சவாலே சமாளி!

சமையல் கலை வல்லுநர், தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், ஆவணப்பட இயக்குநர், எழுத்தாளர், சமூக சேவகி இப்படி பல முகங்கள் கொண்டவர் கிருத்திகா.
சவாலே சமாளி!

சமையல் கலை வல்லுநர், தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், ஆவணப்பட இயக்குநர், எழுத்தாளர், சமூக சேவகி இப்படி பல முகங்கள் கொண்டவர் கிருத்திகா. இவற்றைத் தவிர இன்னொரு செய்தி தமிழ்நாட்டின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணனின் மனைவிதான் கிருத்திகா. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி என்பதற்கு அப்பால் தனக்கென்று தனி முத்திரைப் பதித்துக் கொண்டிருக்கும் கிருத்திகா ராதாகிருஷ்ணன் தனது பணிகளுக்காக சாதனைப் பெண்மணி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். தற்போது தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் இவரது சமையல் நிகழ்ச்சி ஒன்றும், பயண நிகழ்ச்சி ஒன்றும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இவரது நிகழ்ச்சிகள் மலேசியாவின் தமிழ் சேனல் ஒன்றிலும் ஒளிபரப்பாகின்றன. மேலும், இவர், கேக் மற்றும் இதர பேக்கரி பொருட்கள் தயாரிப்பு வகுப்புகளும் நடத்துகிறார். கிருத்திகா ராதாகிருஷ்ணன் தொடர்கிறார்:

""எனக்கு சொந்த ஊர் மதுரை. அப்பா நாகராஜன் மதுரையில் பிரபலமான மூளை நரம்பியல் மருத்துவர்.

லேடி டோக் கல்லூரியில் பி.எஸ்சி படித்தேன். அதன் பிறகு மதுரா கல்லூரியில் எம்.எஸ்சி. நாம் சாப்பிடுகிற சாப்பாடு வெறும் ருசிக்காக மட்டுமில்லை; உடல் ஆரோக்கியத்துக்காகவும் இருக்கவேண்டும் என்று என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.

என் பெற்றோருக்கு நான் ஒரே பெண் என்பதால், ரொம்ப செல்லம். திருமணத்துக்கு முன்பு வரை எனக்கு சமையலில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. எனது திருமணத்துக்குப் பிறகு சீரியசாக சமையல் கற்றுக் கொண்டேன் என்று சொல்லலாம்.

டி.வி. பிரவேசம்

"ஏ.வி. எம். நிறுவனம் "மங்கையர் சாய்ஸ்' என்ற பெண்களுக்கான ஒரு நிகழ்ச்சியைத் தயாரித்து, ஒளிபரப்பி வந்தார்கள். அந்த நிகழ்ச்சியை நான் தொடர்ந்து ஆர்வத்துடன் பார்ப்பேன். அதில் பல்வேறு பிரபலங்களும் பங்கேற்று, பெண்களுக்குப் பயனுள்ள பல்வேறு விஷயங்களையும் சொல்வார்கள். நாமும் அதில் பங்கேற்று, சில நல்ல விஷயங்களைச் சொல்லலாமே என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. என் விருப்பத்தை அவர்களுக்குத் தெரிவிக்க, அவர்கள் "மங்கையர் சாய்ஸ்' நிகழ்ச்சியில் இடம்பெறும் சமையல் பகுதியில் பங்கேற்க அழைத்தார்கள். அதற்கு மிக நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு மற்ற டெலிவிஷன் சேனல்களிலும் சமையல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அழைப்பு வந்தது. சன் டிவி, கலைஞர் டி.வி. மெகா டி.வி. ராஜ் டிவி. பெப்பர்ஸ் டி.வி. என்று பல்வேறு சேனல்களிலும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினேன்.

வெற்றி ரகசியம்

பொதுவாக எல்லோர் வீட்டிலும்தான் சாம்பார் வைக்கிறார்கள். ஆனால் எல்லாருடைய வீட்டிலும் செய்யும் சாம்பார் ஒரே ருசியாக இருப்பதில்லையே; அதே சமயத்தில் நாம் ஓட்டலுக்குப் போனால், அங்கே சாப்பிடுகிற சாம்பாரின் ருசி எல்லோருக்கும் பிடிக்கிறது. அவர்கள் மட்டும் ருசிக்கு என்ன மாயாஜாலம் செய்கிறார்கள்? என்று யோசித்தேன்.

சமைக்கிற ஐட்டம் வாய்க்கு ருசியாக இருக்க என்ன செய்யவேண்டும் என்று சமையல் டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்தேன்; அதே சமயம், சாப்பிடும் ஐட்டம் டேஸ்டாக இருந்தால் மட்டும் போதாது; அது ஹெல்தியானதாகவும் இருக்க வேண்டும்.

எனவே, ருசியான, ஹெல்தியான ரெசிபிக்களை நான் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். சில ஐட்டங்களின் செய்முறை கஷ்டமாக இருக்கும். அவற்றை செய்வதற்கு ஷார்ட் கட்கள் சொல்லிக் கொடுப்பேன்.

