கதை சொல்லும் குறள் - 75 - அரண்!

காந்திநாதனின் உள்ளம் சிறகடித்துப் பறந்தது. அலுவலக வேலையாக ராஜஸ்தானில் இரண்டு மாதங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
கதை சொல்லும் குறள் - 75 - அரண்!

காந்திநாதனின் உள்ளம் சிறகடித்துப் பறந்தது. அலுவலக வேலையாக ராஜஸ்தானில் இரண்டு மாதங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. காந்திநாதனுக்கு ராஜஸ்தான் செல்லவேண்டும் என்பது நெடுநாளையக் கனவாக இருந்தது.
ராஜஸ்தானின் பல மாநிலங்களில் அதாவது ஜெய்பூர், உதயபூர், ஜெய்சல்மீரில் உள்ள அரண்மனைகளையும் சரித்திரப் புகழ்பெற்ற கோட்டைகளையும் பார்க்க முடிவு செய்திருந்தான்.
அன்று சனிக்கிழமை காலை மணி ஒன்பதாகி இருந்தது. ஜெய்பூர் வந்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகியிருந்தது. காந்திநாதனோடு சென்னையில் கல்லூரியில் படித்த தீபக், இங்கே ஜெய்பூரில்தான் குடும்பத்தோடு கடந்த பத்து வருடங்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்பதை மற்றொரு நண்பன் கூறி அவனுடைய முகவரியையும் கொடுத்திருந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் காந்திநாதன் தீபக்கை அலைபேசியில் தொடர்பு கொண்டான்.
"டேய் காந்தி, நீ இங்கே வருவதைப் பற்றி ஏற்கெனவே எனக்குத் தகவல் வந்துவிட்டது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று எனக்கும் சற்று வேலை அதிகமாக இருக்கிறது. சனிக்கிழமை உன்னை வந்து பார்க்கிறேன்''
" சனிக்கிழமை மதியச் சாப்பாடு எங்க வீட்டில்தான். நான் வந்து உன்னை அழைத்துப் போகிறேன். மற்றதை நேரில் பேசிக் கொள்வோம்''.
அன்பு நண்பனின் உபசரிப்பில் காந்திநாதன் மனம் மகிழ்ந்து போனான்.
"ஜெய்சல்மீர் போவாய்தானே; அங்கே என்னுடைய நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் ராஜஸ்தான் டூரிசம் டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கிறான். அவன் பெயர் தாமோதரன்; அவனைத் தொடர்புகொண்டு உன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லி விடுகிறேன். அவன் உனக்கு ஜெய்சல்மீரின் சோனார் கோட்டையைச் சுற்றிக் காட்டுவான். இதுபோன்ற சரித்திரப் புகழ்வாய்ந்த இடங்களைப் பற்றியத் தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பான். என்ன சந்தோஷம்தானே!''
"ரொம்ப நன்றிடா''
"டேய், நன்றி என்ற பெரிய வார்த்தைகள் எல்லாம் எதற்கு? ஜெய்பூரை நான் சுற்றிக் காட்டுகிறேன். உதயபூரில் என்னென்ன முக்கியமான இடங்கள் என்பதைச் சொல்லிவிடுகிறேன். அவைகளை நீ சென்று பார்த்துவிடு'' என்றான் தீபக்.
ஜெய்பூரில் தீபக் தன்னோடு ஒரு கைடையும் கூட்டிவந்தான். அவர் பல சரித்திர நிகழ்வுகளை மிகவும் விளக்கிக் கூறினார்.
"இந்த ஜெய்பூர் ஏன் "பிங்க் சிடி' என்று அழைக்கப்படுகிறது தெரியுமா?'' என்றார். பிறகு தொடர்ந்தார், எட்வர்ட் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் ஜெய்பூருக்கு வந்தபொழுது அவரைக் கெüரவப்படுத்தும் வகையில் எல்லா கட்டடங்களுக்கும் அப்போதையை ஜெய்பூர் மகாராஜா ராம்சிங் பிங்க் நிறத்தில் வர்ணம் அடிக்கச் செய்தார்.
ராணிகள், தெருவில் நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஹவா மஹால் கட்டப்பட்டது.
சவாய் மான்சிங் ஸ்டேடியம் 30,000 மக்கள் அமர்ந்து கிரிக்கெட் மேட்சுகளைப் பார்க்க மகாராஜா சவாய் மான்சிங் ஆல் கட்டப்பட்டது.
