பார்வையற்றவர்களுக்கு பாதை காட்டும் பேராசிரியை !

புறப்பார்வை இல்லாவிட்டாலும் அகப்பார்வை ஆயிரம் உடையவர்கள். வந்தவர் குரல் கேட்டவுடன் வந்தவரின் பெயரை அறிவார்கள். பணத்தின் மதிப்பு என்ன என்பதைப் பார்க்காவிடினும் விரலால் உணர்வார்கள் !
பார்வையற்றவர்களுக்கு பாதை காட்டும் பேராசிரியை !

புறப்பார்வை இல்லாவிட்டாலும் அகப்பார்வை ஆயிரம் உடையவர்கள். வந்தவர் குரல் கேட்டவுடன் வந்தவரின் பெயரை அறிவார்கள். பணத்தின் மதிப்பு என்ன என்பதைப் பார்க்காவிடினும் விரலால் உணர்வார்கள் !

கணினி  இயக்கவும் கற்கிறார்கள், கண் பார்வையின்றியே சாதிக்கிறார்கள் ! எனவே பார்வையில்லை என்பது ஒரு குறைபாடும் இல்லை. சாதனை புரிவதற்கு எந்தத் தடையும் இல்லை என்ற தன்னம்பிக்கை வார்த்தைகளுடன் பேசஆரம்பிக்கிறார் முனைவர் குருஞானாம்பிகா.

கோயம்புத்தூர் அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றும் இவர் பல பார்வை இழந்த மாணவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டு, அவர்களது வாழ்க்கை
யில் பல மாற்றங்களை ஏற்படுத்தியவர். பார்வை குறைபாடுள்ள மாணவிகள் பலரை பண்போடு வழி நடத்தி, அவர்களைப் பட்டதாரிகளாக்கி வாழ்வில் வெளிச்சம் காட்டிய பெருமைக்குரியவர். அவரிடம் பார்வையற்ற மாணவிகள்
பற்றி கேட்ட போது பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்: 

பெரும்பாலும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குப் பல்வேறு வசதிகள் கிடைக்கின்றன. தனிப்பட்ட முறையில் பார்த்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரெய்லி முறையை மட்டும் பயன்படுத்தி வந்தார்கள். இன்று நாம் எல்லோரும் பயன்படுத்தும் கணினிகளை அவர்களும் பயன்படுத்தும் அளவிற்குப் பல தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. இதற்காகப் பிரத்யேகமாக ஜாஸ், என்.டி.ஏ போன்ற சாப்டூவர்கள் வந்துவிட்டன.   செல்போனில் பல ஆப்கள் பார்வையற்றோருக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

ஆனாலும் பார்வையற்ற பெண்களுக்காகப் புதியதாக வரும் தொழில் நுட்ப வசதிகள் என்ன? அவர்களது திறமைகளை மேம்படுத்த என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்ற தேடலில் எப்போதும் இருப்பேன். அப்போது தான் அவர்களுக்கு சரியான முறையில் வழிகாட்ட முடியும். பொதுவாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பார்வையற்ற மாணவ, மாணவியர்களுக்காக ஏராளமான வசதிகள் உள்ளன. நான் பணியாற்றும் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகள், பார்வை குறைபாடுள்ள பல்கலைக்கழக நிறுவனர் அவினாசிலிங்கம் ஐயா பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். 

அவர்கள் படிப்பதற்குத் தடையாக உள்ள விஷயங்கள் என்ன?

சில பார்வையற்றவர்களின் பெற்றோர்கள் நீ வெளியே; சென்று என்ன சாதிக்கப் போகிறாய்? நீ படித்து என்ன ஆகப் போகிறது; என்று தடை போடுபவர்கள் தான் அதிகம். அதனால் பார்வையற்றவர்கள் பல தடைகளைத் தாண்டி தான் வெளியே வருகிறார்கள். அதையும் தாண்டி அவர்கள் வெளியே வந்தால் இந்தச் சமூகம் (பொது ஜனங்கள்) அவர்களை நடத்தும் விதம் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அவர்கள் கல்வி; பயில்வதற்கு வந்துவிட்டால், உடன் பயிலும் தோழிகள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்,  முதல்வர் என உடன் இருப்பவர்கள் அவனைரும் பாரபட்சமின்றி அவர்களைக் கனிவுடன் கவனித்து அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்கிறார்கள். குறைகளைத் தாண்டி, அவர்கள் ஜெயிக்கும் போது, அவர்கள் மீது கூடுதல் அக்கறை உண்டாகிறது.  

எனவே பார்வையற்றவர்களை,முதலில் பெற்றோரும் , உறவுகளும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.  நான் பல ஆண்டுக் காலமாகப் பேராசிரியராகப் பணியாற்றினாலும், 2015-ஆம் ஆண்டு முதல் பார்வையற்ற மாணவிகளுடன் பயணிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களுடைய முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் (ங.டட்ண்ப்) ஆய்விற்கு நெறியாளராகப் பொறுப்பு ஏற்று வழி நடத்தியிருக்கிறேன். அப்போது தொடங்கிய இந்தப் பயணம் இப்போது வரை ஆத்ம திருப்தியோடு செய்து கொண்டு இருக்கிறேன். 

மாணவிகள் சாதிப்பதற்குச் செய்ய வேண்டியவை என்ன?

