கதை சொல்லும் குறள் - 55: தேவை மழை!

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. குறிப்பாகச் சென்னையில் மக்கள் கைகளில் பிளாஸ்டிக் குடங்கள் ஏந்தி லாரியில் வரும் தண்ணீருக்காக மணிக்கணக்கில் காத்திருந்தனர்.
கதை சொல்லும் குறள் - 55: தேவை மழை!

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. குறிப்பாகச் சென்னையில் மக்கள் கைகளில் பிளாஸ்டிக் குடங்கள் ஏந்தி லாரியில் வரும் தண்ணீருக்காக மணிக்கணக்கில் காத்திருந்தனர். அரசாங்கம் சரியான நடவடிக்கைகளைச் செய்யவில்லை என்பது மக்களின் மனக்குறையாக இருந்தது.

அந்த ஆண்டு தேர்தல் வந்தது. ஆளும் கட்சி தோல்வியைத் தழுவியது. புதியதாக வந்த கொடிப்பிடித்த குமரன் கட்சி நல்லாட்சியைத் தரும் என்று மக்கள் நம்பினர்.

இரண்டாண்டுகள் ஓடி மறைந்தது. 

முதலமைச்சர் சின்னமலையின் தலைமையில் நல்லாட்சி நடந்துக் கொண்டிருந்தது. ஐம்பதே வயது நிரம்பிய சின்னமலை, காந்தியவாதி. தன்னை நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்கு நல்ல வாழ்வைத் தரவேண்டும் என்று மெனக்கெட்டு ஏழை எளியவர்களுக்குப் பல திட்டங்களை வகுத்து அவர்களின் மேன்மைக்காக உழைத்தார்.

உலக வானிலை மையம் ஒரு செய்தியை வெளியிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் பருவமழை தவறும், உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும், பஞ்சமும், பட்டினியும் மேலோங்கும் என்றது.

பல வானிலை நிபுணர்கள் கடலுக்கு அடியில் நிகழும் மாற்றங்களைக் கொண்டு இப்படிப் பஞ்ச காலத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லுவார்கள்.

முதலமைச்சர் சின்னமலை, தன் சக அமைச்சர்கள் குழுவைக் கூட்டினார். விவசாயத்துறை அமைச்சர் வாஞ்சிநாதன் பேச எழுந்தார்.

""முதலமைச்சர் சின்னமலைக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். போனவருடம் பருவமழை வருவதற்கு முன்பே நீங்க சொன்னபடி கிராமங்கள்தோறும் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விட்டோம்.

நீங்க இந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து எழுபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஆவாரம்பூ கிராமத்திற்கு வந்தீர்கள் என்றால் அங்கே மக்கள் தண்ணீருக்காகக் கஷ்டப்படாமல் இருக்கவும், அப்படித் தண்ணீர் பற்றாக்குறை வந்தால் வகுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கே நிறுவியிருப்பதை நீங்க பார்க்கலாம். அதையேதான் தமிழ்நாட்டின் மற்ற கிராமங்களிலும் செய்து கொண்டிருக்கிறோம்'' என்றார்.

குடிநீர் வாரியத்துறை அமைச்சர் பாரதிதாசன், எழுந்தார்.

""ஐயா, சென்னை மக்கள் அடிக்கடி குடிநீர் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். அதற்கு மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைக் கட்டாயமாக்குங்கள் என்றீர்கள் அதை நிறைவேற்றிவிட்டோம். அதன்படி மேற்கூரையில் விழும் மழைநீரை ஒருங்கே திரட்டி குழாய்கள் மூலம் சேமிப்புப் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகிறது''.

""சபாஷ்'', என்றார் சின்னமலை. பிறகு அவரே தொடர்ந்தார்.

""நான் ஒருமுறை செட்டிநாட்டுக்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்றேன். அங்கே செட்டியார்கள் நூறு வருடங்களுக்கு முன்னரே தங்களின் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைக் கட்டி வைத்ததைப் பார்த்தேன்.

