உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 16: யாரைப் பின்பற்றலாம்?

கல்பனாவுக்கு வளைகாப்பு விமரிசையாக நடந்தது. உறவுகளும் நட்பும் குழுமியிருந்தார்கள்.
உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 16: யாரைப் பின்பற்றலாம்?

கல்பனாவுக்கு வளைகாப்பு விமரிசையாக நடந்தது. உறவுகளும் நட்பும் குழுமியிருந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கை நிறைய வளையல் தந்தார்கள். என் உறவுக்காரப் பெண் வசந்தி வந்திருந்தாள். அவளைப் பல வருஷங்களுக்குப் பிறகு அன்றைக்குத் தான் பார்த்தேன். கொஞ்சம் ஒதுங்கி உட்கார்ந்திருந்தாள். பார்த்தவுடன் புன்னகைத்தாள். இருவரும் எங்கள் கல்லூரி நாள்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். 

எங்கிருந்தோ மஞ்சுளா வந்து வசந்தியைப் பார்த்து, " என்ன ஏதாவது விஷேசம் உண்டா?" என்று கேட்டாள். வசந்தி நெருப்பை மிதித்தவள் போலப் பதறினாள். எனக்கு வசந்தியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. மஞ்சுளாவின் மீது கோபம் வந்தது. திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னும் குழந்தை இல்லை. எந்த விசேஷத்திற்குச் சென்றாலும் அது பற்றிய விசாரிப்புகள் அவளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

மஞ்சுளா அதோடு விடவில்லை. வசந்தி, செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டுமென அறிவுரை கூறினாள். அம்மா வீட்டுக்குப் போய் அங்கே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கினாள். இதையெல்லாம் வசந்தி பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும். வசந்தி தன்னுடைய அறிவுரைகளை அசட்டை செய்வதாக நினைத்த மஞ்சுளா, "குழந்தை வேண்டாம் என்று இருக்கிறாயா? உனக்கே இந்த விஷயத்தில் அக்கறை இல்லை போல.' என்று சொன்னாள். 

விசேஷத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லாருடைய பார்வையும் வசந்தி பக்கம் திரும்பியது. வசந்திக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. விசேஷ வீட்டில் அழுதுவிட்டால் அதை ஒரு குறையாக யாரும் சொல்லி விடுவார்களோ என்ற பயம் அவள் முகத்தில் தெரிந்தது. கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டாள். இதற்கு மேல் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. 

மஞ்சுளா, குழந்தை பெற்றுக் கொள்வதும் பெற்றுக் கொள்ளாததும் வசந்தியின் சொந்த விஷயம். எதற்காக அவளை இப்படி கஷ்டப்படுத்துகிறாய் என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டேன். மஞ்சுளாவுக்குக் கோபம் வந்துவிட்டது. இதற்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? நீ ஏன் பேச வேண்டும்? உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ என்று என் பேரில் எரிந்து விழுந்தாள். சரிதான். தனக்குப் பிடிக்காததைப் பேசும் பொழுது வசந்தி தான் பதில் சொல்லியிருக்க வேண்டும். நான் சொன்னது பிசகு தான் என்று நினைத்துக் கொண்டேன்.  வசந்தி சட்டென்று அங்கிருந்து புறப்பட்டுவிட்டாள். 

எனக்கு வசந்தியிடம் கூட இன்னும் தெளிவு இருந்திருக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. தன்னை ஒருவர் விரும்பத்தகாத வகையில் அணுகும் பொழுது அவரைத் தடுத்து நிறுத்துவதற்கு ஏன் தயங்க வேண்டும்? "எனக்குக் குழந்தை வேண்டுமா? எப்போது எப்படி குழந்தை பெற்றுக் கொள்வது என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் அக்கறைக்கு நன்றி" என்று நாசுக்காக அவளின் முகத்துக்கு நேரே புன்னகை மாறாத முகத்தோடு சொல்லியிருந்தால் மஞ்சுளாவுக்கு இப்படிப் பேசுவதற்கான துணிவு வருமா? ஒருவர் நம்மைக் காயப்படுத்தும் சமயத்தில் அதிலிருந்து விலகி நிற்கவும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? கண்ணீரும் கழிவிரக்கமும் எதற்காக?

