பாட்டும் - ஓவியமும்...

திரைப்படத்துறையிலும், கர்நாடக இசைத்துறையிலும் தனது குரல் வளத்தால் முத்திரை பதித்து வலம் வந்து கொண்டிருப்பவர் பாடகி மஹதி.
பாட்டும் - ஓவியமும்...


திரைப்படத்துறையிலும், கர்நாடக இசைத்துறையிலும் தனது குரல் வளத்தால் முத்திரை பதித்து வலம் வந்து கொண்டிருப்பவர் பாடகி மஹதி. திரைத்துறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி என்று சுமார் 700-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடி இருக்கிறார். கரோனா பொதுமுடக்க காலத்தில் இவரது இன்னொரு முகம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆம்! பொது முடக்கத்தின்போது வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழலில் இவருக்கு ஓவியம் வரைவதில் ஈடுபாடு ஏற்பட்டு, இப்போது அதில் மிகுந்த ஆர்வத்துடன் இறங்கி இருக்கிறார். தனது ஓவிய அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார் மஹதி:

திடீரென்று ஓவியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?

நான் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படிக்கும்போது கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் எடுத்து படித்தேன். பள்ளி நாள்களிலும் சரி. அதன் பிறகும் சரி என்னால் ஓவியம் வரைய முடியும் என்று நான் நினைத்துப் பார்த்தது கூடக் கிடையாது. பொது முடக்க காலத்தின் ஆரம்பத்தில் வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போனது. கரோனா குறித்தும், எதிர்காலம் குறித்தும் ஓர் அச்சம் ஏற்பட்டது. தொற்று மற்றும் பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று சினிமாத் துறை. எனவே, எல்லோருக்கும் வாழ்க்கையிலேயே ஒரு விதமான வெறுமை ஏற்பட்டது. வீட்டில் இருந்த நேரத்தில் அதிக நேரம் பாட்டுப் பயிற்சி செய்ய முடிந்தது;

பத்மஸ்ரீ சுதா ரகுநாதனுடன் இணைந்து 47 பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து உலக நலனுக்காக "மைத்ரீம் பஜத' பிரார்த்தனைப் பாடலை பாடச் செய்து வெளியிட்டோம். அகில இந்திய அளவில் 150-க்கும் அதிகமான திரைப்படப் பாடகர்கள், பாடகிகளை ஒருங்கிணைத்து பிரதமர் நிவாரண நிதிக்காக, "ஜெயது ஜெயது பாரதம்' பாடலைப் பாடி வெளியிட்டதும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. அதில் ஆஷா போஸ்லே கூட பாடினார் என்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்பட்டது.

பொது முடக்கத்தின்போது, குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடிந்தது. ஆனாலும் நிறைய ஓய்வு நேரம் இருந்தது. நண்பர் ஒருவர் அனுப்பிய மண்டலா பாணி ஓவியம் ஒன்றைப் பார்த்தபோது, அதன் அழகு என்னை மிகவும் கவர்ந்தது. நாமும் அது போல வரைந்து பார்க்கலாமே என்று தோன்றியது. அதுதான் என் ஓவிய ஆர்வத்தின்துவக்கப் புள்ளி.

மண்டலா பாணி ஓவியம் பற்றிச் சொல்லுங்களேன்?

மண்டலா என்றால் சமஸ்கிருதத்தில் வட்டம் என்று பொருள். பல்வகை வட்ட வடிவங்களை திரும்பத் திரும்ப வரைவது மண்டலா பாணி ஓவியம். நானும் அது பற்றி விவரங்களைத் தெரிந்துகொண்டு முயற்சி செய்து பார்த்தேன். திருப்திகரமாக இருந்தது. அது என் ஆர்வத்தை அதிகரித்தது.