வீட்டின் நடுப்பகுதியில் மழைநீர் தேங்கும்படி முற்றம் அமைத்துள்ளனர். எல்லா வீடுகளிலும் அது மாளிகையாய் இருந்தாலும் கூரைக்கு நாட்டு ஓடுகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாடியின் மேல் தளத்தில் விழும் மழைநீர் நேராகக் கூம்புக் குழாயின் வழியாக இரண்டாவது தளத்திற்கு வந்து அங்கிருந்து அடித்தளத்திற்கு வாய்த்தகரத்தின் வழியாக வந்து சேர்கிறது.

நாட்டு ஓடுகளுக்கு நீரை உறிஞ்சாத தன்மை உள்ளதால் ஓடுகளில் விழும் மழைநீர் முற்றத்துக்குள் வந்து கொட்டும். அப்படிக் கொட்டும் நீரை முற்றத்தின் நான்கு பக்க மூலைகளிலும் அண்டாக்களை வைத்து அதன் வாயை வெள்ளை வேட்டித் துணி கொண்டு மூடி சேமித்திருக்கின்றனர். பின்னர் சேமிக்கப்பட்ட நீரைத் தேவைப்படும்போது எடுத்து சுடவைத்து அருந்துவது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

தங்களுக்குத் தேவையான நீரை இப்படிச் சேமித்தது போக, மேற்கொண்டு மிஞ்சும் நீரை வீணடிக்காமல் தங்களது வீட்டில் ஓரத்திலேயே கால்வாய்களை அமைத்து வீட்டின் பின்புறம் கிணறு போன்ற உறையுடன் கூடிய மழைநீர் சேகரிப்புத் தொட்டியையும் கட்டி வைத்து அதனுள் விழுமாறு அமைத்துள்ளனர்.
இதைப் பார்த்த பிறகுதான் எனக்கு இந்தக் குடிநீர் சேகரிப்புத் திட்டத்தைக் கட்டாயமாக்கும் யோசனை வந்தது''.

""ஐயா கேட்பதற்கே சுவாரசியமாக இருக்கிறது. உங்களுடைய இந்த நுண்பார்வையின் மகிமையால் இன்று தமிழகம் பயன் அடைந்துள்ளது'' என்றார் பாரதிதாசன்.

ஞாயிற்றுக்கிழமை காலை ஐந்து மணிக்கே சின்னமலை, தன்னுடைய விவசாயத்துறை அமைச்சருடன் ஆவாரம்பூ கிராமத்தைச் சுற்றிப் பார்த்து அங்கே பஞ்ச காலத்திலும், மக்கள் வயிறு காயாமல் வாழ என்னென்ன நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன என்பதை நேரில் காணச் சென்று கொண்டிருக்கிறார்.

பந்தா எதுவும் இல்லாமல் ஜில்லா கலெக்டர் ஊர்தியும், ஒரே ஒரு போலீஸ் ஜீப்பும் முன் செல்லச் சின்னமலை இயற்கைக் காட்சிகளை ரசித்த வண்ணம் பயணித்துக் கொண்டிருந்தார்.

ஆவாரம்பூ கிராமத்தை அடைந்தனர்.

கிராமத்து தாசில்தார் பழனி, சின்னமலைக்கும், வாஞ்சிநாதனுக்கும், கலெக்டருக்கும் மாலை மரியாதைகளைச் செய்தார்.
அரசாங்க கெஸ்ட் ஹவுசில் சிறிது நேரம் முதலமைச்சர் இளைப்பாறினார். அது கோடைக்காலம் என்பதினால் இளநீரும், இளம் நுங்குகளும் பரிமாறப்பட்டன.
கிராமத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டனர்.
ஒவ்வொரு வீடும் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தது. வீடுகளின் பின்புறத்தில் மரத்தால் ஆன குதிர்கள் உருவாக்கப்பட்டிருந்தன. தங்களுடைய உபயோகத்திற்கும், வியாபாரத்திற்கும் கொடுத்தது போக அந்தக் குதிர்களில் தானியம் சேமிக்கப்பட்டிருந்தது.
""ஐயா'' என்றார் வாஞ்சிநாதன்.
""சொல்லுப்பா'' என்றார் சின்னமலை. 

