அருளாளர்கள் போற்றும் தாய்மை!

பெறற்கரும் பேறுகளில் தலைசிறந்தது, தாய்மைப்பேறு! தாய்மைப் பேற்றின் மகத்துவத்தை உணர்த்துவதற்காகவே, திருச்சி மலைக்கோட்டையில் வீற்றிருக்கும் சிவபெருமான், காவிரிக்கரையில் பிரசவ வேதனையில் துடித்துக்
அருளாளர்கள் போற்றும் தாய்மை!

பெறற்கரும் பேறுகளில் தலைசிறந்தது, தாய்மைப்பேறு! தாய்மைப் பேற்றின் மகத்துவத்தை உணர்த்துவதற்காகவே, திருச்சி மலைக்கோட்டையில் வீற்றிருக்கும் சிவபெருமான், காவிரிக்கரையில் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த புலைச்சிக்குப் பிரசவம் பார்த்துத் "தாயுமானவர்' எனும் 
திருநாமத்தைப் பெற்றார். "தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்னும் பழமொழியும், தாய்மையின் பெருமையைப் பேசுகின்றது.
தாய்மையின் அருமை பெருமைகளை, இல்லறத்தாரைக் காட்டிலும், துறவறத்தார்களே செவ்வனே உணர்ந்திருக்கிறார்கள்.  அதிலும் மடாதி
பதிகள் ஆகிவிட்டால், பிறந்த குடும்பத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கக்
கூடாது. தோன்றிய குடும்பத்தின் சுக துக்கங்களைப் "பூர்வாசிரமம்' என ஒதுக்கிவிடுவார்கள். என்றாலும், பெற்ற தாயின் உயிருக்கு ஒரு கேடு என்றால், ஆதிசங்கரர் போன்ற பீடாதிபதிகள், மடத்துச் சம்பிரதாயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இறுதிக்கடன் ஆற்ற வந்துவிடுகிறார்கள்.
ஆதிசங்கரரின் அன்னை ஆரியாம்பிகையின் மறைவைத் தாங்க முடியாத சங்கரர், அழுது புலம்பியதை, அவர் இயற்றிய "மாத்ருகாபஞ்சகம்' எனும் ஐந்து சுலோகங்கள் பேசுகின்றன. "தாயே! என்னைச் சுமந்திருந்த காலத்தில் வாய்க்கு ருசிபோய் உங்கள் உடம்பு மெலிந்து போயிற்று! ஒரு வருடம் மலம், சிறுநீர் ஊடுருவிய படுக்கையில் கிடந்தீர்கள். தடுக்க முடியாத பிரசவ வேதனையில் துடித்தீர்கள்! கர்ப்ப காலத்தில் தாங்கள் பட்ட அல்லல்களில் ஒன்றையாவது, தீர்க்க முடியாதவனாகி விட்டேன்! சுமைகளைச் சுமந்த தாய்க்கு நமஸ்காரம்'.
"ஹே! தாயே! நான் குருகுலத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் நான் சந்நியாசம் பூண்டதாகக் கனவு கண்டீர்கள். உடன் குருகுலத்திற்கு ஓடோடி வந்து, ஓவென்று அழுதீர்கள். நீங்கள் அழுததைப் பார்த்துக் குருகுலமே அழுதது. உங்கள் கால்களில் விழுந்து நமஸ்கரிக்கின்றேன்'.
"தாயே! நீங்கள் மரிக்கும் நேரத்தில் அருகில் உயிர்த் தண்ணீர் கூட ஊற்ற முடியவில்லை. மரித்த நேரத்தில் சிரார்த்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிசும் கொடுக்க முடியாமல் போய்விட்டேன். தாயே! உங்கள் மரண வேளையில், தாரக மந்திரம்கூட ஜபிக்க முடியவில்லை. காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே'!
"உயிரோடிருக்கும்போது என்னை மடியில் ஏந்தி, என் ராஜா! என் கண்ணே! நீ சிரஞ்சீவியாக வாழவேண்டும் என்று கொஞ்சினீர்களே, அந்த வாயில் சாரமில்லாத பிடியரிசியைத் தானே போடுகின்றேன்'.
"பிரசவ காலத்தில் அம்மா, அம்மா, சிவா, என்று உரக்கக் கத்தினாய் அல்லவா தாயே! இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா எனக்கூறி அஞ்சலி செய்கிறேன்'.
மேற்கூறியவை ஐந்து சுலோகங்களின் சாராம்சம் ஆகும். தாய்மைப் பேற்றின் மகத்துவத்தை, இந்தியா முழுமைக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் ஆதிசங்கரர்.
ஆதிசங்கரரைப் போலவே திருவெண்காடர் எனும் பட்டினத்தடிகளும் முற்றும் துறந்த முனிவர் ஆவார். பெரும் செல்வக்குடும்பத்தில் பிறந்த பட்டினத்தடிகள், இல்லற வாழ்க்கையில் சலிப்புற்று, "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' எனக்கூறி, துறவறம் மேற்கொண்டார்.