உங்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

யூடியூப் மூலமாக ஓவியம் வரைவது பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். நான் வரைந்த படங்களைப் பார்த்துவிட்டு, என் கணவர் பாராட்டி ஊக்குவித்தார். அவர் ஒரு நல்ல ஓவியர். ஆனால், பிசியான முகச்சீரமைப்பு சர்ஜன் என்பதால் ஓவியம் வரைவதற்கெல்லாம் அவருக்கு நேரமில்லை. திருப்பூரைச் சேர்ந்த சுசீலா பிரகாஷ் என்ற கேரள மியூரல் சுவர் ஓவியக் கலை ஆசிரியரின் அறிமுகம் கிடைத்தது. அவர் ஆன்லைன் மூலமாக ஓவியம் வரையக் கற்றுக் கொடுக்கிறார் என அறிந்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவரிடம் அடிப்படை, அதற்கு அடுத்த இடை நிலை என இரு பயிற்சிகளை முடித்தேன். ஆரம்பத்தில் என் மகனின் கலர் பென்சில்களில் துவங்கி, அக்ரலிக், ஆயில் பெயிண்டிங் என நாளடைவில் முன்னேறினேன்.

உங்களது கிருஷ்ணர் ஓவியம் முகநூலில் பலரது பாராட்டைப் பெற்றதே? அந்த அனுபவம் பற்றி?

ஓவிய ஆசிரியர் சுசீலா பிரகாஷ் கிருஷ்ணா ஓவியம் வரைவது எப்படி என்று சொல்லிக் கொடுப்பதற்காகவே ஒரு பயிற்சியை நடத்தினார். அதன் பயனாகத்தான் என்னால் அந்த ஓவியத்தை வரைய முடிந்தது. அவர், ஒரு அவுட்லைனை பயிற்சி மாணவர்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்தார். ஏறத்தாழ எல்லா மாணவர்களும் அந்தப் படத்தை அப்படியே டிரேஸ் செய்து, வரைந்தாலும், என்னைப் போன்ற இரண்டு மூன்று பேர்கள் மட்டுமே அவர் அனுப்பியதை அடிப்படையாக வைத்து சொந்தமாக அவுட்லைன் வரைந்து கொண்டு, ஓவியத்தை ஆரம்பித்தோம். தினம் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் என்று சுமார் ஒரு மாத காலத்தில் கிருஷ்ணர் ஓவியத்தை வரைந்து முடித்தேன்.

குடும்பத்தினர் மட்டுமின்றி, மற்றவர்களும் உனக்குள்ளே இப்படியோர் ஓவியத் திறமை மறைந்திருப்பது இத்தனை வருடங்களாய் எனக்குத் தெரியவில்லையே? என்று நெகிழ்ச்சியோடு கூறினார்கள்.

ஒரு நல்ல கச்சேரி செய்து முடித்தவுடன், ரசிகர்கள் மேடைக்குத் திரண்டு வந்து பாராட்டும்போது மனசு மகிழ்ச்சியில் திக்கு முக்காடுமே, அது மாதிரியே சந்தோஷமாக இருந்தது. நானும் ஓவியம் வரைவேன் என இதற்கு முன் நான் கனவிலும் நினைத்ததில்லை.

பொது முடக்கத்தில் ஓவியம் வரையும் பொருள்கள் கிடைப்பதில் சிரமம் இருந்திருக்குமே?

மிகவும் சரி! பல வருடங்களுக்கு முன் ஓவியம் வரைய என் கணவர் பயன்படுத்திய பொருள்களின், மிச்சத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். பொது முடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, வாங்கி சேமித்துக் கொண்டேன். அந்த சவாலை ஒருவாறு சமாளித்து விட்டேன்.

ஓவியராக மறக்க முடியாத அனுபவம்?

எனது ஓவியத் திறமையை வளர்த்துக் கொண்டு, நிறைய ஓவியங்கள் வரைந்தது கரோனாவில் ஏற்பட்ட பல வகையான எதிர்மறை பாதிப்புகளுக்கு மத்தியில் எனக்கு தனிப்பட்ட முறையில் நடந்த பாசிடிவான விஷயம். மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் நானும், என் கணவரும். ஆண்டுதோறும் இமயமலைப் பகுதியில் மலையேற்றப் பயணம் மேற்கொள்வது எங்கள் வழக்கம். எனது கணவரது பிறந்த நாளன்று, அந்தப் பின்னணியில் ஓர் ஓவியம் வரைந்து என் கணவருக்குப் பரிசளித்தது மறக்க முடியாத ஒன்று.

அடுத்த திட்டம்?

எங்கள் வீட்டின் ஒரு பகுதியை புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம். புதுப்பிக்கப்பட்ட பகுதியில் ஒரு பெரிய ஓவியம் வரைந்து சுவரில், பொறுத்த வேண்டும் என்பது என் ஆசை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com