிகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சரியாக போய்ச்சேர வழிவகுக்க வேண்டும்'' என்றார்.
ஒரு அமைச்சர் முணுமுணுத்தார். ""இவருக்கு இதுதான் வேலை, ஒரு அழிவு என்று வந்துவிடக் கூடாது; நம்மைப் பெண்டு எடுத்து விடுவார்''.
""பெருசுக்கு அறுபத்து அஞ்சு வயசாயிடுச்சு, அடங்குவேனா என்கிறது. நம்மை விடுங்க, அவரே களம் இறங்குவார் பாருங்க'' என்றார் மற்றொரு அமைச்சர்.
அவர் சொன்னது போலத்தான் நடந்தது. புயல் தமிழகத்தைக் கடந்துச் செல்லும் பொழுது ஏற்படுத்தியச் சேதங்களை நேரில் பார்த்து மக்களுக்கு ஆறுதல் சொல்ல, முழங்கால் அளவு நீரில் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு உலா வந்தார்.
கஜேந்திர பூபதியின், ஒரே மகன் மகேந்திர பூபதி, மூவேந்தர் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம், தன் தந்தைக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றப் போகிறவன் என்று கணிக்கப் பட்டவன், தன் தாயார் மகேஸ்வரியிடம் பொங்கித் தள்ளி விட்டான்.
""அம்மா, இந்த அப்பாவுக்குப் புத்திக் கெட்டுவிட்டதா? குப்பம் பகுதிகளுக்கு எல்லாம் நடந்துப் போகிறார். நாத்தம் குடலைப் புரட்டுது, நம்மக் கட்சியின் இளைய தலைமுறையினரை வழி நடத்துபவன் என்று நானும் அவர்கூடப் போக வேண்டியிருக்கு. நாள் முழுக்கக் குளித்தாலும் நாத்தம் போகலை. முதல் அமைச்சர்னா, ஏவி விட கலெக்டர்கள், போலீஸ், எம்.எல்.ஏக்கள், மந்திரிங்கன்னு எத்தனை பேர் இருக்காங்க, இவரு எதுக்கு அலையறாரு''  என்றான்.
யார் சொன்னாலும் தன் கணவன் காதில் வாங்க மாட்டார், தன் கொள்கையில் இரும்பாய் இருப்பார்ன்னு நாற்பது வருடங்கள் அவரோடு குடும்பம் நடத்தும் மகேஸ்வரிக்குத் தெரியாதா என்ன? மகேந்திர பூபதி சொன்னதைப் புறம் தள்ளி, தன் கணவரின் பெருமையை, கடமை உணர்வை மனதில் நிறுத்தி மகிழ்ந்தாள்.
""ஆனாலும் உங்க அப்பா, வருங்கால முதலமைச்சரை இப்படி பட்டி தொட்டிக்கு எல்லாம் அலைக்கழிக்கக் கூடாது'' என்று மகேந்திர பூபதியின் மனைவி ஸ்ரேயா தன் பங்குக்கு அலட்டிக் கொண்டாள்.
கஜேந்திர பூபதி, பல வெளிநாடுகளுக்குப் பல துறைகளைச் சார்ந்த வல்லுநர்களோடு சென்று விவசாயம், பால் உற்பத்தியில் புதிய முறைகள், அயன் அண்டு ஸ்டீல் தொழில்களின் தற்போதைய முன்னேற்றம், கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்யப் பிறநாட்டுத் தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை என்று ஆக்கப் பூர்வமாக ஆராய்ந்து அறிந்து வந்து தமிழ்நாட்டைப் பொருளாதாரத்தில் வெகுவாக உயர்த்தியிருக்கிறார்.
இப்படி அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வரும் முன் காக்கும் அறிவு, வேண்டுவோர்க்கு வேண்டியது கொடுப்பது. ஆபத்து வந்தபின் தளராத ஊக்கம் என்று வள்ளுவர் வழி நின்று தமிழ்நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கிறார் கஜேந்திர பூபதி.
கெட்டதுக்கு ஒரு முடிவு என்றால் நல்லதற்கும் அது சகஜம்தானே. தன்னுடைய எழுபதாவது வயதில் கஜேந்திர பூபதி நோய்வாய்ப்பட்டார்; மருத்துவர்கள் கைவிட்ட நிலை என்றே சொல்லலாம், அடுத்த முதலமைச்சர் கஜேந்திர பூபதியின் மகன் மகேந்திர பூபதிதான் என்று எல்லோரும் நினைத்தனர்.

தன்னுடைய கடைசி ஆசை மக்களிடம் தொலைக்காட்சியில் நேரடியாகப் பேசுவது என்று கஜேந்திர பூபதி விருப்பம் தெரிவிக்க, அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகமே கண்ணீரோடு தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பு அமர்ந்திருந்தது.

கஜேந்திர பூபதியின் ஆஜானுபாகுவான உருவம் தேய்ந்து, கண்களில் குழியோடு, ஒட்டிய கன்னங்களோடு பேச ஆரம்பிக்க, தமிழகத்து மக்கள் குலுங்கி அழுதனர், கஜேந்திர பூபதியின் குரல் மங்கவில்லை, அதே கம்பீரக் குரல்,  "அன்பர்களே இவ்வளவு வருடங்கள் உங்கள் அன்பு மழையில் நனைந்தேன், அதற்கு நன்றி. என்னுடைய வாரிசாக முத்துலிங்கத்தை அறிவிக்கின்றேன். எனக்குப் பிறகு அவரே உங்கள் முதலமைச்சர். அவர் உங்களை நல்ல முறையில் வழி நடத்துவார்'  என்று முடித்துக் கொண்டார்.

யார் அந்த முத்துலிங்கம்? மூவேந்தர் கட்சியின் மூத்தத் தொண்டர், அறுபது வயதானவர், தன் மகன் மகேந்திர பூபதியைவிட நேர்மையும், மக்களுக்காகத் தன்னலம் இல்லாமல் உழைக்கக்கூடிய பண்பும் உடையவர் என்பதை உணர்ந்து, தமிழகத்தின் நலன் கருதி அவரை முதலமைச்சராக முன்மொழிந்தார் கஜேந்திர பூபதி. நாற்பது வருடங்களுக்கு மேல் தங்களுக்காக உழைத்தவரின் கடைசி ஆசையை தமிழக மக்கள் நிறைவேற்றாமல்  இருப்பார்களா?

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.

(குறள் எண்: 382)

பொருள் : அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டியதைக்  கொடுப்பது, வரும் முன் காக்கும் அறிவு, ஆபத்து வந்தபின் தளராத ஊக்கம், இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com