திருவோடு ஏந்தி ஊர் ஊராய் சுற்றிக்கொண்டிருந்த பட்டினத்தார், தம் அன்னை சிவகலை மறைவுற்ற செய்தி கேட்டு, சுடுகாட்டுக்கு ஓடோடி வருகிறார். ஆதிசங்கரர் ஐந்து சுலோகங்களில் வடித்தெடுத்த தாய்மைப்பேற்றைப் பட்டினத்தார் பத்து வெண்பாக்களில் பிழிந்து தருகிறார்.
"தாயே! அங்கமெல்லாம் நொந்து போகும்படியாகப் பத்து மாதங்கள் சுமந்தீர்கள்! பெற்ற குழந்தை மகன் என்றவுடன், பாசமுடன் பரிந்தெடுத்து, இரண்டு கரங்களிலும் ஏந்தி தாய்ப்பாலை ஊட்டினீர்கள்! அத்தகைய தாயை இனி எந்தப்பிறப்பில் காண்பேன்?
"என்னைப் பெறவேண்டுமென்று பலகாலம் தவமிருந்து, முந்நூறு நாட்கள் வயிற்றிலே தாங்கி, செல்வன் செவ்வனே பிறக்க வேண்டுமென்று, இரவு பகலாக திருவெண்காடரைத் தியானத்தீர்கள்! ஆலிலை போன்ற வயிறு சரியச் சரிய என்னைச் சுமந்து பெற்றீர்கள்! அத்தகைய தாயாருக்கு எரியூட்டும் கதிக்கு ஆளானேன்'.
"கூடையிலும் தொட்டிலிலும் கட்டிலிலும் வைத்து என்னைச் சீராட்டித் தாலாட்டியதோடு, உங்கள் மார்பின் மீதும் தோள்மீதும் சுமந்தீர்கள்! மேலும், உங்கள் முந்தானையிலும் ஏந்திக் கொஞ்சினீர்கள்! அந்தத் தாயின் தலையிலா இப்பொழுது கொள்ளிக் கட்டையைச் சொருகப் போகிறேன்?'
"நொந்து சுமந்து பெற்ற என்னை நோகாமல் ஏந்தி, தாய்ப்பாலை ஊட்டி இரவு பகலாகக் கரங்களில் ஏந்தி காப்பாற்றினாள் என் தாய்! அந்தத் தாயின் மேனியிலா இப்பொழுது எரியூட்டப்போகிறேன்?'
"சுவையுள்ள தேனே, அமிர்தமே, செல்வத் திரவியமே, பூமானே என அழைத்த வாய்க்கு, இப்பொழுது அரிசியை அல்லவா இடுகிறேன்! மெல்ல முகம் மேல் முகம் வைத்து, முத்தாடி, என் மகனே என அழைத்த வாய்க்கு, அள்ளியிடுவது அரிசியோ? தலைக்கு வைப்பது கொள்ளியோ?'
"சிவபெருமான் வைத்த தீ திரிபுரத்தை எரித்தது. பின்னர் அநுமன் வைத்த நெருப்பு இலங்கையை எரித்தது. ஜீரண சக்திக்காக உங்கள் தொப்புள்கொடி வழியாக வந்த தீ, என் அடி வயிற்றிலே! யான் வைக்கும் தீ உங்கள் திருமேனியை வேக வைக்கின்றதே'.
"எந்தப் பறவையின் நிழலும் என்மேல் படாமல், (பறவையின் நிழல்பட்டால் குழந்தைக்கு நோய் வரும்) என்னைப் போற்றி வளர்த்த தாயின் திருமேனி, யான் வைத்த தீயால் வெந்து சாம்பல் பொடி ஆகின்றதே! ஐயகோ! பாவியேன் என் செய்வேன்?'
"சோணகிரி வித்தகனை எந்நேரமும் நினைந்து வரங்கிடந்து என்னைப் பெற்றெடுத்த தாய், என்னை மறந்தாளோ? வெந்தாளோ? உன்னிடத்து வந்தாளோ?'
"நேற்றிருந்த என் அன்னை இன்று வெந்து நீறு ஆனாள். எல்லாம் சிவமயமே என்று எல்லோரும் பால் தெளிக்க வாருங்கள்.
பட்டினத்தார் பாடிய மேற்கூறிய பத்துப் பாடல்களும், தாய்மைப் பேற்றின் மாண்பினை ஆழமாகவும், அகலமாகவும் கூறுவனவாகும்.
ஆதிசங்கரருக்கும், பட்டினத்தாருக்கும் முன், தாய்மையைச் சிறப்பாகப் போற்றிப் பாடியவர், மாணிக்கவாசகர். "இறைவன் ஒப்பு உவமையில்லாதவன் என்றபோதிலும், அந்த இறைவனை உவமிக்கின்றபோது, தாயைப் போன்றவன்' என்பார், மாணிக்கவாசகப் பெருந்தகை!
