அமைச்சரானார் ரோஜா!

ஆந்திரப் பிரதேச அமைச்சரவையில் 4 பெண்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  திரைப்பட நட்சத்திரமான ரோஜா, தனேதி வனிதா,   விடாதலா ரஜனி,  உஷா ஸ்ரீ சரண் ஆகியோர்தான் அவர்கள்.
அமைச்சரானார் ரோஜா!


ஆந்திரப் பிரதேச அமைச்சரவையில் 4 பெண்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. திரைப்பட நட்சத்திரமான ரோஜா, தனேதி வனிதா, விடாதலா ரஜனி, உஷா ஸ்ரீ சரண் ஆகியோர்தான் அவர்கள்.

தமிழ்த் திரையுலகில் சிறந்த நடிகையாகக் கொடி கட்டி பறந்த ரோஜா, இன்று ஆந்திர அரசியலில் கடந்த 15 ஆண்டுகளாகத் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார். இப்போது ஆந்திர மாநில அமைச்சராகவும் ரோஜா அண்மையில் பதவியேற்றுள்ளார்.

லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ரோஜாவின் அரசியல் களம் சற்று வித்தியாசமானதுதான்.

ஆந்திர மாநிலத்தில் 1972-ஆம் ஆண்டு நவம்பர் 17-இல் நாகராஜன் ரெட்டியார்-லலிதா என்ற தம்பதிக்கு மகளாய் பிறந்தவர் ரோஜா. இரு சகோதரர்கள் உண்டு.

1990-களில் "செம்பருத்தி' என்ற தமிழ்ப் படத்தில் திரையுலகில் அறிமுகமாகினார். ரஜினி, பிரபுதேவா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழிலும், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தவர்.

நடிகர் மம்மூட்டியுடன் ரோஜா நடித்த "மக்கள் ஆட்சி' என்ற அரசியல் கலந்த திரைப்படம் தமிழ்த் திரையுலகில் வெற்றி நடை போட்டது மட்டுமின்றி, தமிழ்த் திரையுலக வட்டாரத்தில் இன்றும் மறக்க முடியாத திரைப்படமாகும்.

ரோஜாவை திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை 2002-இல் காதல் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு அன்சுமல்லிகா என்ற மகளும், கிருஷ்ணா லோகித் என்ற மகனும் உள்ளனர். அதுவரையில் சென்னையில் வசித்துவந்த ரோஜா ஆந்திரத்தில் உள்ள நகரியில் குடியேறினார்.

தொடக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சியில்தான் இருந்தார். பின்னர், காங்கிரஸில் இணைந்தார். நகரி, சந்திரகிரி சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இருந்தும், அரசியல் களத்தில் இருந்து விலகவில்லை. தொகுதி மக்களோடு ஒன்றிணைந்துவிட்டார். ஆனாலும் திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

2014, 2019-இல் நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானபோது ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப் பகுதியில் அவரது இனத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இருப்பினும், அமைச்சருக்கு நிகரான ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உட்கட்டமைப்பு பிரிவு தலைவர் என்று முக்கியப்பதவி கொடுக்கப்பட்டது.

தற்போது ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தனது அமைச்சரவையை முழுமையாக மாற்றி அமைக்க, இதில், ரோஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆந்திர மாநில சுற்றுலா, கலை, இளைஞர் மேம்பாட்டுத் துறையின் அமைச்சராகப் பதவியேற்றார்.

எம்எல்ஏவாக இருந்தபோதிலும், இல்லாதபோதும் நகரி தொகுதியில் பல்வேறு நல உதவிகளை செய்துவந்தார். முதல்வர் ஜெகனின் கவனத்தை ஈர்க்க 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் என்று ஒரே நாளில் வழங்கி புரட்சி செய்தார்.

இவர் பதவியேற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்து, சமூக வலைதளங்களில் தமிழர்கள் கூட வாழ்த்துகளைத் தெரிவித்து பதிவிட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com