வாடாமல்லியின் மருத்துவப் பயன்கள்!
By - ஏ.எஸ்.கோவிந்தராஜன் | Published On : 10th February 2021 06:00 AM | Last Updated : 11th February 2021 03:48 PM | அ+அ அ- |

நம் வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் வாடாமல்லி பலவித நோய்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. அதன் பயன்களைப் பார்ப்போம்:
வாடாமல்லியின் இலை மற்றும் பூக்கள் சேற்று புண்கள், கொப்புளங்களை எளிதில் குணமாக்கும் தன்மை கொண்டது. வாடாமல்லி பூக்கள் மற்றும் இலைகளை நீரில் காய்ச்சி, வடிகட்டி ஆறவைத்து கண்களைக் கழுவினால் கண்களில் ஏற்படும் சிவப்புத் தன்மை, அரிப்பு சரியாகும்.
தாய்மார்களுக்கு :
குழந்தைகள் போதிய அளவு பால் குடிக்காததாலோ, அதிகமாக பால் சுரப்பதாலோ தாய்மார்களுக்கு வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது. இதற்கு வாடாமல்லி சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
வாடாமல்லி இலையை விளக்கெண்ணெய்யில் வதக்கி ஒன்றன் மீது ஒன்று அடுக்காக வைத்து மார்பகத்தின் மேல் கட்டி வைப்பதால் வலி, வீக்கம் குறையும்.
தோலில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்க :
வாடாமல்லி விழுது ஒரு கப், தயிர் ஒரு கப் (தயிர் இல்லாத நேரத்தில் பாலை கூட பயன்படுத்தலாம்) எடுத்து, அதை நன்றாக குழைத்து, உடலில் மேற்பூச்சாக பயன்படுத்தினால் தோலில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்கலாம்.
தோல் பராமரிப்புக்கான தைலம் :
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து, அதனுடன் சிறிதளவு வாடாமல்லி பூக்களின் அரைத்த விழுதைச் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். தினந்தோறும் குளிப்பதற்கு முன்பு தோலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர தோல் சுருக்கம் மறையும். இது தலைமுடிக்கு நல்ல மருந்தாகிறது. ரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது. மேலும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளைப் போக்கவும் உதவுகிறது.
ஆஸ்துமாவைக் குணமாக்க :
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி வாடாமல்லி இதழ் விழுது, இரண்டு சிட்டிகை சுக்குப் பொடி, இரண்டு சிட்டிகை மிளகுப் பொடி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின் இதில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு தேன் சேர்த்து மிதமான சூட்டில் பருகுவதன் மூலம் ஆஸ்துமா தொல்லையிலிருந்து விடுபடலாம்.