சின்னத்திரை மின்னல்கள்!
By -ஸ்ரீ | Published On : 01st September 2021 06:00 AM | Last Updated : 31st August 2021 10:21 PM | அ+அ அ- |

தமிழில் அறிமுகம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "நினைத்தாலே இனிக்கும்' என்ற புதிய தொடர் ஆரம்பமாகிவுள்ளது. இந்தத் தொடரில் "ஆயுத எழுத்து' தொடரில் நடித்து பிரபலமான ஆனந்த் செல்வன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நாயகி பொம்மி கதாபாத்திரத்தில், நடிகை ஸ்வாதி, தமிழ் சின்னத்திரையில் முதன் முதலாக அறிமுகமாகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த அவர், கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் முதன்முறையாக அறிமுகமாவது குறித்து அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்: அதில், ""மிடில் கிளாஸ் பெண் ஒருவர் தொழில் முனைவோராக ஆவதற்கு படும் கஷ்டங்களும், அவளது வாழ்வியலும் தான் " நினைத்தாலே இனிக்கும்' தொடரின் கதைகளம். இத்தொடர் மூலம் தமிழில் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. ரசிகர்கள் இந்த தொடருக்கு நிச்சயம் நல்ல வரவேற்பை கொடுப்பார்கள் என நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இல்லத்தரசிகளின்ஃபேவரிட்
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடர்களில் ஒன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்'. இந்தத் தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வருகிறார் சுஜிதா. 1980 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் இவர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.
தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற தொடர் தான் சுஜிதாவுக்கு முதல் சீரியல். தமிழை தவிர தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சுஜிதா சினிமாவில் நாயகியாக நடித்ததில்லை. வாய்ப்புகள் வந்தும் சின்னத்திரைக்குள் நுழைந்ததால் சினிமாவில் நடிக்கவில்லை எனக்கூறும் சுஜிதா, கிளாமராக நடிக்க தனக்கு விருப்பமும் இல்லை என்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சுஜிதாவுக்கு மிகப் பெரிய ஹிட் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். 500 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் இல்லத்தரசிகளின் ஃபேவரிட். இந்தத் தொடரில் மூத்த மருமகளாக தனம் அண்ணியாக நடித்துரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார் சுஜிதா.
இந்தத் தொடரில் நடித்தற்காக விஜய் டிவி விருதும்வாங்கியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவானவர். யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தன்னை பற்றி ரசிகர்களுக்கு தெரியாத பல தகவல்களை பகிர்ந்துவருகிறார். இன்ஸ்டாகிராமில் இவரை அதிகம் பேர் பின் தொடர்கின்றனர்.