தடைகளை கடந்தால் வெற்றி நிச்சயம்!

இன்று இந்திய அளவில் அதிக வருவாய் ஈட்டும் பெண்களில் முன்னணியில் இருப்பவர், கிரண் மசும்தார்ஷா. 
தடைகளை கடந்தால் வெற்றி நிச்சயம்!


இன்று இந்திய அளவில் அதிக வருவாய் ஈட்டும் பெண்களில் முன்னணியில் இருப்பவர், கிரண் மசும்தார்ஷா. இவர் பயணித்த பாதை என்பது மிகவும் கடினமானது. பல்வேறு தடைகளை தாண்டித்தான் இந்த வெற்றியை அவர் அடைந்திருக்கிறார்.

குஜராத்தை சேர்ந்தவர்தான் இந்த கிரண். இவருக்கு டாக்டர் ஆக வேண்டுமென்பது பெரும் விருப்பமாக இருந்தது. ஆனால் வீட்டு பொருளாதார நிலை கைக் கொடுக்காததால் பி.எஸ்.சி. விலங்கியல் படித்தார். எம்.எஸ்.ஸியை ஆஸ்திரேலியாவில் படித்தார்.

படிப்பு முடிந்து இந்தியாவுக்கு திரும்பிய கிரண், கம்பெனி கம்பெனியாக ஏறி வேலை தேடினார். சுமார் இரண்டு ஆண்டுகள் கிரணின் வாழ்வு, நேர்முகத் தேர்வுக்குச் செல்வதும், பெண் என்ற காரணத்திற்காக வேலை மறுக்கப்படுவதுமாகவே கடந்தது. பிறகு சொந்தமாக தொழில் செய்யலாம் என்று யோசித்தார்.

சொந்த தொழில் தொடங்குவதற்கு கிரணின் அப்பாவும் சம்மதித்தார். பணம் திரட்ட வீட்டுப் பத்திரத்தையும் கொடுத்தார். "என்சைம்' எனப்படும் நொதிப் பொருள்களை உற்பத்தி செய்யும் சிறிய தொழிற்சாலையை தனது வீட்டிலேயே தொடங்கினார் கிரண். இதற்கான முதலீடு ரூபாய்  10ஆயிரம் ஆனது.

1978-இல் பயோகான் என்று பெயரிடப்பட்ட அந்நிறுவனத்தில், பப்பாளிப் பழத்தில் இருந்து நொதிப் பொருள்கள் எடுக்கப்பட்டது. இந்த என்சைம் இறைச்சியைப் பதப்படுத்தப் பயன்படுவது.

பெண் நடத்தும் நிறுவனம் என்பதால் தொடக்கத்தில் வேலைக்கு ஆள் கிடைப்பதே சிரமமாக இருந்தது. பின்னர் ஒரு வழியாக பிரச்னை சமாளிக்கப்பட்டது. வேலை செய்ய ஆட்கள் கிடைத்த பிறகு, நிறுவனத்தை விரிவாக்க திட்டமிட்டார் கிரண். வங்கிகளை அணுகினார். வங்கிகளோ அவரது கடன் விண்ணப்பத்தை நிராகரித்தன. இறுதியாக தனியார்  வங்கி அவருக்கு கடன் கொடுத்தது. அதைக் கொண்டு தன்னுடைய தொழிற்சாலையை விரிவுபடுத்தினார். சில ஆண்டுகளிலேயே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்குத் தொழிலை விரிவுபடுத்தினார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்று பலவற்றிற்கும் உற்பத்தி செய்த நொதிப்பொருள்களை ஏற்றுமதி செய்தார். பின்னர் தன் பார்வையை மருந்துகள் தயாரிப்புப் பக்கம் திருப்பினார். முதலீட்டுக்காக பயோகானின் பங்குகளை பங்குச்சந்தையில் வெளியிட்டார். ஒரே நாளில் 4500 கோடி ரூபாய் கிடைத்தது. நிறுவனமும் வேகமாக வளர்ந்தது. இவரது திறமையையும், வளர்ச்சியையும் கண்ட ஸ்காட்லாந்தின் முக்கிய தொழிலதிபரான ஜான் ஷா என்பவர் கிரணை திருமணம் செய்து கொண்டார். பெரிய தொழிலதிபராக அவரது கணவர் இருந்தாலும் முடிவுகளை கிரண் மட்டுமே எடுக்கிறார்.

பயோகானில் முதலீடு செய்யும் சந்தர்ப்பம் வந்தபோது, தன்னுடைய ஸ்காட்லாந்து வீட்டை விற்று அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு பயோகானின் பங்குகளை வாங்கினார் ஜான் ஷா. சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் மூன்று அடிப்படை விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததாக கிரண் குறிப்பிடுகிறார்.
தான் உட்பட தனது நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன்நடந்து கொள்ளுதல், முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் ஒருவரை ஒருவர் மதித்து பணியாற்றுதல், யார் மீதும் பொறாமை கொள்ளாமல் அவரவர் வேலைகளைச் சரியாகச் செய்தல்,  ஆகிய விஷயங்களை கடைபிடித்ததால் வெற்றி சாத்தியமே'' என்கிறார் கிரண் இன்று ஊழியர்களின் எண்ணிக்கையில், உலகிலேயே 7-ஆவது பெரிய பயோடெக்னாலஜி கம்பெனியாக பயோகான் நிறுவனம் திகழ்கிறது என்றால் அதற்கு காரணம் தடைகளை தகர்த்தெறியும் கிரணின் தன்னம்பிக்கைதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com