உரிமையை இழக்கலாமா...?

ஆஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்காக சட்டச் சேவையை ஆற்றி வருகிறார் சந்திரிகா சுப்பிரமணியன்.
உரிமையை இழக்கலாமா...?


ஆஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்காக சட்டச் சேவையை ஆற்றி வருகிறார் சந்திரிகா சுப்பிரமணியன்.  உறவுகளையும், நாட்டையும் மறந்து குடும்பத்துக்காக அயல்நாட்டில் குடிபெயர்ந்தோரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதோடு,   பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் பன்முகத் தன்மையோடு விளங்கி, பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா உச்சநீதிமன்றத்தின் சட்ட வல்லுநர், மேற்கு சிட்னி பெடரேஷன் பல்கலை.யில் சட்டம் கற்பிப்பவர்,  தமிழ் வளர்ச்சி மன்ற நிறுவனர் என பல பணிகளுக்கு இடையே சட்டத் துறையிலும் சேவையாற்றிவருவர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன்.

இவர் எழுதிய திருப்பள்ளியெழுச்சி முதலாகத் தொடங்கி தாலாட்டில் முடியும் 7 பாடல்கள் இசைத் தட்டாக வெளிவந்துள்ளன. இவரிடம் சேவைகள் குறித்து பேசியபோது, கூறியதாவது:

எனது சட்டம் தொடர்பான பணி 20ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமானது. ஆங்கிலம் கற்பித்தல், கணினி தட்டச்சு போன்ற சிறிய பணிகளில் ஈடுபட்டிருந்தேன். பின்னர்.  மிகப் பெரிய கல்லூரி அமைப்பான "டேப்' என்ற அரசு சார்ந்த தொடர் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டியது. அப்போதுதான் சட்டம் படிக்க வேண்டும் என்ற விருப்பம் உருவானது. குடிவரவு தொடர்பான சட்டத்தை ஒரு பயிற்சியாகக் கொண்டு அதன் முகவராக பணியாற்றினேன்.

மூன்றாண்டுகள்  பட்டப் படிப்பை பகுதி நேரமாகவும் ஓரு ஆண்டு நேரடியாகவும் நான்கு ஆண்டுகளில் முடித்தேன்.

புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு பல சமயங்களில் மொழி கலாசார பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. அவர்களுக்காக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். என் சொந்தத் தொழிலை தொடங்கிய போது ஒரு தொண்டு நிறுவனத்தையும் தொடங்கி இலவச சட்டச் சேவையை வழங்க ஆரம்பித்தேன்

இதழியல் பயணம் குறித்து?

1980-ஆம் ஆண்டுகளில் தாய் இதழில் பகுதி நேர நிருபராகப் பணியாற்றத் தொடங்கினேன்.  அந்தப் பயணம் தொடர்ந்தது.  இலங்கையின் முதன்மையான பத்திரிகையில் ஒன்றான "வீரகேசரி'யில் முதல் பெண் ஆசிரியாக பணியாற்றினேன்.  எந்தத் தொழிலில் இருந்தாலும் ஊடகத் துறையைவிடவில்லை.

ஆஸ்திரேலியாவில் இதழியல் தொடர்பான பணியில் ஈடுபடுவதற்காக விரும்பிய போதும்,  இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை விட மிகவும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு அதிகமாக சுதந்திரம் இருந்த காரணத்தால்,  24 மணி நேரமும் வேலை செய்யக் கூடிய நிலை. இருந்தாலும் எழுதுவதை விடாது தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் போது பல வாய்ப்புகள் கைக்கு எட்டியது என்று கூட சொல்லலாம்.       

பெற்ற விருதுகளும்,  எழுதிய நூல்களும் குறித்து...?

1988-ஆம் ஆண்டில் எனது ஆய்வு நூலான "மக்கள் தொடர்பு சாதனமும்-மகளிரும்'  என்ற நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது,  2017-ஆம் ஆண்டில் தமிழக அரசின் அயல்நாட்டு தமிழ் அறிஞர் விருதும்,  குற்றங்களும்-இணைய வெளிச்சட்டங்களும் என்ற சட்ட நூலுக்காக 2019-ஆம் ஆண்டுக்கான எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் அப்துல் கலாம் விருது,  உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com