நம்பிக்கை  நிறைவேறும்!

""இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டிகளின்போது கோல்ப் விளையாட்டை நிறையபேர் பார்த்து ரசித்தது கேட்டு மகிழ்ச்சி யடைந்தேன்.
நம்பிக்கை  நிறைவேறும்!

டோக்கியோ ஒலி"ம்பிக்ஸின்போது இந்த முறை வழக்கமாக நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை பார்ப்பதில் ஆர்வம் காட்டிய பார்வையாளர்களின் கவனத்தை கோல்ப் விளையாட்டு வீராங்கனை அதிதி அசோக், தன்பக்கம் ஈர்த்தது எதிர்பாராத திருப்பமாகும். முந்தைய ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கோல்ப் விளையாட்டில் இந்திய வீரர்கள் பங்கேற்று வந்தாலும் இந்த முறை பெண்கள் பிரிவில் விளையாடிய இந்திய கோல்ப் வீராங்கனை அதிதி அசோக், தங்கம் வெல்வார் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது எதிர்பாராத திருப்பமாகும். ஆனால் நான்காவது இடத்திற்கு வந்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்து விட்டாலும், அனைவர் கவனமும் இந்த முறை கோல்ப் விளையாட்டின் மீது திருப்பிய வகையில் இதை தனக்குக் கிடைத்த வெற்றியாக கருதும் பெங்களூருவைச் சேர்ந்த அதிதி அசோக், தன் அனுபவங்களை இங்கு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

""இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டிகளின்போது கோல்ப் விளையாட்டை நிறையபேர் பார்த்து ரசித்தது கேட்டு மகிழ்ச்சி யடைந்தேன். ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டபோது பதக்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏதுமில்லை. ஒலிம்பிக்ஸில் விளையாட தேர்வு செய்யப்பட்டதையே அதிர்ஷ்டமாக கருதினேன். என்னுடைய விளையாட்டை ரசித்து பாராட்டியதே பதக்கம் கிடைத்ததை போன்ற உற்சாகத்தை அளித்திருக்கிறது.

கோல்ப் விளையாட்டில் நான் முதன்முதலாக இறங்கியபோது எனக்கு ஐந்து வயது. ஏழு வயது வரை எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. என்னைப் போலவே கோல்ப் விளையாட்டில் ஆடுபவர்களுடன் ஆர்வமாக விளையாடு வது எனக்குப் பிடித்திருந்தது. கோல்ப் விளையாடுவது ஒரு சவாலான ஆட்டமாகும். சேர்ந்தாற்போல் இரு தினங்கள் ஆடும்போது பருவ நிலை வித்தியாசப்படுவதையும், காற்றின் வேகம் திசை மாறுவதையும் உணரலாம். பந்தை ஒரே மாதிரி அடிக்க முடியாது. காற்றின் வேகத்தை கணித்து அடிக்க வேண்டும். இல்லையெனில் பந்தின் வேகத்தை காற்றுதிசை மாற்றிவிடும்.

கோல்ப் விளையாட்டில் நான் ஈடுபடுவதற்கு என்னுடைய பெற்றோர் மிகவும் உதவியாக இருக்கின்றனர். ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்றபோது கோல்ப் கிட்டை தூக்கி வர என்னுடைய அப்பா துணைக்கு வந்தார். இந்த முறை எனக்குத் துணையாக அம்மா வந்திருந்தார். இந்த விளையாட்டில் கவனத்தை சிதறவிடாமல் ஆட அவர்கள் பேருதவியாக உள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸின் போது என்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டுமென்பதே எனக்கு முக்கியமாகபட்டது. மைதானத்தில் இறங்கி விளையாடிய நான்கு நாள்களிலும் கவனமாகவே விளையாடினேன். நான்காவதுநாள் நான் திறமையாக ஆடவில்லை என்பது எனக்கே தெரிந்தது. ஆனால், என்னுடைய விளையாட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மிகப்பெரிய வெற்றியாக தெரிந்தது. இந்த தோல்வி எனக்கு மிகுந்த மனவருத்தத்தை தந்தாலும், தற்போது ஐரோப்பாவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்கு தடையாக இருக்காது. அடுத்த முறை மேலும் திறமையாக ஆடி வெற்றிப் பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் விளையாட இன்னும் மூன்றாண்டுகள் உள்ளன. நான் அதில் வெற்றிப் பெற வேண்டுமென்ற ஆர்வம் பார்வையாளர்களிடம் எழுந்துள்ளது. அந்த நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும். கோல்ப் விளையாட்டு பார்வையாளர்களை கவர்ந்திருப்பது மேலும் பல கோல்ப் விளையாட்டு வீரர்களை உருவாக்கலாம்.

20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான பயிற்சியளிக்கவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கும் இந்திய அரசு விளையாட்டுத் துறை முன் வந்திருப்பது பாராட்டிக்குரியது. அதுபோல, பெற்றோர்களும், கல்வி நிறுவனங்களும் முன்வர வேண்டும். தனியார் நிறுவனங்களும் ஸ்பான்சர் செய்யவும், நிதியளிக்கவும் முன் வந்தால் நிறைய விளையாட்டு வீரர்கள் உருவாகி, இதன்மூலம் விளையாட்டுத் துறையில் இந்தியா ஒளிர்வது நிச்சயம்'' என்றார் அதிதி அசோக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com