உங்களில் சிலருக்கு இந்தக் காலத்தில் யார் இப்படியெல்லாம் கேட்கிறார்கள்? இதெல்லாம் அந்தக் காலம் என்று தோன்றலாம். ஆனால், இதைப் படிக்கும் பலருக்கும் இப்படியான அனுபவங்கள் நிச்சயம் இருக்கும். குழந்தை இல்லாதவர்களிடம் அதைப் பற்றி விசாரிப்பது, கணவன் மனைவி இருவரில் யாருக்கு சம்பளம் அதிகம் என்று தெரிந்து கொள்ள குடைந்து குடைந்து கேள்விகள், குடும்பப் பிரச்னைகளைப் பற்றிக் கேட்பது, மாமியார் மருமகள் உறவை விசாரிப்பது, இதெல்லாம் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ள பெண்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். 

சிலருக்கு, நம்முடைய குழந்தைகள் எப்படிப் படிக்கிறார்கள்? என்ன மதிப்பெண் வாங்குகிறார்கள்? அவர்களுக்கான நம் வருங்கால திட்டங்கள் என்ன? குழந்தைகளுக்கான நம்முடைய சேமிப்பு என்று அறிந்து கொள்வதில் அடங்காத ஆர்வம் இருக்கும். நம் குழந்தைகள் நமக்கு அடங்கி நடக்கிறார்களா? என்று தெரிந்து கொள்ள முனைப்புக் காட்டுவதைப் பார்த்தால் ஆராய்ச்சி மாணவர்கள் கூட தோற்றுப் போவார்கள். அவ்வளவு நுட்பமாக ஆராய்வார்கள்.  

படிப்பறிவில்லாத பெண்கள் அப்படி இருக்கலாம். படித்த பெண்கள் மத்தியில் இப்படி பண்பற்ற பேச்சும் நடத்தையும் இருக்காது என்று நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், படித்த பெண்களுக்கும் இத்தகைய அல்ப ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. நான் சொன்ன மஞ்சுளா எம்எஸ்சி படித்தவள். பெரிய வேலையிலும் இருக்கிறாள். என்றாலும் அவளுக்குப் பிறர் மனம் புண்படுமே என்ற சிந்தனை இல்லாமல் இருக்கிறது. 

ஊரில் யாராய் இருந்தாலும் இப்படி அறிவுரையும் ஆலோசனையும் வழங்கும் மஞ்சுளாவிடம், ஏன் அடுத்தவரின் சொந்த விஷயங்களில் தலையிடுகிறாய்? என்று நான் கேட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்றாலும், அடுத்தவரின் வேதனையை கோபத்தைப் புரிந்து கொள்ள முடியாத அறியாமை இருக்கிறது. "இது அறியாமை தானா அல்லது எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு எல்லாம் தெரிந்தாக வேண்டும் என்ற அகந்தையா?"   

நம் மீது அக்கறையோடு சொல்வதாக தேடி வந்து அநாவசிய அறிவுரைகள் சொல்வது நம்முடைய அந்தரங்கங்களை, நாம் பகிர்ந்து கொள்ள விரும்பாதவற்றைத் தெரிந்து கொள்ள விழைவது அந்த மனிதரின் மீதே அருவருப்பை ஏற்படுத்தி விடுகிறது. நம்மிடம் யாரும் எப்படிப் பழக வேண்டுமென நினைக்கிறோமோ அப்படி நாமும் மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மரியாதை சாத்தியமாகும்.

பண்பாடு என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறோம். ஆனால், அதைப் பின்பற்றுவது என்று வந்துவிட்டால் மறதி வந்து விடுகிறது. சர்வ சாதாரணமாகப் பக்கத்து வீட்டு மனிதர்களை விமர்சனம் செய்து விடுவதும் ஒருவரைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் நாமாகவே கற்பிதம் செய்து கொண்டு முன்முடிவுகளுக்கு வருவதும் சுலபமாக இருக்கிறது. அந்த இடத்தில் நம்மை வைத்துப் பார்க்கும் பக்குவம் வருவதில்லை. 

