உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 4: விழிப்புணர்வு!

"உலகில் சாதனை படைப்பதற்கும் வெற்றியாளராகப் பிரகாசிப்பதற்கும் எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன.
உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 4: விழிப்புணர்வு!
Updated on
3 min read

"உலகில் சாதனை படைப்பதற்கும் வெற்றியாளராகப் பிரகாசிப்பதற்கும் எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. நடைமுறைகள் சொல்லித் தரப்பட்டிருக்கின்றன என்றாலும், ஒருவருக்குள் இருக்கும் சாதிப்பதற்கான துடிப்பு அடிப்படையானது. சில குணங்கள் இயல்புகள் மனநிலை அத்தியாவசியமானவை. அவற்றை அடையாளம் காண்பதும் வளர்த்துக் கொள்வதும் வெற்றிக்கான அடித்தளமாக அமையக்கூடும். அதனை நூல்களில் படிப்பது ஒரு விதம்.படிப்பதை விட வாழ்க்கையில் அனுபவத்தில் தெரிந்து கொண்டு வெற்றி பெற்றவர்களின் அனுபவங்கள் வழியே கற்றுக் கொள்வது மற்றொரு விதம். 

லியோ டால்ஸ்டாயின் சிறுவர்களுக்கான கதை ஒன்று உண்டு. இளைஞர்கள் சிலர் ஒரு படகில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். கடலில் வெகு தூரம் சென்று விட்டார்கள். கடல் கொந்தளிப்பாக இருந்தது. புயல் அடிக்கத் தொடங்கியது. இளைஞர்கள் தங்கள் கையிலிருந்த துடுப்பைப் போட்டுவிட்டு ஆளுக்கொரு புறம் அங்கலாய்க்கவும் பதறி அலறவும் பிரார்த்தனை செய்யவும் என்று அலைபாய்ந்தார்கள். அதே புயலில் கடலில் மாட்டிக் கொண்டிருந்த முதியவர் கண்களில் இந்தப்படகுபட்டது. இளைஞர்களைப் பார்த்து அவர்களுக்கு உதவும் பொருட்டாகக் கூவினார். "இளைஞர்களே, கவனமாக அலைகளின் போக்குக்கு ஏற்ப துடுப்பைக் கைவிடாமல் செலுத்துங்கள்" இளைஞர்களும் ஒரே சிந்தையோடு துடுப்பு வலிக்க ஆரம்பித்தார்கள். ஒருவழியாக கரை வந்து சேர்ந்தார்கள். முதியவர் சொன்னார், " படகுக்காரனின் கவனம் துடுப்பிலும் அலையிலும் இருக்க வேண்டும். விழிப்புணர்வோடு இல்லாதவன் கடலில் புயலை எதிர்கொள்ள முடியுமா?' என்று அவர்களை ஆசுவாசப் படுத்தினார். 

இளைஞர்கள் முதியவருக்கு தங்கள் உயிரைக் காத்ததற்காக நன்றி சொல்லி இல்லம் திரும்புகிறார்கள். உலக வாழ்க்கை என்பதும் கடலில் பயணம் செய்வது போலத் தான். இன்பமும் இடையூறுகளும் நிறைந்ததாகவே இருக்கும். நாம் விழிப்புணர்வுடன் இருந்துவிட்டால் எல்லாமும் சுலபமாகிவிடும்.    


எந்த ஒரு நிலையிலும் நாம் என்னவாக இருக்கிறோம், எப்படி இருக்க வேண்டும், நம்முடைய இலக்கு என்ன என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும். விழிப்புணர்வு நம்முடைய கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளும். நான் பெண்ணாகப் பிறந்து விட்டேன் என்னால் என்ன செய்ய முடியும் என்ற எண்ணம் சிலரிடம் இருக்கும். எதையும் சாதிக்கவோ கடினமான காரியங்களைச் செய்வதோ எனக்கு சாத்தியமில்லை. புதிதாகப் படிப்பதோ கற்றுக்கொள்வதோ இந்த வயதுக்கு மேல் எப்படி முடியும்? என்று வெளிப்படையாக சொல்லிக்கொண்டிருப்பார்கள். இத்தகைய இறுகிய மனநிலையை சரி செய்ய முடியு மா? 