"தாயிற் சிறந்த தயவான தத்துவனே எனச் சிவபுராணத்திலும், "தாயிற் பெரிதும் தயாவுடைய தம்பெருமான்' எனத் திருப்பூவல்லி எனுந்தலைப்பிலும் வருணிக்கின்றார். இறைவன் அடியவர்களின் தேவையறிந்து அருள் செய்பவன்; எதைப்போலவென்றால், குழந்தையின் பசியறிந்து பாலூட்டும் தாயைப் போன்று எனப் பாடுவார்.
மாணிக்கவாசகரின் "போற்றித் திருவகவ'லில், தாய்மைப் பேற்றின் உச்சத்தைக் காணலாம். தாயின் வயிற்றில் கரு உருவாகும்போது, கருவை அழிக்க புழுக்கூட்டங்கள் உருவாகும். முதல் மாதத்தில் உருவான கரு "தான்றிக் காயின் வடிவத்தைப் போன்றிருக்குமாம்.  அந்தக் காயின் வடிவத்தைப் போன்ற கரு, இரண்டாக உடையும்போது, தாய் துன்பத்தை அடைவாள். இரண்டாம் மாதத்தில் பிளவுபட்ட கரு ஒருமைப்படும்போதும், தாய் துன்பத்தை அடைவாள்.
மூன்றாம் மாதத்தில், தாயின் கருப்பையில் பெருக்கிடும் மதநீராலும் துயரம் அடைவாள். நான்காம் மாதத்தில் பெருக்கெடுக்கும் மதநீரால், கருப்பையில் ஒரு பேரிருள் உருவாகும்.  ஐந்தாம் மாதத்தில் கலைவதற்காக முயலும் பிண்டம், நிலைப்பதற்காக முயலும். முயற்சியில் தாய்க்கு நோவு ஏற்படும். ஆறாம் மாதத்தில் குழந்தை பெருக்கின்றபோது, தாய்க்கு வலி ஏற்படும்.
ஏழாம் மாதத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு கருப்பை விரிவடையும்போதும், தாய்க்கு "நோவு உண்டாகும். எட்டாம் மாதத்தில் வளர்ந்த குழந்தை புரளும் போதும், தாய்க்கு வலி உண்டாகும்.  ஒன்பதாம் மாதத்தில் குழந்தை வெளிவரும் வாயிலுக்கு வருகின்றபோதும், தாங்க முடியாத துன்பம் தாய்க்கு ஏற்படும். பத்தாம் மாதத்தில் பிரசவத்தின்போது தாய் படுகின்ற துன்பம், கடல் போன்றதாகும்.
மேற்கூறியவாறு தாயின் துன்பங்களை வருணிக்கும்போது, தாய்மைப் பேற்றின் பெருமை வெள்ளிடைமலையாக வெளிப்படுகின்றது.
அருணகிரிநாத சுவாமிகள் தாய்மைப் பேற்றின் பெருமையை வித்தியாசமாக அணுகுகிறார். "குழந்தைக்குப் பசி எப்பொழுது வரும் என்பது தெரிந்து, அதற்குப் பாலூட்டுவாள் தாய். அப்படிப் பால் கொடுத்துவிட்டு, உடன் படுக்கையிலோ, தொட்டிலிலோ போடமாட்டாளாம். குழந்தை குடித்த பால் அப்படியே உணவுக்குழாயில் நின்றுவிடாமல், அடிவயிற்றைச் சென்றடைவதற்கு அக்குழந்தையின் முதுகைச் சற்று நேரம் தடவிக்கொண்டே இருப்பாளாம். அப்படிச் செய்தால் குடித்த பால் அடிவயிற்றைச் சென்றடையுமாம். இதனைத் திருச்செந்தூர் திருப்புகழில், "தந்த பசிதனையறிந்து முலையமுது தந்து முதுகு தடவிய தாயார்' எனப் பாடுவார்.
அருணகிரிநாதரைப் போலவே, பரஞ்சோதி முனிவரும் திருவிளையாடற் புராணத்தில் தாய்மையின் பெருமையைச் சிறக்கப் பாடுகின்றார்.  "வைகையாற்றில் வெள்ளம் வந்தபோது வந்தி எனும் மூதாட்டிக்குக் கூலியாளாகச் செல்லுகிறார் சோமசுந்தரக் கடவுள். உழைப்புக்குக் கூலியாக வந்த தந்த பிட்டு, பெருமானுடைய தீராத களைப்பை எல்லாம் தீர்த்ததாம். அதனைப் பரஞ்சோதியார் "தந்தையொரு தாயின்றித் தனிக்கூலியாக வந்த பெருமானுக்கு இவள் அன்னையென வந்தாளோ' எனப்பாடுவார். வந்தியைப் பெற்ற தாயாகவே நினைக்கிறார்; சோமசுந்தரக்கடவுள்.
தாயைப் பிள்ளை பெறும் இயந்திரமாகக் கருதும் இன்றைய சமூகத்தின் கண்களை, அருளாளர்கள் போற்றிய தாய்ம்மைப் பேறு, கண்டிப்பாக ஒருநாள் திறக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com