ஜந்தர் மந்தர், வான சாஸ்திரத்தில் விருப்பம் கொண்ட சவாய் ஜெய்சிங்கால் உருவாக்கப்பட்டது. இது உலகப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப்படுகிறது என்று பல இடங்களை, அவைகளைப் பற்றிய சரித்திர நிகழ்வுகளோடு விளக்கிச் சொன்னதால் காந்திநாதனுக்குப் பல அரிய தகவல்கள் கிட்டின.
உதயபூர், ஏரிகளின் நகரம் என்று அழைக்கப்படுவதற்கு ஏற்ப பல ஏரிகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. சிடி பேலஸ், பிசோலா ஏரியின் படகு சவாரி, லேக் பேலஸ் என்று பல இடங்களைக் காந்திநாதன் கண்டு மகிழ்ந்தான்.
கடைசியாக ஜெய்சல்மீரை அடைந்தான். தனக்கு உண்டான பணிகளை முடித்துவிட்டு, சனிக்கிழமைக்காகக் காத்திருந்தான். ஏன்? அன்றுதான் காலை ஒன்பது மணிக்குப் புறப்பட்டு தீபக்கின் நண்பன் தாமோதரனோடு சோனார் கோட்டை என்று அழைக்கப்படுகின்ற தங்கக் கோட்டையைக் காணச் செல்ல இருந்தான்.
கோட்டைகள் மீது காந்திநாதனுக்கு எப்பொழுதுமே தீராதக் காதல் உண்டு. செஞ்சிக் கோட்டை, வேலூர் கோட்டை, தஞ்சை கோட்டை, திருமயம், திண்டுக்கல் கோட்டைகள் என்று பலவற்றைச் சென்று பார்த்திருக்கிறான்.
இன்று சோனார் கோட்டையைப் பார்க்கப் போகும் அனுபவத்தை நினைத்து இரவெல்லாம் சரியாகக்கூடத் தூங்கவில்லை.
"நமஸ்தே ஜி'', என்று இரு கரங்களைக் கூப்பி வணங்கியபடி தாமோதரன் வந்தார். சிகப்பு கலர் ஷர்ட் அணிந்து வருவேன் என்று முன்கூட்டியே கூறியிருந்ததால் அவரைக் காந்திநாதன் எளிதாக அடையாளம் கண்டு கொண்டான்.
"சார், உங்களைக் கோட்டைக்கு அழைத்துச் செல்லும் முன் கோட்டைகளின் வரலாற்றைக் கொஞ்சம் சொல்லுகிறேன்'' என்றார் தாமோதரன்.
"கேட்க மிக ஆவலாக இருக்கிறேன்'' என்றான் காந்திநாதன்.
இருவரும் ஒரு டீக்கடையில் அமர்ந்து அருமையான மசாலா டீயைப் பருகத் தொடங்கினர். தாமோதரன் பேச ஆரம்பித்தார்.
"சார், ராஜாக்களும், சக்கரவர்த்திகளும் போரின் மூலம் வெற்றிக் கொண்ட நாடுகளில் ஈட்டிய கப்பங்கள் மற்றும் சூரையாடிய செல்வங்களைக் கொண்டு கோட்டைகளைக் கட்டினர். இந்திய மன்னர்கள் தங்களை மட்டும் காத்துக் கொள்ளாமல், தங்கள் குடிமக்களையும் தங்களோடு சேர்த்துப் பாதுகாக்கும் வண்ணம் கோட்டைகளை எழுப்பினர். அப்படி கட்டப்பட்ட கோட்டைகளுள் ஒன்றுதான் தங்கக் கோட்டை''.
"அயல்நாடுகளிலும் மன்னர்கள் கோட்டைகளைக் கட்டினார்களே‘‘!
"ஆமாம் காந்தி சார், ஆனால் அத்தகைய கோட்டைகளைத் தங்களையும் தன் குடும்பத்தாரையும்  காத்துக் கொள்ளவே கட்டினர்''.
"இன்றும் உலகின் மிகப் பழமையான கோட்டை இந்தியாவில்தான் இருக்கிறது''.
"எங்கே'' என்று காந்திநான் ஆவலுடன் கேட்டான்.
"காங்க்ரா  கோட்டை. இதை இன்றும் தர்மஸ்தலாவில் இருந்து ஜம்மு போகும் வழியில் காணலாம்''.
"இந்தியாவில் மொத்தம் எத்தனை கோட்டைகள் இருக்கின்றன என்று தெரியுமா?''
