ஜிங்கிள்ஸ் டூ சினிமா

தமிழ் சினிமா கொஞ்சமாகப் பேசி, நிறைய பாடத் துவங்கிய காலம் தொட்டே ஏராளமான பெண் பாடகிகளை நாம் பார்த்து வருகிறோம்.
ஜிங்கிள்ஸ் டூ சினிமா


தமிழ் சினிமா கொஞ்சமாகப் பேசி, நிறைய பாடத் துவங்கிய காலம் தொட்டே ஏராளமான பெண் பாடகிகளை நாம் பார்த்து வருகிறோம். ஆனால், திரையுலகில் இசையமைப்பு என்பது ஆண்களின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. அந்தக் கோட்டையின் வாசலைத் திறந்து கொண்டு வெற்றிகரமாக உள்ளே நுழைந்தவர்கள் வெகு சிலரே. அந்த சிறிய பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் ரேவா என்கிற ரேவதி விஸ்வநாதன். கார்த்திக் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள  "முகிழ்' படம் மூலமாக ரேவா இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். பலமான கர்நாடக இசை அஸ்திவாரத்துடனும்,  200-க்கும் அதிகமான விளம்பர ஜிங்கிள்ஸ் உருவாக்கிய அனுபவத்துடனும் இசையமைப்பாளராகி இருக்கும் ரேவாவுடன் ஒரு  சந்திப்பு:

நீங்கள் இசைப் பின்னணி கொண்டவரா?

"ஆமாம்!  நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளாவின் பாலக்காடு. என் தாய் வழித் தாத்தா பாலக்காடு  ஆர். சேஷமணி பிரபல மிருதங்க வித்வான். அம்மா சாரதாவும்,  அப்பா விஸ்வநாதனும் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். நான் பிறந்து வளர்ந்த இசைச் சூழல் எனக்குள்ளேயும் இசை ஆர்வத்தைத் தூண்டியது. அதை ஊக்குவிக்கும் வகையில் என் பெற்றோர் என் சிறு வயதிலேயே நான் வயலினும், வாய்ப்பாட்டும் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்கள். 

இசையில் ஆர்வம் கொண்ட நீங்கள் ஃபேஷன் டெக்னாலஜி படிப்பைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

சிறு வயது முதலே இசை கற்றுக் கொண்டாலும், பள்ளிப் படிப்பை முடித்தவுடன் எனக்கு எஞ்சினீயரிங், ஃபேஷன் டெக்னாலஜி இரண்டிலுமே அட்மிஷன் கிடைத்தது. ஃபேஷன் டெக்னாலஜியில் படைப்பாற்றலுக்கு நிறைய வாய்ப்பு என்பதால், அதனைத் தேர்ந்தெடுத்தேன். சென்னையில் இருக்கும் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் 2019-இல், படிப்பை முடித்தேன். கோல்ட் மெடலிஸ்ட்டான நான், ஒரு கார்மன்ட் துறையில்  சிறிது காலம் பணியாற்றினேன். 

மறுபடியும் பாதை மாறி இசைத்துறைக்கு வந்தது எப்படி?

சென்னை கே. கே. நகரில் என் மாமா ராமநாதன்  "நாதபிந்து' என்ற பெயரில் ரெக்கார்டிங் ஸ்டூடியோ வைத்திருக்கிறார்.  அவர் வாயிலாக விளம்பர ஜிங்கிள்கள் உருவாக்கும் வாய்ப்புகள் வந்தன. ஃபேஷன் டிசைனராக பணியாற்றிய படியே ஓய்வு நேரத்தில் விளம்பர ஜிங்கிள்ஸ் பணிகளை செய்து வந்தேன். ஒரு கட்டத்தில், முழு நேரமாக இசைத்துறைக்கு வந்து விட்டேன். 

விளம்பர ஜிங்கிள் உருவாக்குவது மிகவும் சவாலான பணியல்லவா?

ஆமாம்! நாற்பது அல்லது அறுபது விநாடிகளுக்குள் ஒரு விஷயத்தை சுருக்கமாகவும், அதே சமயம் அனைவருக்கும் புரியும்படியாகவும் சொல்ல வேண்டும். மேலும், அது கேட்பவரது, பார்ப்பவரது கவனத்தையும் சட்டென்று ஈர்ப்பதாகவும், மனதில் பதியும்படியாகவும் இருக்கவேண்டும். தவிர, அந்த குறிப்பிட்ட பொருளின் தயாரிப்பாளர், விளம்பர இயக்குநர் ஆகியோரும் அதை ஓ.கே.செய்ய வேண்டும். அந்த சவால் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. இதுவரை நான் இருநூறுக்கும் அதிகமான ஜிங்கிள்ஸ் உருவாக்கி இருக்கிறேன். அதில் "நண்டு' பிராண்டு  லுங்கிகள், "ஒட்டோ' ஷர்ட், அமேசான் மற்றும் ஏராளமான நகைக்கடைகள், துணிக்கடை விளம்பரங்களும் இதில் அடங்கும். அவற்றில் பல விளம்பரங்கள் பரவலான கவனத்தை ஈர்த்ததுடன், பாராட்டுகளை பெற்றுத் தந்தன. நான் உருவாக்கிய  "மாயக்காரா' என்ற ஜிங்கிளைக் கேட்ட பலரும், "இது சினிமாவில் இடம் பெற்றிருக்க வேண்டிய  டியூன்' என்று சொல்லிப் பாராட்டினார்கள்.

