யானைகளை நேசிக்கும் பெண்...!

""கேரளத்தில் முதன்முதலாகச் சொந்தமாக "கிரேட் மலபார் சர்க்கஸ்' என்ற நிறுவனத்தை எனது தாத்தா தொடங்கிய காலத்தில் இருந்தே  விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
யானைகளை நேசிக்கும் பெண்...!


""கேரளத்தில் முதன்முதலாகச் சொந்தமாக "கிரேட் மலபார் சர்க்கஸ்' என்ற நிறுவனத்தை எனது தாத்தா தொடங்கிய காலத்தில் இருந்தே  விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் யானைகள் என்றால் அளவற்ற அன்பு உண்டு'' என்கிறார் சப்னா சுலைமான்.

கள்ளிக்கோட்டையில் பிறந்து வளர்ந்து படிப்பை முடித்தவுடன், ஐக்கிய அமீரகத்தில் மூன்று ஆண்டுகள் சுகாதாரத் துறையில் பணியாற்றினார். இதையடுத்து, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட, காயமடைந்த யானைகளுக்கு மருத்துவ உதவிகளை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கேரளத்துக்குத் திரும்பினார்.

ஆசாரமான முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த சப்னா, கேரளத்தில் நடைபெறும் இந்து கோயில் திருவிழாக்களில் நடைபெறும் யானைகள் அணிவகுப்பைப் பார்க்க ஆர்வமுடன் செல்வதுண்டு.

ஒருமுறை சஸ்தாம் கோட்டா நீலகண்டன் என்ற யானை காயமடைந்து சிகிச்சையின்றி அவதிப்படுவதை சப்னா சுலைமான் நேரில் கண்டார். இதன்பின்னர், ஆதரவற்று கைவிடப்படும் யானைகளுக்கு மருத்துவ உதவிகள்அளிக்கும் எண்ணம் அவர் மனதில் எழுந்தது. ஆனால், யானைகள் பராமரிப்பில் ஆண்களே முன்னின்று செய்வதால்,  சப்னா இந்தப் பணியில் சேருவதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை.

இருப்பினும் தனது லட்சியத்தில் உறுதியோடு பிடிவாதமாக இருந்த சப்னா, குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்கு இணங்க மறுத்து தனது கனவை நிறைவேற்றுவதற்காக குடும்பத்தினரிடமிருந்து விலகினார்.

யானைகளின் உரிமையாளர்கள் பலரைச் சந்தித்து, யானைகளைப் பராமரிப்பதற்கும்  பாகன்களுக்கு அளிக்கும் பயிற்சியை அளிக்கும்படி சப்னா கேட்டார். ஆனால்,  இவரது ஆர்வத்துக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் விழுந்தன. 

இந்த நிலையில்,  யானை உரிமையாளர் ஹரிதாஸ் வடக்கட் என்பவர் சப்னாவுக்கு உதவ முன்வந்தார். சப்னாவின் மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் பார்த்த ஹரிதாஸ் வடக்கட் தனது குடும்ப அங்கத்தினரைப் போல நடத்தத் தொடங்கினார்.

யானைகள் மீது ஆர்வம் இருந்தாலும் பாகனுக்கான பயிற்சி பெறுவது சப்னாவுக்குச் சவாலாகவே இருந்தது. இருப்பினும் தனது கனவு நனவாக வேண்டும் என்ற பிடிவாதத்துடன் சப்னா இருந்தார். 

நாளடைவில் யானைகளுடன் சகஜமாகப் பழகவும், மருத்துவம் செய்யவும் தொடங்கிய சப்னாவுக்குப் பாராட்டு மழைகள் குவிந்தன. 

"மற்றவர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி தனது கொள்கையைவிட நினைப்பது மரணத்துக்குச் சமம்' என்ற தனது ஆசான் ஹரிதாஸ் வடக்கட் சொல்வதை அவ்வப்போது சப்னா நினைவு கூறுகிறார்.

நாட்டிலேயே முதல்முறையாக நவீன உபகரங்களுடன் திருச்சூரில் அமைந்துள்ள இந்திய யானைகள் நலவாழ்வு அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் யானைகள் மருத்துவமனை, யானைகள் கருத்தரித்தல் மையத்தில் இணைச் செயலராகப் பணியாற்றும் சப்னா, தனியார் பாதுகாப்பில் உள்ள யானைகள் குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதி வருகிறார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:

""மற்றவர்கள் எதிர்ப்புகளுக்கும், ஏளனத்துக்கும் அஞ்சி எனது கொள்கையையும் துணிவையும் விட்டு கொடுத்திருந்தால் நான் நினைத்ததைச் சாதித்திருக்க முடியாது. என்னைப் போல விருப்பம் உள்ள பெண்கள் இத்துறையில் பயிற்சிப் பெற தைரியத்துடன் வெளிவர வேண்டும்'' என்றார் சப்னா சுலைமான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com