"ஆயிரத்துக்கும் அதிகமான கோட்டைகள் இங்கே உள்ளன. இதில் 111 கோட்டைகளை மாவீரர் சிவாஜி 35 வருடங்களில் கட்டியிருக்கிறார்''.
"அம்மாடி'' என்று காந்திநாதன் கூவிவிட்டான்.
"ஒரு இடத்தில் தன்னுடைய இராஜ்ஜியத்தை ஸ்தாபித்து, பிறகு அதைக் காத்து, விரிவாக்கவே சிவாஜி இவ்விதம் கோட்டைகளைக் கட்டினார்''.
"கோட்டையைச் சுற்றி 50 கி.மீ சுற்றளவுக்கு உள்ளூர் மக்களையே குடியிருக்கச் செய்தார். கோட்டையைக் காக்க, அதைக் கண்காணிக்க, பராமரிக்க என்று அந்த மக்கள் வேலை செய்தார்கள்''.
"இப்படி வேலை வாய்ப்பு பெற்ற மக்கள் சிவாஜிக்கு விசுவாசமானவர்களாக ஆனார்கள். அவர்களுடைய வாரிசுகள் சிவாஜியின் படையில் சேர்ந்தார்கள். அவர் மேலும் பல மாநிலங்களை வெல்ல உதவினார்கள்''.
"இப்படித்தான் அவர் சக்கரவர்த்தி ஆனார் இல்லையா''
"ஆமாம், அதுமட்டுமா சிவாஜி மகராஜ் தன் கோட்டைகளை மலைப்பகுதிகளில் கட்டினார். பயணம் மேற்கொள்ளும் வழிகளில் இப்படிப்பட்ட இடங்களைப் பயணிகள் கடக்கும்பொழுது அவர்களிடம் சுங்கவரி வசூலிக்கப்பட்டது.
மேலும் கோட்டைகளை மேற்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில் கட்டினார். இதனால் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் நகரங்களின் உள்ளே எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அதற்கும் பணம் கட்ட வேண்டியிருந்தது.
ஐரோப்பியர்கள், மராட்டியர்கள் சோதனைச் சாவடிகள் வழியாக சென்றபொழுது சுங்க வரியைக் கட்டியிருக்கிறார்கள். சிவாஜி, சூரத்தை முற்றுகை இட்டு வென்றபொழுது அந்தத் துறைமுக நகரம் முகலாயர்களின் செல்வச் செழிப்பு மிக்க நகரமாகத் திகழ்ந்தது. அங்கே லட்சக்கணக்கான ரூபாய்களை சிவாஜி வரியாக வசூலித்தார். அவை எவ்வளவு தெரியுமா?''
"சொல்லுங்கள் கேட்க ஆவலாக இருக்கிறேன்''.
"100 கோடி ஹூன் (ஏன்ய்), ஒரு ஹூன் இன்றைய கணக்குக்கு 2,40,000 ரூபாய்கள் என்றால் நீங்களே மொத்தத் தொகையையும் கணக்கிடுங்கள் பார்க்கலாம்''.
"சரி வாருங்கள் தங்கக் கோட்டையைக் காண போகலாம்''.
"தங்கக் கோட்டையில் இன்றளவும் மக்கள் வாழ்வதினால் இதை லிவிங் ஃபோர்ட் என்று அழைக்கிறார்கள்''.
தார் பாலைவனத்தின் மத்தியில் திரிகுடா குன்றின் தலையில் சூட்டப்பட்ட கிரீடம் போல் பார்ப்பவர் ஒரு கணம் கண்களை இமைக்க மறக்கும்படி செய்கிறது. ஜெய்சல்மீர் கோட்டை, தரையிலிருந்து முப்பது மீட்டருக்கு உயர்ந்து விஸ்வரூப தரிசனம் தருகிறது.
"காந்தி சார், பகைவர் ஏறமுடியாத உயரத்தில் இந்தக் கோட்டையை எப்படிக் கட்டியிருக்கிறார்கள் பாருங்கள்'' என்றார் தாமோதரன்.
"பகல் நேர சூரியனின் கதிர்கள் பட்டுத் தங்கம் போல் ஜொலிக்கின்ற மஞ்சள் நிற மணல் கற்களைக் (வங்ப்ப்ர்ஜ் ள்ஹய்க் ள்ற்ர்ய்ங்) கொண்டு கட்டப்பட்டதால் இத்தகைய பளபளப்பு கிடைத்திருக்கிறது. அதனால்தான் தங்கக் கோட்டை என்று பெயர் பெற்றது''.
