நேசிப்போம் பாதுகாப்போம்!

ரேசன் அட்டை தாரர்களுக்கு அரசு கொடுக்கும் எந்த பொருளையும் இதுவரை வாங்கியதே இல்லை. அதைப்போன்று கரோனா சிறப்பு நிவாரணமும் வாங்கியது இல்லை.
நேசிப்போம் பாதுகாப்போம்!

ரேசன் அட்டை தாரர்களுக்கு அரசு கொடுக்கும் எந்த பொருளையும் இதுவரை வாங்கியதே இல்லை. அதைப்போன்று கரோனா சிறப்பு நிவாரணமும் வாங்கியது இல்லை. விவசாய சங்கக் கூட்டம், மாடு பராமரித்தல், எழுத்துப் பணி எப்போதும் தன்னை துடிதுடிப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பவர். இதை தாண்டியும் மிகவும் முக்கியமாக கோயில் திருப்பணி, தன்னார்வ அமைப்புகள், ஏழை எளிய மக்கள் யார் கேட்டாலும் உடனே  தன்னால் முடிந்த உதவியை செய்து வருபவர், பி.எஸ்.என்.எல். வேலைக்கு விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு விவசாயத்தை தேர்வு செய்து வெற்றி வாகை சூடியவர் தான் பா.லெட்சுமி தேவி. அவரிடம் பேசியதிலிருந்து:

""நான் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரம். தாமிரபரணி பாயும் பூமி. ஊரின் நடுவே அழகான கைலாசநாதர் கோயிலும், ஊரைச்சுற்றி பசுமை போர்த்திய வயல்களும் கொள்ளை அழகு. 40 ஆண்டுகளுக்கு முன் தோழிகளுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் வயல்களின் ஊடே கடந்து ஆற்றுக்குச் செல்லும்போது என்றாவது ஒரு நாள் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை தோன்றிக் கொண்டே இருக்கும். 

மதுரை பல்கலைக்கழக நூலகவியல் படிப்பு, திருமணம், குழந்தைகள், பி.எஸ்.என்.எல். அலுவலக பணி இப்படி நாள்கள் நகர்ந்தது. இதன் தொடர்ச்சியாக பணி மாறுதலும் மற்றும் சில காரணங்களால் அம்பாசமுத்திரத்திற்கு குடி வந்தோம். அவ்வப்போது விவசாய கனவு எட்டிப் பார்த்துச் செல்லும். 

நாமே உற்பத்தி செய்தால் மட்டுமே நஞ்சற்ற உணவு கிடைக்கும் என்பதை அறிந்து விவசாய நேரமும், காலமும் அழைப்பதை புரிந்து கொண்டேன். வயல், நிலம் எதுவும் கிடையாது. பரம்பரை விவசாயி அல்ல, அச்சமயம் அலுவலக நண்பரின் உறவினர் ஒருவர் வயலை விற்பதாக கூறியவுடன் அதனை வாங்க தீர்மானம் செய்தேன். 

அலுவலகப் பணியை விருப்ப ஒய்வு செய்தபோது நட்பு வட்டங்கள் எப்படி பொழுதைக் கழிப்பாய் என்றபோது, "ஒரு திட்டம் வைத்துள்ளேன்' என்று புன்னகையை பதிலளித்தேன்.

12 வருடங்களுக்கு முன் வாங்கியது 5 மரக்கால்-குருணி வரப்பாடு.  ஆட்கள் ஏற்பாடு செய்து உழுது, நாத்து நட்டு, களை பறித்து, சாண உரம் மட்டுமே போட்டு பயிர் வளர்ந்தது. அறுவடையின்போது  குறைந்தது 10முதல் 15வரை நெல் மூட்டை கிடைக்க வேண்டும். ஆனால் கிடைத்ததோ வெறும் ஒன்றரை மூட்டை தான். 

ரசாயன உரம் மூலமாக பூமி பாழ்பட்டுக் கிடந்தது. அருகில் இருந்த வயலைச் சேர்ந்தவர்கள் ஆளாளுக்கு புத்திமதி சொன்னார்கள். பரிகசித்தார்கள். "வித்துட்டு வேறு வேலையைப் பாரம்மா' என ஆலோசனை கூறினார்கள். 

ஜெயித்துக் காட்டுவாய் என கணவர் உற்சாகம் கொடுத்தார். பக்கத்தில் உள்ள நிலங்கள் சிறிது, சிறிதாக விற்பனை செய்யச் செய்ய அவற்றையும் வாங்கத் தொடங்கினேன். முயற்சியும் நீண்டு கொண்டே இருந்தது. 

5 மரக்கால் வரப்பாட்டில் ஒன்றரை மூட்டையில் ஆரம்பித்த நெல் அறுவடை 3,5,6,10 என்று தொடர்ந்தது. இந்த வருடம் மட்டும் அந்த வயலில் 18 மூட்டை அறுவடையானது.

ஆரம்பத்தில் ஆந்திரா பொன்னி, கர்நாடக பொன்னி என்று மட்டுமே பயிர் செய்யத் தொடங்கிய நான், பாரம்பரிய நெல் பயிர் செய்ய யோசித்தேன். 3வருடங்களுக்கு முன்பு தெரிந்த பாரம்பரிய நெல் வகை ஆத்தூர் கிச்சிலிசம்பா மட்டுமே, அதுவும் பக்கத்தில் யாரிடமும் கிடைக்காமல் 400கி.மீ.பயணம் செய்து தஞ்சாவூரில் வாங்கி வந்து பயிர் செய்தேன். மாப்பிள்ளை சம்பா, பூங்கர், கருப்பு கவுனி என்றும் முயற்சி செய்து ஓரளவு வெற்றி பெற்றேன். என்னுடைய இந்த முயற்சியை பாராட்டி சென்ற ஆண்டு ரோட்டரி சங்கத்தில் சிறந்த விவசாயிக்கான விருது வழங்கினர். இந்த வருடம் அம்பாசமுத்திரம் வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை வேளாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி சிறந்த விவசாயிக்கான பரிசை வழங்கினார். 

முன்பு பரிகாசம் செய்தவர்கள், இயற்கையின் வலிமையை புரிந்து கொண்டு இயற்கை வழி விவசாயத்திற்கு மாற ஆரம்பித்துள்ளனர். அருகில் உள்ள பலர் சர்க்கரை நோய் ரசாயன உரம் போடப்பட்ட  அரிசியால் தான் வருகிறது என உணர்ந்து என்னிடம் வந்து அரிசி விரும்பி வாங்கிச் செல்கின்றனர். 

இதனை விட நெகிழ்ச்சியான ஒரு விஷயம் எனது தந்தைக்கு இவ்வாறு உற்பத்தி செய்த அரிசியை கொடுத்த போது, சாப்பிட்டு விட்டு தனது கையால் சாப்பிட்ட உணவின் ருசி இருப்பதாகக் கூறி எனக்கு ஆசி வழங்கியதும் அவரது இறுதிக்காலம் வரை நான் விளைவித்த அரிசி சாதம் மட்டுமே சாப்பிட்டார்.

இயற்கையை நேசிப்போம், இயற்கையை பாதுகாப்போம் என்பதே நாட்டுக்கு நான் செய்யும் தொண்டாக பெருமை கொள்கிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com