திரைப்பட இசையமைப்பு அனுபவம், விளம்பர ஜிங்கிள்ஸ் அனுபவத்தில் இருந்து எந்த வகையில் வித்தியாசமானது?

விளம்பரங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. அந்த விளம்பரத்துக்கு எந்தமாதிரியான இசையமைப்பு தேவையோ, அதற்கேற்ப ஜிங்கிள்ஸ் உருவாக்குகிறேன். சினிமாவிலோ, ஒவ்வொரு பாடல் காட்சியிலும் உணர்வுகள் வித்தியாசமானவை. எனவே, பாடல் காட்சிகளின் தேவைக்கு ஏற்ப பாடல்களுக்கு இசையமைக்கிறேன். பின்னணி இசையைப் பொறுத்தவரையில். எந்தக் காட்சிக்கு எந்தமாதிரியான பின்னணி இசை தேவையோ அதை அளிக்கிறேன்.  அதன் மூலமாக பார்ப்பவரை, அந்தக் காட்சியில் இன்னும் அதிகமாக ஈடுபாடு கொள்ள வைக்கிறது. இன்னொரு பக்கம் தொலைக்காட்சித் தொடர்களுக்கு டைட்டில் பாடல். பின்னணி இசையமைப்பு ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகிறேன். 

முதல் தமிழ்ப்பட இசையமைப்பு அனுபவம் பற்றி?

நான்   ஏற்கெனவே  "மாங்கல்யம் தந்துநானே" என்ற மலையாளப்படத்துக்கு இசை அமைத்திருக்கிறேன். "காலேஜ் டைரிஸ்' (மராத்தி) நான் இசையமைத்த இன்னொரு படம். என்னுடன் விளம்பரப் படத்தில் பணியாற்றிய நண்பர் மூலமாக எனக்கு இயக்குநர் கார்த்திக்  சுவாமிநாதன் இயக்கிய  "முகிழ்' பட வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு வித்தியாசமான அனுபவம்தான். முதலில் மூன்று நிமிடத்துக்கு ஒரு பாடலை கம்போஸ் செய்து கொண்டு அதன் பின் படப்பிடிப்புக்குச் சென்றோம். அது ஒரு நாய்க்குட்டியை மையமாகக் கொண்ட பாடல் காட்சி. படப்பிடிப்பின்போது, அந்த பாடலின் இசையும், நாய்க்குட்டியின்  நடிப்பும் ஒத்துப் போகவில்லை. இயக்குநர், ரொம்பக் கூலாக அந்த நாய்க்குட்டியை தன் போக்கில் விட்டு ஷூட் பண்ணிக் கொண்டார். அதன் பின் அந்தக் காட்சிக்கு ஏற்ப பாடல் கம்போஸ் செய்தோம். 

பெண் இசையமைப்பாளர்கள் ரொம்ப அபூர்வமாயிற்றே?

என்னைக் கூட பலரும் ஒரு பாடகியாக அறிமுகமாகி, சினிமாவிலும், மேடையிலும் பேரும் புகழும் பெற்று, அதன் பிறகு இசையமைப்பாளராக முயற்சி செய்யுங்கள் என்றுதான் ஆலோசனை சொன்னார்கள். ஆனால், அது எனக்கு ஏற்புடையதாக இல்லை. என்னுடைய இசை ஞானத்தின் அடிப்படையில் இசையமைப்பாளராக முடிவு செய்தேன். ஜிங்கிள்ஸ் இசை ஆல்பம், சினிமா என்று என் இசைப்பயணம் தொடர்கிறது. 

போட்டிகள் நிறைந்த சினிமா உலகத்தில் உங்கள் பலம் என்ன?

எதைச் செய்தாலும், முழுமையான ஈடுபாட்டுடன் செய்வது, என்னால் முடிந்த மிகச் சிறந்ததைக் கொடுப்பது இதுதான் என் கொள்கை. அது முப்பது விநாடி விளம்பரமானாலும் சரி. மூன்று மணி நேர திரைப்படமானாலும் சரி. அதுதான் என் பலம் என்று நினைக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com