என்னாலும் முடியும். முயன்றால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற ஊக்கம் கொண்ட மனநிலைக்கு மாறுவது சாத்தியமா? ஊக்கம் கொண்ட மனம் வெற்றியை நோக்கி முன்னேறுவதற்கு உழைக்கத் தூண்டும்.   

இன்னும் என்னால் முடியும். என்னுடைய செயல்பாடு நேற்றைக் காட்டிலும் இன்று இன்னும் நேர்த்தியாக இருக்க முயற்சி செய்வேன் என்று கருத வேண்டும். சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு துளி அளவுக்கு நம்மை உயர்த்திக் கொள்வதற்கான முயற்சியில் கவனத்துடன் இருந்தால் போதும். ஒரு நாள் நூறு சதம் நேர்த்தி வசப்பட்டுவிடும். அத்தகைய நம்பிக்கையை எப்படி ஏற்படுத்திக் கொள்வது? 

"நீங்கள் பெருங்கடலில் சிறு துளி அல்ல சிறுதுளியில் முழுகடல்" என்றொரு ரூமி கவிதை உண்டு. பெண்கள், தான் தேங்கி நிற்கும் குட்டை அல்ல பெருங்கடல் என்பதை உணர்ந்துகொள்ளும் வேளையில் அவர்களின் உலகம் மட்டுமல்ல ஆற்றலும் கடல் போல விரிவடைகிறது. 

தன்னை, தன் ஆற்றலை உணர்வதற்கு முதலில் ஆசை இருக்க வேண்டும். நான் எப்படி இந்தச் சமூகத்தில் அடையாளப்படுத்தப்பட வேண்டும்? இந்த சிந்தனை இல்லாத பெண்கள் யாரும் இருக்க முடியாது. தான் ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என்று கருதும் பெண்கள் அதற்கான முயற்சியைத் தொடங்குவார்கள். முயற்சி தொடங்கும் பொழுதே தடைகள் வந்தே தீரும். ஒரு காரியம் வெற்றி என்ற இலக்கை அடைவதற்கு முன் பல இடையூறுகளைச் சந்தித்தாக வேண்டும். இடையூறுகள் வந்த உடன் நம்மால் இது ஆகாது என்று முயற்சியைக் கைவிடுவதும், சாத்தியமில்லை என்று நம்பிக்கையை விட்டுவிடுவதும் இறுகிய மனநிலைக்கான அறிகுறிகள். 

இந்த நேரத்தில் நமக்குத் தேவை விழிப்புணர்வு. தடைகள் தாண்டிவிடக் கூடியவை. கொஞ்சம் முயன்று பார்ப்போம். நினைத்ததைச் செய்ய முடிகிறதோ சாதிக்க முடிகிறதோ இல்லையோ நாம் முயற்சியைக் கைவிட்ட தோல்வி மனப்பான்மை கொண்டவராக அடையாளம் பெற்றுவிடக் கூடாது. முயற்சியின் பலன் என்னவாக இருந்தாலும் செயல்பட்டுக் கொண்டே இருப்பேன் என்ற ஒருமித்த சிந்தையோடு உழைக்க வேண்டும். ஒருநாள் அதுவே நம் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுவிடக் கூடும்.

பொதுவாகவே பெண்கள் இயல்பிலேயே விழிப்புணர்வு அதிகம் உள்ளவர்கள். எந்த நிலையிலும் தன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை சூழ்நிலையை அவளுடைய மனம் உணர்ந்து கொள்ளும். இது இயற்கை பெண்ணுக்கு வழங்கியிருக்கும் கொடை. நம் தேவை என்ன? செய்ய வேண்டியது யாது? அதை எப்படிச் செய்யப் போகிறோம் என்பதில் நம்முடைய விழிப்புணர்வு இருந்துவிட்டால் எல்லாப் பெண்களும் சாதனையாளராக உயர்வதற்கான தகுதி கொண்டவர்கள் என்பது புரியும். 