இன்று எல்லா மிடில் கிளாஸ் வீடுகளிலும் மைக்ரோ வேவ் ஓவன் இருக்கிறது. எனவே, மைக்ரோ வேவ் ஓவனில் செய்யும் ஐட்டங்களை செயல்முறை விளக்கம் அளித்தேன். இவை எல்லாமாகச் சேர்ந்து என் நிகழ்ச்சிகளுக்கு ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுத் தந்தன.

ஒரு கட்டத்தில் மற்றவர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பதிலாக, நாமே சொந்தமாக நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினால் என்ன என்கிற எண்ணம் ஏற்பட்டது. தனியார் சேனல்களில் தயாரிப்பாளர்கள் கட்டவேண்டிய கட்டணம் மிக அதிகமாக இருந்ததால், எனக்குக் கட்டுப்படியாகக் கூடிய பட்ஜெட்டில் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்ப செளகரியமாக பொதிகை தொலைக்காட்சியைத் தேர்ந்தெடுத்தேன். எனது நிகழ்ச்சிகளில், டாக்டரான என் அப்பா சத்தான உணவுகள், உடல் ஆரோக்கியம் பற்றி எல்லாம் நிறைய டிப்ஸ் கொடுப்பார். அவை ரொம்ப சிம்பிளாக இருந்தாலும், நல்ல பலன் தருகின்றன என்று பார்க்கிறவர்கள் பலரும் சொல்வார்கள். என்னுடைய சமையல் குறிப்புகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தகங்களாக வெளியாகி இருக்கின்றன. அவற்றுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சவாலே சமாளி

பொதிகை தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சிகள் வழங்கியது குறிப்பாக நேரடி ஒளிபரப்பில் ஒரு மணி நேர சமையல் நிகழ்ச்சிகள் வழங்கியது உண்மையிலேயே ஒரு பெரிய சவாலான அனுபவம்தான். வழக்கமாக சமையல் நிகழ்ச்சிகளில், "ஐந்து நிமிடம் இதை கிண்டிக்கொண்டே இருந்தால் திக் ஆகிவிடும்" என்று சொல்லி, கட் செய்து, ஐந்து நிமிடமும் கழித்து அதை மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று தொடரலாம். ஆனால், லைவ் நிகழ்ச்சி என்றால், அந்த ஐந்து நிமிடம் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி கிண்டுகிற காட்சியையே காட்டிக் கொண்டிருந்தாலும் போர் அடிக்கும். எனவே, நாம் விடாமல் ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படிப் பேசுவது சுவாரசியமாக இருக்க வேண்டும்.

அவற்றை எல்லாம் விட இன்னொரு சவாலையும் நான் சந்தித்தேன். அது என்னவென்றால், என்னுடைய நேரடி ஒளிபரப்பு சமையல் நிகழ்ச்சி முடிந்ததும், அடுத்தபடியாக லைவ் ஆக நியூஸ் ஒளிபரப்பாகும். எனவே, நியூஸ் வாசிப்புக்கு எந்த விதமான சப்த இடையூறும் இல்லாமல், நம்முடைய சமையல் பாத்திரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு படப்பிடிப்புத் தளத்தில் இருந்து புறப்பட வேண்டும். அப்போது சவாலாக இருந்தாலும், அதையெல்லாம் இப்போது நினைக்கிறபோது சிரிப்பு வரும்.

ஊர் சுற்றும் அனுபவம்

பொதிகையில் முன்பு, "தெரிந்த ஊர்; தெரியாத விஷயங்கள்' என்ற தலைப்பில் பல்வேறு ஊர்களையும் பற்றிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினேன்.

இப்போது "ஊர் சுற்றலாம்' என்ற பெயரில் அது ஒளிபரப்பாகிறது. அதில், பிரபலமான குக்கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை இடம்பெறுகின்றன. நான் அயல்நாடுகளுக்குச் செல்லும்போது, நிறைய தகவல்கள் சேகரித்து, அந்த ஊர்க் காட்சிகளையும் படம்பிடித்துக் கொண்டு வருவேன். அப்படித்தான் பாரிஸ், வெனிஸ் போன்ற நகரங்கள் கூட அதிலே இடம்பெற்றன. ஒரு ஊருக்குப் போனால், அங்கே இருக்கும் பிரபலமான விஷயங்களை மட்டுமில்லாமல், உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே தெரிந்த பல புதிய விஷயங்களையும் சேகரித்து, நிகழ்ச்சியில் இடம்பெறச் செய்வேன். உதாரணமாக, ஆக்ரா பற்றிய எபிசோடில், அங்குள்ள உலகப் புகழ் பெற்ற தாஜ் மகாலை மட்டுமில்லாமல், அங்கே தயாரிக்கப்படும் ஸ்பெஷலான எள் மிட்டாய் பற்றியும் சொன்னேன். அதற்காக, எள் மிட்டாய் தயாரிக்கும் இடத்துக்கு ராத்திரி பதினோரு மணிக்கு மேல் போய், திடமான வெல்லப்பகை பிரம்மாண்டமான மர சுத்தியால் பலமாக அடித்து, பதப்படுத்தி, அந்த மிட்டாய் செய்யப்படுவதையும் படம் பிடித்தது வித்தியாசமான அனுபவம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com