ஏழை மாணவர்களுக்கு இலவச டியூஷன்!
By DIN | Published On : 17th August 2021 12:00 AM | Last Updated : 17th August 2021 12:00 AM | அ+அ அ- |

கரோனா காரணமாக, பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. விடுமுறைநாள் தவிர, தினசரி காலை மூன்று மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் இடைவேளை மற்றும் இணையதளம் வேலை செய்ய வில்லை என பல சிரமங்கள் ஏற்படுகிறது. பல ஏழை மாணவர்களுக்கு கைபேசி இல்லாததாலும், இருக்கும் கைபேசியை பெற்றோர் வேலைக்குச் செல்லும் இடத்திற்கு கொண்டு சென்று விடுவதாலும் பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை.
இந்நிலையில் திருச்சியில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் பி.நிர்மலாதேவி பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன் எடுத்து வருகிறார். இது குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது, ""பல ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கெடுத்தாலும், பாடங்கள் அவர்களுக்கு சரி வர புரிவதில்லை. பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேடுப்பதில்லை. எனவே ஏழை மாணவர்களுக்கு மாலை நேரம் டியூஷன் எடுப்பது என முடிவு எடுத்தேன்.
ஏற்கெனவே கடந்த இரு ஆண்டுகளாக ஏழை எளியவர்களுக்கும், சாலை ஓரம் வசிப்பவர்களுக்கும், மதிய உணவு வழங்கி வருகிறோம். மதிய உணவு எங்கள் அலுவலகத்தில் மேஜை அமைத்து, இலை போட்டு பொறியல் உள்ளிட்டவைகளை வைத்து தினசரி சுமார் 50 நபர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறோம். கடந்த இரு மாதங்களாக மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சுமார் 24 மாணவர்களுக்கு இலவச டியூஷன் எடுத்து வருகிறோம். இது தவிர, இரவு 7 மணிக்கு அனைவருக்கும் பால், பிஸ்கட் வழங்கி வருகிறோம். வரும்காலங்களில் மேலும் அதிகமாக ஏழை மாணவர்களைச் சேர்த்து, மேலும் ஒரு ஆசிரியையை நியமித்து டியூஷன் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி தோய்வின்றி கிடைக்கும் என நம்புகிறேன்'' என்றார்.