பொதுவாக ஆசிரியர்கள் தோழமையோடு பழகுவதே பார்வையற்ற மாணவியர் விரும்பும் அணுகுமுறை. என்னிடம் படிக்கும் பார்வையற்ற ஆய்வாளர் ஒருவர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். என்னிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருக்கும் போது, அம்மா, அப்பா கிடையாது. அப்பா, அம்மா இறந்த போது இறுதிகட்டமாக அவர்கள் முகத்தைக் கூட எனக்குப் பார்க்க கொடுத்து வைக்கவில்லை என்ற அவர் சொல்லி அழுத போது, ஒரு தாயாக நானும் மனம் உடைந்து கண்கலங்கியத் தருணங்களும் உண்டு. பார்வையற்றவர்களுக்கு ஆண்டவன் கொடுத்த வரம் அவர்களுடைய அதிகத் தன்னம்பிக்கை. "நல்லாயிருக்கியாமா?' “என்று கேட்டால் உடனே, “"எனக்கு என்ன மேடம் நல்லாயிருக்கிறேன்'” என்ற பதில் உடனே வரும். நாம் ஒரு விஷயத்தைச் சொன்னால் போதும் அதை உடனே முயற்சி செய்து வெற்றியடைய முயற்சிப்பார்கள். எங்களுடைய துணைவேந்தர் பிரேமாவதி விஜயன் சிறப்புக் கல்வித்துறையில் பணியாற்றியவர்.அதனால் மாற்றுத்திறனாளிகளின் கஷ்டம், பார்வையற்ற மாணவிகளை எப்படி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை நன்கு தெரிந்தவர் என்பது கூடுதல் சிறப்பு. அவர்களைத் தட்டிக் கொடுத்து தடம் பதிக்க வழிகாட்டுவார்.  நான் பணியாற்றும் ஊரில் மட்டுமல்ல தமிழகத்தின் உள்ள பார்வை குறைபாடுள்ள பெண்கள் அவர்கள் கல்வி பெற்று மேம்பாடு அடைய என்னால் ஆன உதவிகளை எப்போதும் செய்யத் தயாராக இருக்கிறேன்.  

இவர்களில் பலர் சாதனை புரிந்து இருக்கிறார்களே?

ஆம். பார்வையற்றவர்கள் பலர் தங்கள் குறைகளையும் மீறி சாதனையாளர்களாக இருக்கிறார்கள். லூயிஸ் பிரெய்ல் பார்வையற்றவர்களுக்கான  பிரெய்லி எழுத்தினை உருவாக்கியவர். பார்வையில்லை என்றால் உலகமே இல்லை என்று நினைத்தவர்களுக்கு ஒட்டு மொத்த எழுத்துக்களால் வெளிச்சம் போட்டு காட்டியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர்.

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுதல் என்பதே இன்றைக்கு சாதனையாகக் கருதப்படுகிறது. இதற்காகவே பெற்றோர்களும் தன்னம்பிக்கை புத்தகங்களை வாங்கிக் கொடுக்கின்றனர். வெற்றி பெறுவதற்கான அறிவுரைகள் கொடுக்கப்படுகின்றன. அதிக மதிப்பெண்கள் பெறுதலே தகுதியாக உள்ளது. 

விடா முயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் உதாரணமாகச் சொல்லப்படுபவர்களில் ஹெலன் கெல்லரும் ஒருவர்.  இவருக்கு காது கேட்காது. பார்வை கிடையாது. பேச முடியாது. நாளடையில் பேச முயற்சி செய்து வெற்றியடைந்தார். விடா முயற்சியும், தன்னம்பிக்கையின் காரணமாக உலகமே அவரை திரும்பிப் பார்த்தது.

ராதாபாய் என்ற பெண் மதுரையில் பிறந்தவர் பார்வையற்றவர்களின் முதல் முனைவர் பட்டம் பெற்றவர். 32 ஆண்டுகள் கல்லூரி விரிவுரையாளராக இருந்தவர். திருச்சி மன்னார்புரத்தில், விழி இழந்த மகளிருக்கு,மறு வாழ்வு மையம் நடத்துகிறார் என்பதைப் பத்திரிகைகளில் படித்து அறிந்தேன்.  இதிலுள்ள பெண்களுக்கு தையல் பயிற்சி, கூடை பின்னுதல், கேக் தயாரித்தல்,  ஊசியில் நூல் கோர்த்தல் உள்ளிட்ட பல பயிற்சிகளை அளிக்கிறார்கள். 

மேலும் பார்வையற்றவர்கள் தனியாகப் பயணிக்கும் வகையில்  ஒரு மாதம் முதல் 6 மாதம் வரை பாதுகாப்பான நடைப்பயணத்திற்குப் பயிற்சி அளிக்கிறார்கள். கேன்டீனில் பணிபுரிகிறார்கள். போட்டித் தேர்வு தயாராகிறார்கள்.   தமிழகத்தைச் சேர்ந்த வங்கி பெண் அதிகாரி பெனோ ஷெபைன் 24 வயதிலேயே வெற்றி பெற்று அனைவரின்  கவனத்தையும்  ஈர்த்தார். 

பெனோ, பிறவியிலேயே பார்வையில்லாதவர். இவரைப் போன்று மதுரையைச் சேர்ந்த பூர்ண சுந்தரி என்ற பெண் 2018-ஆம் ஆண்டு வங்கி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர். தொடர்ந்து யு.பி.எஸ்.சி தேர்விலும் வெற்றி பெற்றார். பார்வையற்றவர்களுக்குப் பாதை காட்டினால் இன்னும் பல உயரங்களை எட்டுவார்கள் என்பதில் துளியுளவும்  சந்தேகமில்லை! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com