குழந்தைகள் விளையாடி மகிழ..!

கராக்பூர் ஐஐடியில் இறுதியாண்டு ஆர்கிடெக்சர் பயின்று வந்த பூஜா ராய் மற்றும் அவருடன் படித்து வந்த மாணவிகளில் நான்கு பேரும், கல்லூரிக்கு அருகில் இருந்த பள்ளிக் குழந்தைகள் விளையாடி மகிழ ஒரு விளையாட்டு
பூஜா ராய்
பூஜா ராய்


கராக்பூர் ஐஐடியில் இறுதியாண்டு ஆர்கிடெக்சர் பயின்று வந்த பூஜா ராய் மற்றும் அவருடன் படித்து வந்த மாணவிகளில் நான்கு பேரும், கல்லூரிக்கு அருகில் இருந்த பள்ளிக் குழந்தைகள் விளையாடி மகிழ ஒரு விளையாட்டு மைதானம் அமைத்து தர விருப்பப்பட்டனர். இதற்காக புதிய விளையாட்டு சாதனங்களை வாங்காமல் தாங்கள் படித்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயனற்ற பழைய டயர்கள், கேபிள் டிரம்களைக் கொண்டு அதிக செலவில்லாமல் ஆபத்து இல்லாத விளையாட்டு மைதானத்தை உருவாக்கிக் கொடுத்தனர். பலரது பாராட்டைப் பெற்றதோடு, அந்த பள்ளிக் குழந்தைகள் அடைந்த மகிழ்ச்சி பூஜா ராய் மற்றும் அவரது தோழிகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அதிக செலவின்றி குழந்தைகள் விளையாடி மகிழ மைதானங்கள் அமைப்பது பற்றிய தகவல்களை அறிந்த மற்ற பள்ளி நிர்வாகங்கள், தங்கள் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உதவும் பொருட்டு மைதானங்களை உருவாக்கி தரும்படி பூஜாவை அணுகினர். கராக்பூரில் சில பள்ளிகளில் மைதானம் அமைக்க நிலம் இல்லை. இருப்பினும் பள்ளிகளுக்கு அருகிலுள்ள பயனற்ற புதர் மற்றும் குப்பைகள் மண்டியிருந்த காலி மைதானத்தை சீரமைத்து, மீண்டும் மக்கள் அங்கு அசுத்தம் செய்யாத வகையில் சிறு அளவில் விளையாட்டு மைதானங்களை பூஜா குழுவினர் அமைத்து தந்தனர்.

அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகள் பூஜாவை தொழில் முனைவோராக உயர்த்தியது. 2017-ஆம் ஆண்டு அன்தில் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் உருவாயிற்று. இதில் பூஜாவுடன் சேர்ந்து 20 பேர் பணியாற்றத் தொடங்கினர்.

பயிற்சி முறையில் ஆரம்பித்த இந்த திட்டம் மக்களிடமும், பள்ளி நிர்வாகமும் பெரும் வரவேற்பைப் பெறுமென்றோ, என்னைத் தொழில் முனைவோராக்கும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை'' என்று கூறும் பூஜாராய், படிப்படியாக வெற்றிப் பெற்றது பற்றி இங்கு விவரிக்கிறார்:

""குழந்தைகள் பயமின்றி சுலபமாக ஏறி பாதுகாப்பாக விளையாடும் வகையில் டிரக்குகள், லாரிகளில் பயன்படுத்தி பின்னர் வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட பழைய பெரிய டயர்களை கொண்டு யானை, ஆக்டோபஸ், பைக் போன்று வித்தியாசமாக வடிவமைத்து மைதானத்தில் நிறுவுகிறோம். இவை பத்தாண்டுகள் வரை உழைக்கும். பராமரிக்க தேவையில்லை. இதற்காக பழைய டயர்களை பெறுவதற்கு மகிந்தரா நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ளோம். அவர்கள் மூலமாகவே கேபிள் டிரம்களும் கிடைக்கின்றன.

