சேவையே லட்சியம்!
By - பிஸ்மி பரிணாமன் | Published On : 01st September 2021 06:00 AM | Last Updated : 01st September 2021 06:00 AM | அ+அ அ- |

கரோனா காலம் .. பொதுமுடக்கம்.. கடைகள் மூடப்பட்டிருந்தன.. மக்கள் வெளியே போய் ஆன்லைனில் தேவையான சான்றிதழ்களை பதிவு செய்யவோ பதிவிறக்கம் செய்யவோ முடியாத நேரம். அதனால், என் வீட்டில் உள்ள பிள்ளைகள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், பிரிண்டர், இணையதள வசதியைப் பயன்படுத்தி மக்களுக்கு தேவையான பிறப்பு, இறப்பு, ஜாதி, வருமான, சொத்து சான்றிதழ்களை எடுத்துக் கொடுத்து வந்தேன்.
அதிலும் கரோனா மரணங்கள் அதிகம் நிகழ்ந்த சமயம் அது. கரோனா மரணம் நிகழ்ந்த வீட்டின் நிலைமையை அறிந்து மரண செய்தியை உறுதிபடுத்திக் கொண்டு சான்றிதழை நானே வழங்க ஆரம்பித்தேன். பொதுவாக, மரணம் நிகழ்ந்த 20 நாட்களுக்குள் சான்றிதழை இலவசமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். காலதாமதம் ஆனால், ரூ. 200 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆனால், துக்கம்... மற்றும் பல சூழ்நிலைகள் காரணமாக பலரும் 20 நாட்களுக்கு பிறகுதான் சான்றிதழ் வேண்டும் என்று மனு கொடுப்பார்கள். அதனால், காலதாமதத்தைத் தவிர்க்க மரணத்தை உறுதி செய்து சான்றிதழை நானே நேரில் சென்று வழங்குவேன். அல்லது தெரிந்தவர்களிடத்தில் கொண்டு போய் கொடுக்கச் சொல்வேன்.
இப்போது புதிய அரசு சான்றிதழுக்கு காலதாமதக் கட்டணம் இல்லை என்று அறிவித்துவிட்டது. அதுபோல சில சான்றிதழ்களுக்கு எனது பரிந்துரைகளுக்கு, வருவாய்துறை அதிகாரிகளின் ஒப்புதல் கையொப்பம் தேவைப்படும். இந்நிலையில், எனது கிராம மக்கள் தாலுகா அலுவலகத்திற்குச் சென்றால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தேவையான சான்றிதழ்கள் உடனே கிடைத்து விடும்.
அதுபோன்று கிராம மக்களுக்கு, அரசு வழங்கும் உதவித்தொகை எப்படிப் பெறுவது என்று தெரியாது. அவர்களது சொந்த நிலத்திற்கு பட்டா எப்படி வாங்குவது என்பது எல்லாம் தெரியாது. அதையெல்லாம் நானே அவர்களுக்கு எடுத்து சொல்லி, படிவங்களை பூர்த்தி செய்து தாலுகா அலுவலகத்திற்கு அவர்களை அனுப்பாமல் நானே சென்று தாசில்தார், துணை தாசில்தாரிடம் பேசி பட்டா மற்றும் உதவித்தொகை பெற்று தருகிறேன்'' என்று கூறும் கவிதா, தேனி மாவட்டம் கோகிலாபுரம் கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:
""தேனி மாவட்டம் உத்தமபாளையம்தான் எனது சொந்த ஊர். வாழ்க்கையில் நேர்மையாக இருக்க வேண்டும் என்கிற விதையை, நூலகராக இருந்த அப்பாவும், நான் வாசித்த நூல்களும் விதைத்தன. எனது 40 -ஆவது வயதில்தான் கிராம நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
தீவிர வாசிப்பாளியாக இருந்த நான் நிறைய கவிதைகளும் எழுதியிருக்கிறேன். பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு பேசியும் இருக்கிறேன்.
இது தவிர, "ஃபாதர்ஸ்டே', "ஸ்டேட்டஸ்', "செலக்ட்' மற்றும் ‘சில்லலென்று ஒரு தேர்தல்' போன்ற 4 குறும்படங்களையும் தயாரித்து இயக்கிறேன்.
என்னால் முடிந்த வரை மக்களுக்கு நேர்மையாகப் பணியாற்ற வேண்டும் என்பதே எனது லட்சியம். அதை இன்று வரை கடைபிடித்தும் வருகிறேன். இதற்காக, சகாயம் ஐ.ஏ.எஸ். எனக்கு "நேர்மை நாயகி' பட்டத்தை கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறார்.
மணல் கடத்தலை தடுத்தல், மரம் வெட்டுவதை தடுத்தல், ஆற்றுத் தண்ணீரை திருடுபவர்களை தடுத்தல் மேலும் இளைஞர் கள் மத்தியில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பசுமையான கோகிலாபுரம் உருவாக மரங்கள் நடுதல் போன்றவையும் செய்து வருகிறேன்.
இதே எண்ணம் கொண்ட அனைத்துத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் சிலர் இணைந்துள்ள வாட்ஸ் அப் குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறேன். எங்களது எண்ணங்களை அவ்வப்போது பரிமாறிக் கொள்வோம். எனது மேலதிகாரிகள் சக ஊழியர்கள் நல்ல ஒத்துழைப்பு நல்குகிறார்கள். இதை விட வாழ்க்கையில் வேற என்ன வேண்டும்'' என்கிறார் கவிதா.