"சார், சோனார் கேலா என்ற பெயரிலேயே சத்தியஜித்ரே இந்தக் கோட்டையின் சரித்திரத்தின் பின்னணியை மையமாக வைத்து எழுதிய தன் நாவலைப் படமாக்கியிருக்கிறார்''.
"இந்தக் கோட்டையை கி.பி. 1156-இல் மகதிராஜபுத்திர வம்சத்தைச் சார்ந்த அரசர் ஜெய்சல்  என்பவர் கட்டியதால் அவர் பெயரிலேயே இந்தக் கோட்டை அழைக்கப்படுகிறது. இதைக் கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆனதாம்''.
தங்கக் கோட்டையின் மூன்று பாதுகாப்புச் சுவர்களைப் பார்த்த காந்திநாதன் விக்கித்துப் போனான். 
"முதல் சுவரின் நீளம் 5 கி.மீ. அகலம் 2.3 மீ. அம்மாடியோவ். இரண்டாவது சுவர் வரை வரும் பகைவர்களை மூன்றாவது சுவருக்கு அப்பால் இருக்கும் வீரர்கள் கொதிக்கிற எண்ணெய் மற்றும் தண்ணீரை வீசித் தாக்குவார்களாம். அவர்கள் மீது பெரிய பாறைகளையும் உருட்டிப் போடுவார்களாம். பகைவர்களின் கதியை நினைத்துப் பாருங்கள்'' என்று கூறித் தாமோதரன் சிரிக்க காந்திநாதனுக்கு வயிறு கலங்கியது.
கோட்டையின் உட்பகுதிக்கு வந்ததும் ஒரு இந்தியனின் சராசரி வாழ்க்கைப் படலங்கள் அங்கே அரங்கேறிக் கொண்டிருப்பதைக் கண்டு காந்திநாதன் ஆச்சரியத்தில் மூழ்கினான்.
பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள், தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்றுக் கொண்டிருக்கும் வியாபாரிகள், சீருடையில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், உல்லாச நடை போடும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள், அவர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும் பிரெஞ்ச், இத்தாலிய உணவகங்கள், விரையும் வாகனங்கள் என்று மன்னர்கள் காலகட்டத்திலிருந்து இங்கே வாழ்ந்த மக்களின் வம்சாவளிகள் இன்றுவரை இடம் பெயராமல் வாழ்கின்றனர்.
ராஜ்மஹால் அரண்மனையும், அதனுடைய ஏழு மாடிக் கட்டிடமும் அருங்காட்சியகங்களாக ஆக்கப்பட்டிருந்தன.
கோட்டையின் உள்ளே 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட ஜெயினர்களின் கோயில்கள் ஏழு. இந்துக்களின் கோயில்கள் பல இருந்தாலும் லக்ஷ்மிநாத் கோயிலுக்கு அதிக அளவில் கூட்டம் வருகிறது.
"இந்தப் பக்கம் வாங்க காந்திநாதன் சார்''.
"ஜெய்சல்மீரில் அளவில்லாத செல்வங்களை வியாபாரத்தின் மூலம் ஈட்டிய வியாபாரிகள் கட்டிய வீடுகள் இவை'' என்று தாமோதரன் அழைத்துச் சென்று காட்டினார்.
ஹவாலிகள் என்று அழைக்கப்படுகின்ற அந்த வீடுகளைப் பார்த்து காந்திநாதன் மலைத்துப் போனான். மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய அலங்கார வளைவுகள் எழில் கொஞ்சும் கதவுகள், ஜன்னல்கள் என்று பார்த்த கண்கள் படைத்தவனுக்கு நன்றி சொல்லும் என்று காந்திநாதன் எண்ணி மெய்சிலிர்த்தான்.
தங்கக் கோட்டையை விட்டு தாமோதரனும், காந்திநாதனும் வெளியே வரும்பொழுது மாலை நேரமாகிவிட்டது.
காந்திநாதன் கீழே இறங்கியதும் தங்கக் கோட்டையைத் திரும்பிப் பார்த்தான். அது பாலைவனத்தில் பூத்த மஞ்சள் ரோஜாவாக, வள்ளுவர் அரண் என்பது எப்படி இருக்க வேண்டும் என்று எழுதிச் சென்றிருப்பதற்குச் சரியான உதாரணமாக உயர்ந்து நின்றது.

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

 

(குறள் எண்: 743)
பொருள் :

பகைவர் ஏறமுடியாத உயரம், காவலர் நிற்க, இயங்க வசதியான அகலம், இழக்க முடியாத வலிமை, கடக்க முடியாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com