சாதித்துக் காட்டுவோம்! : டாக்டர் பூர்ண சந்திரிகா

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநலக் காப்பகம்  228 ஆண்டுகள் பழைமையானது.
சாதித்துக் காட்டுவோம்! : டாக்டர் பூர்ண சந்திரிகா

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநலக் காப்பகம் 228 ஆண்டுகள் பழைமையானது. 1794-ஆம் ஆண்டு இருபது மனநலம் குன்றியவர்களின் புகலிடமாக இது துவக்கப்பட்டது. இன்று, 1800 படுக்கை வசதி கொண்ட இந்தியாவின் இரண்டாவது பெரிய மனநல மருத்துவ மையமாக வரிவடைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் புற நோயாளிகளாகவும், அகநோயாளிகளாகவும் இங்கே நவீன வசதிகளோடு கூடிய சிகிச்சை பெற்றுவருகிறார்கள். "கடந்த இரண்டேகால் நூற்றாண்டு காலத்தில் நடந்திராத புதிய முயற்சி ஒன்றை நாங்கள் இப்போது எங்கள் மனநலக் காப்பகத்தில் மேற்கொண்டிருக்கிறோம். ஆம்! எங்கள் மருத்துவமனையில் அக நோயாளிகளாக இருப்பவர்களிலிருந்து விளையாட்டுத் திறன் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை ஊனமுற்றவர்களுக்கான சிறப்பு தடகளப் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சிகள் அளிக்கிறோம்' என்று பெருமையுடன் கூறுகிறார், கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தின் இயக்குநர் டாக்டர் பூர்ண சந்திரிகா.

இந்தப் புதிய முயற்சி குறித்த அவரது பேட்டி:

மனநலம் பாதிப்புக்குள்ளான நோயாளிகளில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளித்து, பாரா அதலெடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கச் செய்வது ஒரு அசாதாரணமான முயற்சி. இதன் துவக்கப்புள்ளி எது?

எங்கள் மனநலக் காப்பகத்தில் மணிகண்டன் என்பவர் சில மாதங்களுக்கு முன்னால் கணக்காளராகப் பணிக்குச் சேர்ந்தார். அவர், ஓர் மாற்றுத் திறனாளி. ஆனாலும், தன்னம்பிக்கை மிகுந்தவர். மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றவர். அவர்தான், இந்த ஐடியாவைச் சொன்னார். நம் காப்பகத்தின் அகநோயாளிகளில் இருந்து விளையாட்டு ஆர்வம், உடல் தகுதி உள்ள சிலரைத் தேர்ந்தெடுத்து உரிய பயிற்சி அளித்தால், அவர்களை சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கச் செய்ய முடியும். அவர்களாலும் வெற்றி பெற்று பதக்கங்கள் வெல்ல முடியும் என்று கூறினார். அவரது ஆர்வமும், நம்பிக்கையும் எங்களை இதில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கத் தூண்டின.

பயிற்சி நபர்களை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?

மணிகண்டனுடன் இணைந்து எங்கள் காப்பகத்தின் டாக்டர் சங்கீதா ஒவ்வொரு அகநோயாளிகள் வார்டுக்கும் போனார்கள். அங்கே உடல் பலம் கொண்ட, விளையாட்டில் ஈடுபடுத்தக் கூடிய வாய்ப்பு கொண்டவர்களை அடையாளம் கண்டு பிடித்தோம். அவர்களுக்குப் புரியும் வகையில் இந்த விளையாட்டுப் பயிற்சி பற்றி விளக்கிச் சொன்னோம். தமிழ்நாடு பாராஒலிம்பிக் சங்கத்தினரும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.

எந்த இடத்தில் விளையாட்டுப் பயிற்சி அளிக்கிறீர்கள்?

கீழ்ப்பாக்கத்தில் உள்ள எங்கள் வளாகத்திலேயே மைதானம் போல ஒரு பகுதி உண்டு. ஆனால், பல்லாண்டுகளாக அந்தப் பகுதி பயன்படுத்தப்படாமலேயே இருந்த காரணத்தால் புதர்கள் மண்டிக் கிடந்தது. எங்கள் ஊழியர் ஒருவரின் கணவர் மைதானத்தில் இருந்த புதர்களை வெட்டி, சீரமைத்துக் கொடுத்தார். இப்போது அங்கேதான் விளையாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆண்கள் மட்டும்தானா? இல்லை பெண்களும் இதில் பங்கேற்கிறார்களா?

இருபாலினத்தவரும் பங்கேற்கிறார்கள். ஆண்களைப் போலவே பெண்களும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. தற்போது பதினான்கு பேர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். அவர்கள் அனைவரும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு உடல் வலிமை பெற்றிருக்கிறார்கள். அதே சமயம் அவர்களுக்கு இதில் ஆர்வமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த விளையாட்டுப் பயிற்சி துவங்கிய பிறகு, அவர்களிடம் பாசிடிவான சில மாற்றங்களையும் நாங்கள் கவனிக்கிறோம்.

என்னென்ன விளையாட்டுகளில் பயிற்சி தருகிறீர்கள்?

இப்போதைக்கு, குண்டு எறிதல் (ஷாட் புட்), 400 மீட்டர் ஓட்டம், 1500 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி இருக்கிறோம். இவர்கள் எல்லாம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான சிறப்பு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பார்கள். அவற்றில் வெற்றி பெறுகிறவர்கள் தேசிய அளவில் பங்கேற்பார்கள். அங்கே வெற்றி பெறுகிறவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவின் கீழும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் பங்கேற்கலாம்.

விரைவில், இன்னும் அதிக அளவில் தகுதியானவர்களை அடையாளம் கண்டு, பயிற்சி அளித்து, அடுத்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் தடகள வீரர்களை போட்டிக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கிறோம். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை நமது முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருவதால், எங்கள் திட்டங்களுக்கு அரசின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்பது நிச்சயம்.

அரசு மனநலக் காப்பகத்தில் இப்படிப்பட்ட முயற்சிகள் நடப்பது பாராட்டுக்குரியது. உங்களது விளையாட்டு வீரர்கள் மாநில அளவிலான தடகளப் போட்டியில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்று உங்களைப் போலவே பலரும் இந்த முயற்சிக்கு வாழ்த்துகிறார்கள் என்றார் டாக்டர் பூரண சந்திரிகா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com