செல்வி அத்தை அறுபது வயதைத் தாண்டியவர், படிப்பு எட்டாம் வகுப்பு வரை தான். அவருடைய நாகரிகமான நடத்தை யாருக்கும் அவரிடம் மரியாதையை ஏற்படுத்தும். ஒரு நாளும் திடீரென வந்து நின்று நம்மை கஷ்டப்படுத்த மாட்டார். வரலாமா? என்று கேட்டு விட்டுத் தான் வீட்டுக்கு வருவார். நாமே நம்முடைய கஷ்டத்தை பிரச்னையைச் சொல்லிப் புலம்பினால் வாஞ்சையோடு கேட்டுக் கொண்டிருப்பார். முடிவில், "எல்லாம் சரியாகி விடும் கவலைப் படாதே" என்று சொல்வதோடு முடித்துக் கொள்வார். அத்தை சொல்லும் விதத்தில் நமக்கே எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை தோன்றிவிடும்.  


யாரையும் புன்னகையோடு எதிர்கொள்வது, சிறியவர்கள் பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் மரியாதையோடு நடத்துவது, முழுமையாக பெயர் சொல்லி அழைப்பது, கேலி கிண்டல் இல்லாமல் தெளிவாகப் பேச வேண்டியதைப் பேசுவது என்று அத்தையின் பழக்க வழக்கங்களால் யாரும் அத்தையை விரும்பி நட்பு பாராட்டுவார்கள். தன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்பதை தன்னுடைய நடத்தையே தீர்மானிக்கிறது என்று நம்புபவர் செல்வி அத்தை.

செல்வி அத்தைக்கு முப்பது வயது நடந்து கொண்டிருந்த பொழுது அத்தையின் கணவர் விபத்தில் காலமானார். அத்தையும் அவரும் அன்னியோன்னியமாக வாழ்ந்த தம்பதிகள். கணவர் மறைவுக்குப் பிறகு அத்தை அந்த நாளிலேயே மாங்கல்யம் பொட்டு பூ என்று மாமா இருந்த பொழுது எப்படி இருந்தாரோ அப்படியே தொடர்ந்திருக்கிறார். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அத்தையின் இந்த முடிவு பெரும் விமர்சனத்துக்கு உள்ளானதாம். 

அத்தை அழுது கொண்டிருக்கவில்லை. யாரிடமும் அதற்காக தர்க்கம் செய்யவில்லை. சிலரை புன்முறுவலோடு கடந்திருக்கிறார். சிலரிடம், "என் கணவர் இல்லை என்று நான் நினைக்கவில்லை. அவருக்கு நான் எப்படி இருந்தால் பிடிக்குமோ அப்படி இருப்பதையே நானும் விரும்புகிறேன்" மென்மையாக ஆனால் அழுத்தமாக பதில் சொல்வாராம். காலப் போக்கில் அத்தை இப்படி இருப்பது பற்றி யாருக்கும் கேள்விகள் இல்லாமல் போய்விட்டது.

செல்வி அத்தை நம்மைப் போன்ற பெண்களுக்கு முன்னுதாரணம். தான் எப்படி வாழ வேண்டும் என்பதில் அவருக்குத் தெளிவான சிந்தனை இருந்தது. அதனால் இந்த சமூகத்தை சரியான முறையில் கையாளவும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதோடு மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும்? மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற புரிதலும் சாத்தியமாகி இருந்தது.

தான் எப்படி வாழ வேண்டுமென்ற தெளிவு இல்லாதவர்களே அடுத்தவர் பற்றி அதிகம் கவலைப் படுகிறார்கள். தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். தன்னம்பிக்கை இன்மையை மறைக்க அடுத்தவரின் குறைகளைப் பேசிப் பெரிதாக்குகிறார்கள் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.  உண்மை. சமூகம் என்பது பலதரப்பட்ட மனிதர்களைக் கொண்டதாகவே இருக்கும். மஞ்சுளாக்களும் செல்வி அத்தைகளும் நம்மைச் சுற்றி எப்போதும் இருப்பார்கள். நாம் யாரைப் பின்பற்றப் போகிறோம் என்பதை முடிவு செய்து கொள்ள நமக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. தொடர்ந்து பேசுவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com