""தானியங்களைச் சேமிக்க இந்த மரக்குதிர்களை அரசாங்கம் இவர்களுக்கு செய்து கொடுத்திருக்கிறது. 

பஞ்சகாலத்தில் இதை உபயோகப்படுத்தலாம். விலைவாசி ஏற்றத்தால் மக்கள் அதிலும் விவசாயிகள் வயிறு காயாமல் இருக்கவே இந்த ஏற்பாடு''.

""இந்தப் பக்கம் இருக்கும் சிவன் கோயிலில் பெரிய குளம் ஒன்று இருந்தது. அதில்தான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் குடிக்கும் நீரை எடுத்துச் செல்வார்களாம். ஆனால் சரியாகப் பராமரிப்பு இல்லாமல் குளம் வறண்டுவிட்டது.

இப்பொழுது நீர் நிறைந்து காணப்படுகிறதே'' என்றார் சின்னமலை.

""ஐயா, இந்தக் குளத்தையும், குறுகிப்போன சங்கு ஏரியையும், நம் அரசாங்கம் சிறிது பொருள் உதவி செய்ய, இந்தக் கிராமத்து மக்களே தூர் வாரி ஆழப்படுத்தினார்கள். 

சென்ற ஆண்டு நல்ல பருவமழை பெய்ததினால் அதில் இந்தக் குளமும், சங்கு ஏரியும் நிறைந்துவிட்டது. இதைப் பார்த்து மகிழ்ந்த விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக் கிணறுகளையும் தூர் வாரினார்கள்.

இந்த நீர்நிலைகளில் எல்லாம் மீன்களை வளர்க்க அரசாங்கத்திலிருந்து மீன் குஞ்சுகளை வழங்கி இருக்கிறோம். கோழிப் பண்ணைகளில் கோழிகளை நோய்த் தொற்று இல்லாமல் வளர்க்கும் முறை, ஆடு, மாடுகளைப் பெருக்கும் வழிகள் என்று கிராமத்து மக்களுக்கு வகுப்புகள் எடுக்கிறோம்.

பஞ்ச காலத்தில் என்ன மாதிரியான காய்கறிகளை வளர்க்கலாம், எந்தெந்தப் பயிர்கள் குறைவான தண்ணீரில் அதிக மகசூலைத் தரும் என்பதையும் சொல்லிக் கொடுத்திருக்கிறோம்.

இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பஞ்ச காலத்தில் பாங்குகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாவிட்டால் அதையும் நீக்கிவிட உத்தரவு கொடுத்திருக்கிறேன்''.

தன்னுடைய மேற்பார்வையின் கீழ் விவசாயத்துறை அமைச்சர் வாஞ்சிநாதன் செய்துள்ள முன்னேற்பாடுகளை முதலமைச்சர் சின்னமலை பாராட்ட, அவரோ, ""ஐயா உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவதைப்போல உங்கள் நல்லாட்சியினாலும், உங்கள் கீழ் இருக்கும் அமைச்சர்களுக்கு முழு சுதந்திரத்தோடு செயலாற்ற உரிமை கொடுத்ததினால்தான் எங்களால் குடிமக்களுக்கு நன்மைகளை செய்ய முடிகிறது'' என்றார்.

""வாழ்க சின்னமலை ஐயா'' என்று நெஞ்சு நிறைய ஆவாரம்பூ மக்கள் கோஷமிட்டனர்.

வானோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன்
கோனோக்கி வாழும் குடி.

(குறள்  எண்: 542)

பொருள் :

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com