கராக்பூரில் குறைந்த செலவில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்ட தகவலை அறிந்து கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா உள்பட 17 மாநிலங்களிலிருந்து எங்களுக்கு அழைப்புகள் வரத் தொடங்கியதால் தற்போது எங்கள் நிறுவனம் முழு அளவில் செயல்பட்டு வருகிறது.

எங்களைப் பொருத்தவரை நகரங்களை விட கிராமப்புறங்களில் பள்ளிக் குழந்தைகள் மட்டுமின்றி, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குழந்தைகளும் மகிழ்ச்சியாக விளையாடும் வகையில் மைதானங்களை அமைக்க வேண்டுமென்பது லட்சியமாக இருப்பதால் கிராமப்புற அழைப்புகளுக்கே முதலிடம் கொடுத்து வருகிறோம்.

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டுமென்று பேசுகிறோமே தவிர அவர்கள் விளையாட வசதிகள் ஏதும் நாம் செய்து தருவதில்லை. விளையாடுவது குழந்தைகள் உரிமை. அவர்களுக்கு உணவும், உடையும் அளிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் விளையாட்டும் முக்கியம். இதை உணர்ந்த பல மாநிலங்கள் எங்களுக்கு விடுத்த அழைப்பை ஏற்று பள்ளிகளின் தேவைக்கேற்ற அளவில் மைதானங்களை அமைத்து தருகிறோம்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஹைகமிஷன் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்கி, ரோஹிங்யா அகதிகளின் குழந்தைகளுக்குக் கூட அவர்கள் தங்கியுள்ள முகாமில் விளையாட்டு மைதானமொன்ற அமைத்துக் கொடுத்துள்ளோம்.

பொதுவாக மக்கள் கூடுமிடங்களை ஒட்டியே மைதானங்களை அமைத்து தருவது பாதுகாப்பாக இருக்குமென்ற எண்ணத்தில் இடங்களைத் தேர்வு செய்கிறோம். டெல்லி, மேவாட், ஹரியானாவில் குடிசைப் பகுதிகளையொட்டி மைதானங்களை அமைக்க நிலம் ஒதுக்கியபோது, அந்த இடத்தை சுத்தம் செய்து கொடுக்கும் பொறுப்பை அந்தந்த மாநிலங்களே ஏற்றுக் கொண்டன. சில மைதானங்கள் இயற்கை சூழலையொட்டி ஏரிகளின் பக்கத்தில் அமைக்க அனுமதிப்பதுண்டு.

மைதானங்களை அமைப்பது மட்டும் எங்கள் பணியல்ல, சில சமயங்களில் நகரங்களை சுத்தப்படுத்தும் பணியையும் மேற்கொள்கிறோம். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை கடமையாக கருதுகிறோம். இதில் லாபமடைய வேண்டுமென்பது எங்கள் நோக்கமல்ல. எங்களுக்கு நிதியுதவி செய்ய கார்ப்பரேட் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. மாநில அரசுகளும் உதவி செய்கின்றன.

ஒடிசாவில் இந்த பணியை மேற்கொண்டபோது, ஒடிசா மைனிங் கார்ப்பொரேஷன் முழுச் செலவையும் ஏற்றுக் கொள்வதாக கூறியதோடு, புவனேஸ்வர் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி மூலம் பணத்தை கொடுத்து உதவியது. ஆந்திராவிலும் செலவுகளை அரசே ஏற்றுக் கொண்டது.

சாதாரணமாக ஒரு மைதானத்தை அமைக்க நான்கு அல்லது ஐந்து நாள்கள் எடுத்துக் கொள்கிறோம். இதுபோன்ற சமயங்களில் எங்கள் குழுவினருடன் சில சமூக ஆர்வலர்களும் தானாக முன்வந்து எங்களுக்கு உதவுவதுண்டு. இது எங்களுக்கு பொது சேவையாக மட்டுமின்றி அன்தில் கிரியேஷன்ஸ் மூலம் குழந்தைகள் விளையாடுவதற்கேற்ப புதிய வடிவமைப்புகளை உருவாக்க உதவுகிறது'' என்று கூறும் 29 வயதாகும் பூஜாராய், இதுவரை நாடெங்கும் நூற்றுக்கு மேற்பட்ட மைதானங்களை உருவாக்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com