

ஆங்கிலம் எழுதுவது, பேசுவது என்பது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. வேலை வாய்ப்பிற்கான பல தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைய தலை முறைக்கான பங்கு கிடைக்காமல் போக ஆங்கில அறிவு போதுமான அளவுக்கு இல்லாததும் ஒரு காரணம். அதிலும் கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கணக்கு போலவே கசக்கும். ஆங்கிலம் பேச, எழுத கற்றுத்தர பல நிறுவனங்கள் செயல்படுகின்றன.
பத்தோடு பதினொன்றாக இல்லாமல் அரசு பள்ளி மாணவர்களுக்காகவும், வேலைதேடும் இளைய சமுதாயத்திற்காகவும் ஏணியாகச் செயல்படுகிறது "கைசென்' ஆங்கிலப் பயிற்சி நிலையம்.
முதலில் ராஜபாளையத்தில் துவங்கப்பட்ட "கைசென்' ஆங்கிலப் பயிற்சி நிலையம் பிறகு சென்னையில் துவங்கப்பட்டது என்பதே ‘கைசென்' செயல்பாடுகளுக்கு கிடைத்திருக்கும் நற்சான்றிதழ்.
ராஜபாளையம், சென்னையில் என இரண்டு பயிற்சி மையங்களை நடத்திவரும் மலர்விழி தனது பயணம் பற்றி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""தமிழகத்தில் தொழில்ரீதியாக ராஜபாளையத்திற்கு ஓர் இடம் இருந்தாலும், அது வளர்ச்சி பெறாத நகரம் என்றுதான் சொல்ல வேண்டும். அங்குதான் நான் பிறந்தேன். படித்தேன். அரசு பள்ளியில் ஆங்கில வழியில் படித்ததால் கொஞ்சம் ஆங்கில அறிவு வந்து சேர்ந்தது. ஆனால் மாணவிகளுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொள்வது கிடையாது. அதனால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டும் என்ற ஆசை ஆசையாகவே இருந்துவிட்டது. தவிர ராஜபாளையத்தில் ஆங்கிலம் பேச பயிற்றுவிக்கும் பயிற்சி நிலையங்கள் இல்லை. அதனால் எனது லட்சியம் லட்சியமாகவே இருந்துவிட்டது.
பிளஸ் 2 முடித்தவுடன் திருமணம் ஆனது. ஆங்கிலத்தின் மேல் இருந்த பிடிப்பால் தொலைத்தூர கல்வி வழியாக ஆங்கில இலக்கியம் படித்தேன். தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். ஆங்கிலம் பேச பாடம் சொல்லிக் கொடுப்பது சிறந்த வழி என்பதால் பள்ளியில் வேலை செய்தேன். குழந்தை பிறந்ததினால் அந்த வேலையை விட்டுவிட்டேன். கொஞ்சம் இடைவெளிவிட்டு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை பள்ளி மாணவர்களுக்கு வீட்டில் எடுக்க ஆரம்பித்தேன். பள்ளி மாணவர்கள் போய் கல்லூரி மாணவர்கள் எனது வகுப்புகளுக்கு வந்தார்கள். பிறகு நான் வகுப்பு எடுப்பதைப் படம் பிடித்து விடியோக்களை யூடியூபில் பதிவு செய்தேன். அது பிரபலமாகி தற்போது பல ஆயிரம் பேர்கள் பார்க்கிறார்கள். எனது விடியோக்களைப் பார்த்த பலரும் என்னைத் தொடர்பு கொண்டனர். நேரில் வகுப்புகளில் சேர விருப்பம் தெரிவித்தனர்.
விருப்பம் தெரிவித்த பலரும் வேலையில் இருந்ததாலும், ராஜபாளையத்தில் தங்கிப் படிக்க வசதிகள் இல்லாததாலும் பலராலும் ராஜபாளையம் வர முடியவில்லை. இப்படி விருப்பம் தெரிவித்தவர்கள் சென்னையில் அதிகம் பேர்கள் இருந்ததால், சென்னையில் பயிற்சி நிலையத்தைத் தொடங்க முடிவு செய்தேன். 2019 வாக்கில் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் பயிற்சி நிலையத்தைத் தொடங்கினேன். பள்ளி மாணவர்கள், வேலை தேடுபவர்கள், வேலையில் இருப்பவர்கள் என்று மூன்று பிரிவினர்களுக்காக வகுப்புகள் நடக்கின்றன.
கரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்தன. வகுப்புகளில் சேர்ப்பவர்கள் அதிகரித்ததால் வகுப்புகளைக் கையாள திறமையுள்ளவர்களை பயிற்சியாளர்களாக நியமித்தேன். வகுப்புகளில் எனது பயிற்சி விடியோக்களைக் காண்பித்து வகுப்பு எடுப்பார்கள். எனது திறமையை விரிவாக்கம் செய்ய சென்னையில் பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் ஆங்கில பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தேர்ச்சி பெற்றுள்ளேன்.
ஸ்போக்கன் இங்கலீஷில் அமெரிக்க ஆங்கில உச்சரிப்பில் ஆங்கிலம் பேச சொல்லித் தருகிறோம். பள்ளிக் குழந்தைகள் கையெழுத்து மோசமாக இருக்கும். அழகாக எழுதவைக்க தனி வகுப்புகள் உண்டு. வகுப்புகள் ஒரு மாதம், மூன்று மாதம் ஒரு வருடம் என்று தேவைக்கும் திறமைக்கும் ஏற்றதுபோல் கால அளவை வைத்துள்ளோம்.
மாலை நேர வகுப்புகளும் உண்டு. கரோனா தாக்கம் குறைந்திருப்பதால் நேரடி வகுப்புகள் தொடங்கிவிட்டன. சென்னை வகுப்புகளை நான் நடத்துகிறேன். இதுதவிர, சரியான தமிழ் உச்சரிப்பில் சரளமாக செய்தி வாசிக்கவும் பயிற்சி கொடுக்கிறோம்'' என்கிறார் மலர்விழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.