

எனது பகுதியில் உள்ள மழலையர் பள்ளியை (அங்கன்வாடி) சீரமைக்க எனது நகைகளை ஒன்றரை லட்சத்திற்கு அடகு வைத்தேன்' என்கிறார் சுமதி. எதற்காக சுமதி மழலையர் பள்ளியைச் சீரமைக்கச் சொந்த நகையை அடகு வைக்க வேண்டும்?
ஆசிரியை சுமதி விளக்குகிறார்:
""மழலையர் பள்ளி செயல்பட்ட கட்டடம் புறம்போக்கு நிலத்தில் அமைந்திருந்தது. வேலி இல்லை. பாம்புகள் தொல்லை இருந்தது. கட்டடப் பராமரிப்பும் இல்லை. இப்படி மழலையர் பள்ளி இருந்தால், குழந்தைகளை யார் அனுப்பி வைப்பார்கள். குழந்தைகளைப் பள்ளிக்கு வரச் செய்ய பள்ளியின் தோற்றத்தை பொலிவாக்க வேண்டும். பள்ளியின் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர் குழந்தைகளை அனுப்புவார்கள். இந்தக் காரணங்களுக்காக பள்ளிக்கு கட்டடத்தை சீர் செய்ய முடிவு செய்தேன். அரசு துறை மூலம் இந்தப் பராமரிப்புப் பணி செய்ய வேண்டும் என்றால் உடனே முடியாது. அதற்கு காலம் பிடிக்கும். அதுவரை சீரமைப்புப் பணியை ஒத்தி போட முடியாது. சீரமைப்பு பணிக்குப் பணம் வேண்டுமே... எனவே, தேவையான பணம் புரட்ட எனது நகைகளை அடகு வைத்து பணம் பெற்றேன்.
இந்தப் பள்ளி விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் டவுன் பஞ்சாயத்தின் ஐந்தாம் வார்டில் இருக்கிறது. நான் "எம். புதுப்பாக்கம்' கிராமத்தைச் சேர்ந்தவள். நான் இந்தப் பள்ளியில் சேருவதற்குமுன், ஒப்பந்தப் பணியாளர்களால் பள்ளி நடத்தப்பட்டு வந்தது. குழந்தைகளுக்குத் தர வேண்டிய உணவினை வெளியிலிருந்து கொண்டு வருவார்கள். பள்ளியில் அடிப்படை வசதிகள் கிடையாது. தண்ணீர் வசதி... கழிப்பறை வசதி எதுவும் இல்லை. குழந்தைகள் உணவு கிடைக்கிறது என்பதற்காக வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
பள்ளிக் கட்டடம் 2012 -இல் கட்டப்பட்டாலும், அதன் பிறகு பராமரிப்பு எதுவும் செய்யப்படவில்லை. பள்ளி மூன்று சென்ட் நிலத்தில் அமைந்திருக்கிறது. குழந்தைகள் அமர நாற்காலிகளோ பெஞ்சுகளோ இல்லை. கழிப்பறைக்கு தண்ணீர் வசதி இல்லை. கதவு பொருத்தப்படவில்லை. செப்டிக் டேங்க் இல்லை. குழந்தைகளுக்கு உணவு சமைக்க போதிய பாத்திரங்கள் இல்லை.
2017-இல் இந்தப் பள்ளியின் பொறுப்பு ஏற்றபோது பள்ளிக்கு கட்டடம் விரிசல் அடைந்திருந்தது. அதை செப்பனிட வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொண்டேன். அதற்கான வழிமுறைகளை கட்டடத்தை செப்பனிடுபவர்களிடம் கலந்து ஆலோசித்து வேலைகளைத் தொடங்கச் செய்தேன்.
அடுத்தது பள்ளியின் முற்றம் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்ய வேண்டும். டிராக்டரை வாடகைக்குப் பிடித்து மண்டியிருந்த புதர்களை தேவையில்லாத செடி கொடிகளை அகற்றினேன். டிராக்டரால் மண்ணைக் கிளறிவிட்டால் களைச் செடிகள் வளராது. பள்ளிக்கு வேலி அமைத்தேன். கேட் பொருத்தினேன். பள்ளியின் சுவர்களுக்கு வண்ணம் பூசச் செய்தேன். குழந்தைகள் அமர நாற்காலிகள், சமையல் பாத்திரங்கள் வாங்கினேன். உழவர் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால் தோட்டம், பயிர் குறித்த புரிதல் எனக்கு உண்டு. அங்கன்வாடியைச் சுற்றிலும் மண்டியிருந்த புதர்களை ஆட்களை வைத்து அகற்றினேன். அந்த இடத்தில் காய்கறி தோட்டம் போட்டேன்.
வார்டு மக்கள் இந்த வேலைகளை அரசு செய்கிறது என்று முதலில் நினைத்தார்கள். நான்தான் பணம் செலவு செய்து பள்ளியின் தோற்றத்தை மாற்றி வசதிகளை பெருக்கினேன் என்று தெரிந்ததும் வார்டுமக்கள் பாராட்டினார்கள்.
பள்ளி சீரமைப்பிற்காக நான் யாரிடமும் உதவி கோரவில்லை. பள்ளி சீரமைப்பு பணியை எனது மன திருப்திக்காகச் செய்தேன்.
இயற்கை உரம் போட்டு தோட்டத்தில் விளையும் பலவகை காய்கறிகள் குழந்தைகளுக்கு உணவாகத் தரப்படுகின்றன. புதிய தண்ணீர் குழாய் போடச் செய்தேன். அதனால் பள்ளிக்கு, சமையலுக்குத் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கிறது.
குழந்தைகளுக்குப் பாடி சொல்லித் தருவதை விட டிவியில் பாடலைக் காண்பித்து சொல்லிக் கொடுப்பது, குழந்தைகளை எளிதாகக் கவரும். குழந்தைகளுக்குக் கற்பிக்க, காண்பிக்க, பயன்படுத்தப்பட்ட டிவி ஒன்றையும், மழலைகளுக்கு குழந்தைகள் பாடல்கள் காண்பிக்க டிவிடி பிளேயர் ஒன்றையும் வாங்கியுள்ளேன்.
பள்ளியின் தோற்றம் மாறியதும் பெற்றோர்களது மனதும் மாறியது. பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தொடங்கினார்கள்.
இந்தப் பள்ளியில் நான்கு ஆண்டுகளாக ஆசிரியராகப் பணி புரிகிறேன். பள்ளியில் தற்போது முப்பது குழந்தைகள் தினமும் வருகிறார்கள்.
அதில் 12 குழந்தைகள் நரிக்குறவர் சமூகத்தைத் சேர்ந்தவர்கள். எனக்கு உதவியாக ஹேமாவதி என்பவரும் பள்ளியில் இருக்கிறார். இப்போது இந்த மழலையர் பள்ளி இந்த சுற்றுவட்டாரத்திற்கு ஒரு முன்மாதிரிப் பள்ளியாக மாறிவிட்டது'' என்கிறார் 54 வயதாகும் சுமதி டீச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.