அடையாளத்தை இழக்காதீர்கள்!
By - கோதை. ஜோதிலட்சுமி | Published On : 17th August 2021 12:00 AM | Last Updated : 17th August 2021 12:00 AM | அ+அ அ- |

ராஜலட்சுமி தூத்துக்குடி மாவட்டத்தின் சிறு கிராமமான வேப்பலோடை கிராமத்தில் பிறந்தவர். உயர் கல்வி கூட சாத்தியமாகாத சூழலில் வளர்ந்தவர். முயன்றால் முடியாதது ஏதும் இல்லை என்ற நம்பிக்கை கொண்டவர். தன் முயற்சியால் தொழில் முனைவோராக உயர்ந்திருக்கிறார் ராஜலட்சுமி. சென்னை மாநகரத்தில் பிரபலமானவராக தனது தொழில் திறமையால் வளர்ந்து கொண்டிருப்பவர். கலை ஆர்வத்தால் நடனப்பள்ளி நடத்தி கலை சேவையையும் தொடர்ந்து செய்து வருகிறார். தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:
கிராமத்தில் உங்கள் இளவயது பற்றி...
பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழக்கம் கொண்ட சூழ்நிலையில் என் குடும்பமும் அப்படித் தான் என்னை வைத்துக் கொண்டார்கள். திருமணம் முடிந்தது. கணவர் என்ஜினீயர். மூன்று குழந்தைகள். எல்லாம் நன்றாக இருந்தாலும் எனக்கு நாமும் படிக்கச் வேண்டும் என்ற வேகம் இருந்தது மூன்று குழந்தைகளையும் வைத்துக் கொண்டு பட்டப்படிப்பை அஞ்சல் வழியில் படித்து முடித்தேன். படிப்பை முடித்ததும் நாமும் எதாவது செய்ய வேண்டும். சொந்தக்காலில் நிற்க வேண்டும். நமக்கென அடையாளம் வேண்டும் என்ற துடிப்பு இருந்து கொண்டே இருந்தது.
நடனப்பள்ளி பற்றி...
கலை ஆர்வம் இயல்பாகவே எனக்குள் இருந்தது. அதனால் என் இரு பெண் குழந்தைகளையும் நடனப்பள்ளியில் சேர்த்தேன். இடம் மாற வேண்டிய சூழல் வந்தது. என் குழந்தைகளுக்கு நடனம் தடைப்படக் கூடாதே என்று ஆசிரியரை வீட்டுக்கு வரவழைத்து நடனம் கற்றுக் கொடுத்தேன். அந்த நேரத்தில் தோன்றிய சிந்தனை நாமே நடனப்பள்ளி தொடங்கலாம். இந்தப்பகுதி குழந்தைகள் நடனம் கற்றுக் கொள்ள வாய்ப்பாக இருக்கும். நாமும் உபயோகமான ஒரு வேலையைத் தொடங்கியதாகவும் இருக்கும் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் ஸ்ரீ ஹயக்ரீவர் ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சுரல் அகாதெமி.
கடந்த ஏழு ஆண்டுகளாக இப்பள்ளி நடந்து வருகிறது. 400-மேற்பட்ட குழந்தைகள் நடனம் கற்றுக் கொள்கிறார்கள். தற்போது என் மகள்கள் இருவரும் நடன ஆசிரியர்களாக உயர்ந்திருக்கிறார்கள். திருவேற்காடு, போரூர், காட்டுப்பாக்கம் மூன்று இடங்களில் பள்ளிகளை விரிவு படுத்தினோம். இந்த கொள்ளை நோய் காலத்தில் இணைய வழியில் பள்ளி நடைபெறுகிறது.
சித்திரைக் கலைவிழா பற்றி...
நம்முடைய தமிழ் வளர்ச்சிக்காக சித்திரைக் கலைவிழா என்று ஆண்டுதோறும் நடத்துகிறோம். நடனம் மட்டுமல்லாது பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி என்று நடத்துவோம். தமிழ் மீதான ஆர்வம் இளம்பிள்ளைகளுக்கு வளர வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கினோம். பிள்ளைகளும் அதிக ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். அவர்களுக்காக தனித்துவமான பரிசுப் பொருட்களைத் தேடித்தேடி வாங்குவேன். அந்தத் தேடல் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. இந்தக் கலைப் பொருட்களுக்கான விற்பனைக் கூடத்தை நடத்தலாம் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அதிலிருந்து தான் விளக்குக்கடை வந்தது.
விளக்குக்கடை பற்றிச் சொல்லுங்களேன்....
வெண்கல விளக்குகளுக்கான பிரத்யேக விற்பனையகம் வேண்டும் என்று முதலில் ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவு செய்து தொடங்கினேன். தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் வியாபாரம் நடக்கிறது.
குலதெய்வங்கள் படங்களைக் கொண்டுவந்து கொடுத்தால் நாமே அதற்கான விக்ரகங்களை செய்து கொடுக்கிறோம். விளக்குகளிலும் அப்படித் தான். வாராகி விளக்கு நம்முடைய சிறப்பு. இதுவரை இப்படியொரு விளக்கு எங்கும் இல்லை. வெளியூர் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் நம்மிடம் வாராகி விளக்கு வாங்குவதற்காக வருகிறார்கள்.
அதோடு பஞ்சலோக சிலைகள், வெண்கல அலங்கார பொருட்கள் என்று விற்பனையை விரிவு படுத்தியதால் கடையையும் விரிவு படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
சமூக வலைத்தளத்தில் பிரபலமானது எப்படி...
விதவிதமான விளக்குகளை முகநூலில் அறிமுகம் செய்து வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். பிறகு யூடியூபில் எங்கள் கலைப் பொருட்களை அதன் தரம் தனிச்சிறப்பு பற்றி எடுத்துச் சொல்லி ஆன்லைன் வணிகத்தை மேம்படுத்தினேன். அந்த விடீயோக்கள் என்னை உலகின் பல நாடுகளில் இருப்பவர்களுக்கும் அறிமுகம் செய்ததோடு சர்வதேச வாடிக்கையாளர்களையும் பெற்றுத் தந்தது. இன்றைக்கும் தொழில் போட்டியில் இருப்பவர்கள் கூட நான் அறிமுகம் செய்யும் விளக்குகள் மற்றும் கலைப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக என்னுடைய விடீயோக்களைப் பார்க்கிறார்கள்.
பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பெண்களுக்கான மரியாதை என்பது நம்முடைய அடையாளத்தை நாம் உருவாக்கிக் கொள்வதில் இருக்கிறது. உண்மையில் சுதந்திரம் என்பது நாமே நம் செயல்பாடுகள் வழியாக அடைவது என்று நம்புகிறேன்.