குடும்பத்தில் தேவைகள் என்ன என்பதில் ஆண்கள் கவனம் செலுத்தினால் பெண்கள் அதோடு நின்றுவிடாமல் திடீரென ஏதும் அவசர அவசியத் தேவை ஏற்பட்டால் என்ன செய்வது என்பதற்கும் சேர்த்துத் தயார் நிலையில் இருப்பார்கள். வெற்றிக்கான சூத்திரங்களுள் மிக முக்கியமானது இந்த மனப்பான்மை. நம்முடைய வளர்ச்சிக்கு நம்மிடம் இருக்கும் இந்த குணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டால் நன்மை அடையலாம். 

கோவை மாவட்டத்தின் வடிவேலாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கமலாத்தாள் என்ற மூதாட்டி ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்று தமிழகம் மட்டுமல்லாது நாடெங்கும் புகழ் பெற்றவர்.  அவர் பேசுவதை இணையத்தில் காணும் பொழுது நமக்கு விழிப்புணர்வு என்பதற்கான பொருள் புலப்பட்டுவிடும். பல இளைஞர்கள் கூடி பாட்டியின் இட்லியைச் சாப்பிட்டுக் கொண்டே அவரிடம் உரையாடுகிறார்கள். வாய் நிறைய சிரிப்பு முகம் நிறைய மலர்ச்சி, பாட்டியும் இளைஞர்களுக்குச் சமமாக கேலியும் கிண்டலுமாய் நடமாடுகிறார். ஒருபுறம், அவரது வேலை தொய்வின்றி நடந்து கொண்டே இருக்கிறது. வடை சுட்டுக்கொண்டும் இட்லி தயாரித்துக் கொண்டும் இருக்கிறார். 

ஒரு வெளியூர் இளைஞர், "விலைவாசி ஏறுகிறதே இட்லி விலை ஏறாமல் இருக்க முடியுமா? எப்படி உங்களுக்குக் கட்டுப்படியாகும்?' என்கிறார். பாட்டியின் பதில் என்னை திகைப்பில் ஆழ்த்தியது. "லாபம் இல்லாமல் ஒரு வேலையைச் செய்வேனா? எனக்குத் தேவையான லாபம் கிடைக்கிறது. என் ஊர் மக்களுக்கு என்னாலான பணியாகவும் இருக்கிறது. தொடர்ந்து இதே விலையில் என்னால் இட்லி விற்க முடியும். உழைக்க முடிந்த நாள் வரை இப்படித் தான் வியாபாரம் செய்து கொண்டிருப்பேன்" இந்த பதிலில் ஒரு தெளிவும் நோக்கத்தில் உறுதியும் இருப்பதைத் தெரிந்து கொள்ள அடிப்படைப் புரிதலே போதுமானது. 

மேலும் நுட்பமாகக் கவனித்தால் பாட்டியின் விழிப்புணர்வு நமக்குப் புலப்படும். நான் ஒன்றைச் செய்கிறேன். அதிலே விலைவாசி போல இடையூறுகள் வரலாம். ஆனாலும் என்னுடைய நோக்கத்தில் உறுதியாக இருக்கிறேன். அதை நோக்கிய என் செயல்பாட்டை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இருக்கும் வரை எனக்கான அடையாளத்தை விட்டுவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பேன். நான் யார் என் தேவை என்ன என்பதில் உறுதியோடு இருக்கிறேன் குழப்பத்திற்கோ மாற்று சிந்தனைக்கோ அவசியமில்லை என்ற தெளிவான பார்வை இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். 

முதுமை, விலைவாசி என்று பல காரணங்கள் இட்லி விற்பதை நிறுத்திவிட ஏற்பட்டாலும் இந்தச் செயல் ஒன்றே என்னுடைய லட்சியம். அதனால் வரும் பாதிப்புகள் எனக்குப் பெரிதல்ல என்று நிற்பது தான் அவரது வெற்றி. வெற்றி என்பது இலக்கை அடைவது மட்டுமல்ல. இலக்கை அடைவதற்கான பயணமும் கூட. இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டால் நாமும் வெற்றிக்குத் தகுதியானவர்களே.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com