

குடும்ப சிக்கல்கள்...
இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை குறித்த சந்தேகங்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குபவர்களில் சுதா மூர்த்தி முக்கியமானவர். குழந்தை வளர்ப்பில் பெற்றோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் சுதா சொல்வது என்ன?
பெற்றோர் - குழந்தைகள் உறவுமுறையும் பண்பட்டதாக இருக்க வேண்டும். மதிக்கப்பட வேண்டும். பெற்றோர், குழந்தைகளுக்கான "வெளி'யை (space) வழங்கி அதில் தலையிடாமல் இருக்க வேண்டும். அதுபோல் பெற்றோர்களுக்கான "வெளி'யில் குழந்தைகளின் தலையீடு இருக்கக் கூடாது. தலைமுறை இடைவெளி காரணமாக ஏற்படும் சிக்கல்கள், விரிசல்களைத் தவிர்த்துக் கொண்டால் பெற்றோர் - குழந்தைகள் இடையில் உறவு சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். குழந்தைகளுக்கான "வெளி'யைத் தரும் போது, குழந்தைகள் எடுத்த முடிவினை, அவர்களது விருப்பு வெறுப்புகளை அவர்களாகவே மறுபரிசீலனை செய்ய சந்தர்ப்பம் ஏற்படும். சில குழந்தைகளுக்கு சில உணவுவகைகள் பிடிக்காது. அதனால் சாப்பிடாமல் ஒதுக்கும். அதை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தாதீர்கள். அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். குழந்தைகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும்.
முன்மாதிரிகளை ஏற்படுத்துதல்
உங்கள் அணுகுமுறைகளை, பழக்க வழக்கங்களை குழந்தைகள் மீது திணிக்கதீர்கள். குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக பெற்றோர்களின் அணுகுமுறை, பழக்க வழக்கங்கள் அமையட்டும். உங்களது நல்ல பழக்கங்களை பார்த்துப் பார்த்து குழந்தைகள் தானே ஏற்றுக் கொள்வார்கள். அதனால் குழந்தைகள் எந்த பழக்கத்தை பின்பற்றக் கூடாது என்று பெற்றோர் நினைக்கிறார்களோ அதை பெற்றோர் முதலில் கடைப் பிடிக்க வேண்டும்.
இரவு தொடங்கும் போது குழந்தைகள் பாடப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்தால், குழந்தைகளின் முன்பாக, பெற்றோர்களும் ஏதாவது புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோர்களே வழிகாட்டும் ஹீரோக்கள் ஆகலாம். , குழந்தைகள் எளிய முறையில் நன்னடத்தையுடன் வளர எளிமையான வாழ்க்கை மட்டுமே உதவும். உணவு, உடை, வீடு இவற்றில் பெற்றோர் எளிமையாக இருந்தால், எளிமையாக இருத்தல் குழந்தைகளைத் தானே தொற்றிக் கொள்ளும்.
பகிர்தலைப் பரப்புதல்
பிறந்தநாளை படோடோபமாகக் கொண்டாட வேண்டாம். கொண்டாட்டத்திற்காக செலவு செய்ய நினைப்பதில் பாதியை செலவு செய்து விட்டு மீதத் தொகையை பொருளாதார ரீதியாக சிரமப்படுபவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடப்படும் குழந்தையைக் கொண்டே வழங்கச் செய்யுங்கள். இந்தப் பழக்கத்தால் பிறருக்குப் பகிரும் பழக்கம் ஏற்படும். பிறர் சிரமங்களைப் புரியும் பக்குவமும் ஏற்படும்.
குழந்தைகளை சதா குறிவைக்காதீர்கள்.
ஓய்வு நேரத்தை குழந்தைகளை விருப்பப்படி செலவு செய்யட்டும். குழந்தைகளை வீட்டுக்குள் விளையாடும் போது, வாசிக்கும் போது பெற்றோர் டிவி பார்க்க வேண்டாம். அலைபேசியை பார்க்க வேண்டாம். அலைபேசியில் பிறருடன் பேச வேண்டாம். குழந்தைகளிடம் உதவி ஏதும் தேவையா... சந்தேகம் எதுவும் உண்டா என்று கேளுங்கள். குழந்தைகளுக்கு பெற்றோர்களின் கனிவான வழிகாட்டுதல்தான் தேவை. பெற்றோர்களின் 'போர'டிக்கும் சொற்பொழிவல்ல.
முடிவுகளைக் குழந்தைகள் எடுக்கட்டும்.
சில சம்பவங்களைக் குழந்தைகளிடம் சொல்லி, அதற்குத் தீர்வு கண்டுபிடிக்க சொல்லச் சொல்லுங்கள். அதனால் வாழ்க்கையில் சில கட்டங்களில் சோதனை வரும் போது குழந்தைகள் தடுமாறாது. சோர்ந்து போகாது. தீர்வு எடுப்பதில் குழந்தைகளுக்கு உதவலாம். சுதாவின் நெறிகாட்டுதல்கள் கடினமானவை அல்ல... அனைத்து பெற்றோராலும் கடைப்பிடிக்க எளிதாகவே அமைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.